...

"வாழ்க வளமுடன்"

19 ஏப்ரல், 2010

தயிர் வேண்டாமே... மோர் குடிங்க! ( கோடை & கத்திரி பருவம் )

சித்திரை மாதம் பிறந்து விட்டது; கோடை ஆரம்பித்துவிட்டது. ஆனால், கத்திரி பருவம் வருவதற்கு முன்னரே, வெயில் கொளுத்துகிறதே, இந்த கோடை காலத்தை எப்படி சமாளிக்க போகிறோம் என, புலம்புகிறீர்களா? இதோ உங்களுக்காக சில டிப்ஸ்கள்...


டிப்ஸ்கள்:

*

1. கோடை காலத்தில் அதிக வெப்பம் காரணமாக, உடலில் ஏற்படும் நீரிழப்பை ஈடு செய்ய, அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

*

2. நுங்கு, கிர்ணிப் பழம், தர்பூசணி போன்ற பழங்கள், இளநீர், பிரஷ்ஷான பழச்சாறுகள் ஆகியவற்றை சாப்பிடலாம்; முடிந்த வரை குளிர்பானங்களாக குடிப்பதை தவிர்ப்பதன் மூலம் ஜலதோஷம் போன்றவை ஏற்படாமல், காத்துக் கொள்ளலாம்.

*

3. தயிராக சாப்பிடாமல், அதில் நிறைய தண்ணீர் கலந்து மோராக சாப்பிட வேண்டும். கறிவேப்பிலை மற்றும் கல் உப்பை சேர்த்து பிசைந்து, அதன் சாறு மோரில் இறங்கும் படி செய்ய வேண்டும். பின், அதில், பெருங்காயத் தூள் சேர்த்து குடித்தால், உடலுக்கு மிகவும் நல்லது.

*

4. தினமும் இரண்டு வேளை குளிக்க வேண்டும். அப்போது தான், கோடை காலத்தில் அதிகளவு வியர்ப்பதால் ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்க முடியும்.

*

5. இறுக்கமான உடைகளை அணிவதை தவிர்த்து, தளர்வான பருத்தி ஆடைகள் அணியலாம். இதனால், கசகசவென இருக்கும் உணர்வு தவிர்க்கப்படும்; குறிப்பாக, உள்ளாடைகளும், பருத்தியாலானவற்றை அணிவது, மிகவும் நல்லது.

*

6. உடல் சூட்டின் அளவை குறைக்க <உதவும் வைட்டமின் சி எலுமிச்சம்பழத்தில் காணப்படுகிறது. எனவே, எலுமிச்சம் பழச்சாறு அருந்துவது உடலுக்கு மிகவும் நல்லது.

*

7. வெயில் காலத்தில் உடல் சூடு அதிகரிப்பதால், ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்க, உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும் வெள்ளரிக்காய், பூசணிக்காய், முள்ளங்கி போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை அதிகளவு உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

*

8. வெயிலில் வெளியே செல்வதாக இருந்தால், குடை எடுத்துச் செல்லுங்கள். இதனால், அதிகளவு சூரிய வெப்பம், உடலை தாக்குவதை தவிர்க்கலாம்.

*

9. பகல் வேளைகளில், வீட்டில் அறைகளின் ஜன்னல் கதவுகளை நன்கு திறந்து, இயற்கையான வெளிக் காற்று வரும் வகையில் வைக்க வேண்டும். வீட்டின் கதவு மற்றும் ஜன்னல் ஆகியவற்றிற்கும், பருத்தியாலான திரைச்சீலைகளைப் பயன்படுத்தலாம்.

*

10. கோடை காலத்தில் உண்டாகும் உதடு வெடிப்பை போக்க, பாலாடை தேய்க்கலாம்.

***

கோடை காலத்தில், உடலின் நீர்ச்சத்து வற்றாமல் பராமரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டால், பல்வேறு பிரச்னைகளில் இருந்து, நம்மை காத்துக் கொள்ளலாம்.

***
இப்படி ஒரு நல்ல தகவல் தந்த தினமலர் நாளிழதுக்கு மிக்க நன்றி.
*

நன்றி தினமலர்.

***
"வாழ்க வளமுடன்"


ஸ்ட்ராபெர்ரி பழத்தின் மருத்துவ குணங்கள்

‘பெரி’ குடும்பத்தின் ‘ராணி’ எனப்படும் இந்த சிவந்த நிறப் பழங்கள் ‘வைட்டமின் சி’ சத்து மிகுந்தது. இரும்புச் சத்தும் மிகுந்துள்ளது. பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மையும் இருப்பதால் மருத்துவ குணம் கொண்டது எனப் போற்றப்படுகின்றது.



கோடைகாலத்தில் வெயிலை விட பழங்களின் விலை கடுமையாக உயர ஆரம்பிக்கும். ஏனெனில் தோலின் வறட்சியைப் போக்கவும், இழந்த நீர்ச்சத்தை ஈடு செய்யவும், செல் அழிவை தடுக்கவும், மலச்சிக்கல் ஏற்படாமல் காக்கவும் ஏராளமான நார்ச்சத்துகள் நிறைந்துள்ள பழங்களே நமக்கு பெரிதும் உதவுகின்றன.

*

பழங்களில் செல் அழிவை தடுக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் பொருட்கள் ஏராளமாக நிறைந்துள்ளன. இவை பிரி ரேடிக்கல் எனப்படும் புற்றுநோயை உருவாக்கும் ஒழுங்கற்ற செல்கள் ரத்தத்தில் கலப்பதை தடுக்கின்றன. ஆன்டி ஆக்சிடன்ட் என சொல்லப்படும் செல் அழிவை தடுக்கும் தன்மை சில குறிப்பிட்ட பழங்களிலேயே அதிகமாக காணப்படுகின்றன. இந்த தன்மை நிறைந்துள்ள பழங்கள் பெரும் பாலும் ரத்த சிவப்பு நிறத்தில் காணப்படுவது இதன் சிறப்புக்கு அடையாளமாகும்.

*

நாம் உட்கொள்ளும் பழம் ருசியாக இருந்தால் மட்டும் போதாது. அதில் நம் உடலுக்கு தேவையான பலவிதமான அத்தியாவசிய சத்துக்களும் நிறைந்திருக்க வேண்டும். உதாரணமாக பிற உணவுகளில் குறைந்தளவே காணப்படும் அல்லது அரிதாக காணப்படும் வைட்டமின்-பி6, வைட்டமின் கே, அயோடின், செலினியம், ஆர்ஜினின் போன்ற பொருட்கள் உணவுப் பாதையை சீர் செய்து, ரத்த செல்களை ஒழுங்கு செய்து, தைராய்டு போன்ற நாளமில்லா சுரப்பிகள்சீராக இயங்கவும், நுண்ணிய ரத்தக்குழாய்களில் அடைப் பின்றி ரத்த ஓட்டம் செல்லவும் பயன்படுகின்றன. இவை குறைபாடாக நமக்கு கிடைப்பதால் பலவித பற்றாக்குறை நோய்கள் உண்டாகின்றன. ஆகவே நாம் இது போன்ற சிறப்பான சத்துகள் நிறைந்த பழங்களை அடிக்கடி உட் கொண்டால் பலவிதமான நோய்கள் நம்மை அணுகாமல் காத்துக் கொள்ளலாம்.

*

ஏராளமான வைட்டமின்களையும், பலவகையான தனிக சத்துக்களையும், ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ள வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தரம் உயர்ந்த ஸ்ட்ராபெர்ரி பழங்கள், கோடைக்காலத்தில் பெருமளவு விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றின் மருத்துவ குணத்திற்காக இவை பெருமளவு பயன்படுத்தப்படுகின்றன. சுகந்த மணத்தையும், கருஞ்சிவப்பு நிறத்துடன், கண்களை பறிக்கும் அழகுடன் காணப்படும் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் உலகம் முழுவதும் பயிர் செய்யப்படுகின்றன. தரம் உயர்ந்த இயற்கை முறையில் பயிர் செய்யப்பட்ட ஸ்ட்ராபெர்ரி பழங்கள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.



பெரோஜிரியா அனானாசா என்ற தாவரவியல் பெயர் கொண்ட ரோசேசியே குடும்பத்தைச் சார்ந்த ஸ்ட்ராபெர்ரி பழங்களில் வைட்டமின் சி, தையமின், ரிபோபேளேவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், சையனோகோபாலமின், வைட்டமின் ஏ, டோக்கோபெரால், வைட்டமின் கே போன்ற வைட்டமின்களும், செம்பு, மாங்கனிஸ், அயோடின், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற தனிமங்களும், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக நிறைந்து உள்ளன.

*

5 பழங்களில் 250மிலி அளவில் தயார் செய்து குடிக்கும் பழச்சாற்றில் 40 கலோரிகள் சத்தும், பல்வேறு வகையான பிளேவனாய்டுகளும் நமக்கு கிடைக் கின்றன. இதிலிருந்து எடுக்கப்படும் நறுமணப் பொருளானது சாக்லேட், கேக், ஐஸ்கிரீம் போன்றவை தயார் செய்ய உணவு னூட்டியாகவும், நிறமூட்டியாகவும் பயன்படுகிறது.

*

ஸ்ட்ராபெர்ரி பழங்கள் 10, உரித்த ஆரஞ்சு சுளைகள் 10, பழுத்த, உரித்த நாட்டு வாழைப்பழம் 4, சீனி அல்லது நாட்டுச்சர்க்கரை 50 கிராம் ஆகியவற்றை எடுத்து தேவையெனில் நெல்லிக்காய் சாறு 100 மிலி சேர்த்து நன்கு அரைத்து பழச்சாற்றை பிழிந்து வைத்துக்கொள்ள வேண்டும். தேவையெனில் சற்று நீர் சேர்த்து இளக்கமாக அரைக்கலாம். ஏராளமான ஊட்டச்சத்துகள் நிறைந்த இந்த பழச்சாறு ஒரு சிறிய குடும்பத்திற்கு போதுமானதாகும். கோடைகாலத்தில் அடிக்கடி இந்த பழச்சாற்றை குடித்து வந்தால் தோல் வறட்சி நீங்குவதுடன், வேதிப்பொருட்களால் செய்யப்பட்ட குளிர்பானங்களை உட்கொண்டு பல் எனாமல் தேய்ந்து, பற்களில் கறை ஏற்படுவதையும் தவிர்க்கலாம். மேலும் ஸ்ட்ராபெர்ரியிலுள்ள அமிலங்கள் பல் கறையையும் நீக்குகின்றன.


*

இந்தப் பழங்கள் மிகவும் சுவையும், மணமும் கொண்டவை. சருமத்தைச் சுத்தப்படுத்தும், ஜீரண உறுப்புகளை சுத்தப்படுத்தும் தன்மையும் உண்டு. அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும்.

*

அழகுச் சாதனப் பொருள் தயாரிப்பில் இப்பழங்களின் மணமும், குணமும் உபயோகிக்கப்படுகின்றன. பருவப் பெண்கள் பரு மற்றும் வடுக்களைத் தடுக்க தங்கள் உணவில் இப்பழங்களைச் சேர்த்துக் கொள்ளுதல் நலம் பயக்கும்.

*

சருமத்தை இலேசாக வெளுக்கச் செய்யும் தன்மை இப்பழங்களுக்கு உண்டு. அதனால் முகத்திலுள்ள பருக்களின் வடுக்களை விரைவில் மறையச் செய்யும் குணம் கொண்டது. வெயிலினால் ஏற்படும் சருமப் பராமரிப்பிலிருந்தும், சூரியக்கதிர் வீச்சிலிருந்தும் சருமத்தைப் பாதுகாக்கும்.


***





by-டாக்டர்.ஜெ.ஜெயவெங்கடேஷ்,


மதுரை.



*


http://www.dinamalar.com/Supplementary/hdmalar_detail.asp?news_id=350&dt=03-07-10



*





நன்றி டாக்டர்.


நன்றி தினமலர்.






***




"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "