...

"வாழ்க வளமுடன்"

01 ஜூலை, 2011

குழந்தைகளின் ஆளுமையையே முடக்கிவிடுகிறது :(

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


குழந்தைகள் சாப்பிட அடம் பிடித்தாலோ அல்லது அழுகையை நிறுத்துவதற்கோ, பயமுறுத்தி அவர்களின் அழுகையை நிறுத்த முயலாதீர்கள். குழந்தைகளுக்கு அழுகை என்பது ஓர் உணர்ச்சி வெளிப்பாடு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.


பிறந்தவுடன் குழந்தை அழுகிறது. இதனால் அதற்கு உயிருள்ளது என்று அறிந்துகொள்கிறோம். அதன்பிறகு வரும் அழுகையினால் பசி, வலி போன்ற உணர்வுகளை தாய் புரிந்து கொள்கிறார். சிலர் குழந்தைகளை கிள்ளி, அடித்து அதன் உடலுறுப்புகளை இம்சித்து அழ விட்டு வேடிக்கை பார்த்து ரசிப்பார்கள். இப்படிப்பட்டவர்களை குழந்தையின் அருகில் விடவ கூடாது.


இன்னும் சிலர் குழந்தைகளை மேலே தூக்கிப்போட்டு விளையாடுதல், ஆலவட்டம் சுற்றி விளையாடுதல் என்று விபரீதமாக கொஞ்சுவார்கள். இவைகளை குழந்தைகள் ரசிப்பதாக நினைத்துக் கொண்டு பலமுறை விளையாடும் போது குழந்தைகள் மனதில் இனம் புரியாத பய உணர்வு ஏற்பட்டு திடீரென அழத் துவங்கி விடும்.


சாப்பிட மறுக்கும் குழந்தைகளை நாய் கடிக்கும், பூனை கடிக்கும், மாடு முட்டும் எனச் சொல்லி பயம் காட்டி சாப்பிட வைக்கும் தாய்மார்கள், தங்கள் குழந்தைகளின் ஆளுமை வளர்ச்சியை முடக்கி விடும் முட்புதர்கள் ஆவார்கள். இப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும். குழந்தைப்பருவ மன பயங்கள், ஒருவரது ஆளுமையையே முடக்கி விடுகிறது என்பது உளவியல் உண்மையாகும்.


இருட்டறையில் பூட்டப்பட்டு துன்புறுத்தப்படும் குழந்தைகள்குற்றவாளிகளாகி விடுகிறார்கள். பய உணர்வுடன் வளரும் குழந்தைகள் தன்னம்பிக்கையை இழந்து விடுகிறார்கள். பயங்காட்டி உணவு உண்ண வைக்கப்படும்குழந்தைகள் உணவையே வெறுத்து வளர்கின்றன.


அடிபட்டு, துன்புறுத்தப் பட்டு வளர்க்கப்படும் குழந்தைகள் பெற்றோர், உறவினர்களை வெறுத்து வளர்கின்றனர். குற்ற உணர்வுடனேயே வளர்ந்து, பெரியவர்களானதும், மனித உறவுகளை வெறுத்து, பிளவுபட்ட மனங்களுடன் மனநோயாளிகளாகி விடுகின்றனர்.


குழந்தைகளை இயல்பாக வளரவிட வேண்டும். அதிகமான பயம் காட்டி வளர்த்தால் தன்னம்பிக்கை இழப்பு, வெறுப்பு உணர்வு, பிளவுபட்ட ஆளுமைக் கூறுகள், குறைபட்ட பழகும் பாங்கு என பல்வேறு அவலங்களுக்கு ஆளாகின்றனர்.


அன்புடன், பாசத்துடன், அரவணைப்புடன், தன்னம்பிக்கை வளரும் விதமாக குழந்தைகளை வளர்த்துங்கள். மன பயத்துடனே வளரும் குழந்தைகள் பள்ளி, கல்லூரி, பணியிடங்களில் இயல்பாக நண்பர்கள் குழுவில் கலந்து கொள்ளாமல் தனித்து அல்லது விலகியே இருப்பார்கள். விளையாட்டு, வீர தீரச்செயல்களில் ஈடுபட தயங்குவார்கள்.


வாலிபப் பருவத்தில் ஊக்கப் படுத்தினாலும் பய உணர்வு காரணமாக பின்தங்கியே இருப்பார்கள். கல்வியில் முன்னிலை வகித்த மாணவர்கள்கூட பய உணர்வால் தன்னம்பிக்கை இழந்து பின் தங்கி விடுகின்றனர். இவர்களுடைய ஆளுமையும் சிதைந்து விடுகிறது. ஆகவே, பிள்ளைப் பருவத்திலேயே பயமின்றி வாழ குழந்தைகளைப் பழக்க வேண்டும்.


அச்சம்தவிர் என்ற சொல்லுக்கேற்ப, தைரியமாக வளர குழந்தைகளுக்கு பெற்றோர் ஆதரவளிக்க வேண்டும். "செய்யாதே" என தடை செய்வதே பயத்தின் முதல்படி. ஆனால் "ஜாக்கிரதையாக இதைச் செய்" என்று சொன்னால் குழந்தைகள் மனதில் பாதுகாப்பு உணர்வு ஏற்படும்.


ஆகவே குழந்தைகளை பய உணர்வு காட்டி வளர்க்காதீர்கள். குழந்தைகளுக்கு நல்ல நடத்தைப் பண்புகளை பக்குவமாக கற்றுத் தந்து, நல்ல சந்ததியை உருவாக்குங்கள்.-

- பா.ராமநாதன்***
நன்றி தினகரன்
***"வாழ்க வளமுடன்"

இந்த நாள் இனிய நாளாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "