...

"வாழ்க வளமுடன்"

06 ஜனவரி, 2011

குழந்தை முன் செய்யக் கூடாதவைகள் :(

1)குழந்தைகளை நல்ல விதமாய் வளர்ப்பது பெற்றோர் கையில் தான் உள்ளது. குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத, சொல்லக்கூடாத சிலவற்றைத் தவிர்த்தால், அவர்கள் நல்ல பிள்ளைகளாக வளர்வது நிச்சயம்.



2)கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

*

3)குழந்தைகள்முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, "உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே' என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும் போது, "அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்' என்று சொல்ல நேரிடலாம்.

*

4)சிறு குழந்தைகளை மிரட்டும் போது, "கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்' போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.

*

5)சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், "அப்பாகிட்டே சொல்லிடாதே' என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, ungkaL கணவர் முன்னிலையிலேயே "அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்' என்று மிரட்டும்.

*

6)குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. "உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே' போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.

*

7) குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும்
கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. " கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்' என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.

*

8)உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.

*

9)குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.

*

10)படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, "பாசிடிவ் அப்ரோச்' இருக்க வேண்டும். "நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்' என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். "நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்' என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.

*

11)குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.


***
nnRi iNaiyam
***


"வாழ்க வளமுடன்"

ருத்ராட்சத்தை யார் அணியலாம் ?

புதனுடைய அம்சமாக, அதாவது சிவனுடைய அம்சமாக கருதப்படுவது ருத்ராட்சம். சிவனின் அங்கத்திலிருந்து விழக்கூடிய வேர்வை என்றெல்லாம் சில புராணங்கள் சொல்கின்றன.



ருத்ராட்சத்திற்கு இயல்பாகவே மருத்துவ குணங்கள் நிறைய உண்டு. ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். சிலரெல்லாம் போகம் செய்யும் போது இருக்கக்கூடாது என்றெல்லாம் சொல்வார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் கியைடயாது, போகிக்கும் போது கூட இருக்கலாம். தீட்டு என்பது கிடையாது.


ஆனால், ருத்ராட்சத்தை தங்கம் அல்லது வெள்ளியில் கட்டி அணியும் போது, மந்த்ரா உபதேசம் பெற்று, குருநாதர் கையில் இருந்து வாங்கி அணியும் போதெல்லாம் மிகவும் நேமமிஷ்டையுடன் இருக்க வேண்டும். அதாவது தீட்சையாக தரும் ருத்ராட்சத்தை பெற்றுக்கொண்டு தவறான செயல்கள், பேச்சுவார்த்தைகளில் ஈடுபடக் கூடாது.


ஆண், பெண் என இருபாலருமே ருத்ராட்சத்தை அணியலாம். பெண்களுக்கு இருக்கக்கூடிய இயல்பான இடர்பாடான நாட்களில் கூட அணிந்திருக்கலாம். அது ஒன்றும் குரோதம் கிடையாது. வட இந்தியப் பெண்கள் சிலர் தலையில் போடும் கிளிப்புகளில் கூட ருத்ராட்சத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தக்கூடிய சக்தியும், மன அழுத்தத்தை குறைக்கும் சக்தியும் ருத்ராட்சத்திற்கு உண்டு. பக்கவாதத்திற்கு முந்தைய காலகட்டத்தில் ருத்ராட்ச மாலையை உடம்பு முழுவதும் தேய்த்துவிடும் போது அது சரியாகிறது.


இன்றைக்கும் தரமான, பழமைவாய்ந்த சித்த வைத்தியர்கள் கால் முடக்கம், கை முடக்கம் இதற்கெல்லாம் மருந்தும் கொடுத்து, ருத்ராட்ச மாலையால் கை, கால்களை உருவி மருத்துவம் அளிக்கும் வழக்கமெல்லாம் இன்றைக்கும் இருக்கிறது.


சீரான இரத்த ஓட்டங்கள், கால் மறத்துப் போகாமல் இருப்பதற்கு போன்றவற்றிற்கும் ருத்ராட்சம் பயன்படும். ருத்ராட்சத்தின் சிறு துளியை இழைத்து உள்ளுக்கு சாப்பிடும் போது நோய் எதிர்ப்புச் சக்தியெல்லாம் அதிகரிக்கிறது. உடலிற்கு ஒரு மினுமினுப்பைக் கொடுக்கும். இதுபோன்ற மருத்துவக் குணங்கள் ருத்ராட்சத்திற்கு உண்டு. அதனால் யார் வேண்டுமானாலும் அணியலாம்.


***
நன்றி இணையம்
***


"வாழ்க வளமுடன்"

வேறு வேலை மாறபோகிறிர்களா - எனர்ஜி டாபிக் :)

முன்குறிப்பு :-



வேலைன்னு வந்துட்டா நான் வெள்ளைக்காரனா மாறிடுவேன்னு சொல்ற மாதிரி, பதிவெழுதுறதுன்னு வந்துட்டா பர்காதத்தா மாறுவதே நம் வழக்கம். பதிவை பொறுத்தவரை எந்த வரையறையும் இல்லாமல் எல்லா அலப்பறையும் கொடுத்து கொண்டுதானிருக்கிறேன்.


இருந்தாலும் எனது நண்பர் ஒருவர் துறை சார்ந்த விஷயங்கள் தமிழில் அவ்வளவாக இல்லை. எனவே நாம் செய்யும் வேலை தொடர்பான சில விஷயங்களை பகிர்ந்துக் கொள்ளலாமே என்று சொன்னார்.அவருடன் பேசிகொண்டிருந்தபோது கிடைத்த விசயங்களை , என் கருத்துகளையும் கலந்து எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன் .


இங்கே நான் எழுதிருப்பது , எப்போது வேலை மாற வேண்டும், அதற்கு என்னென்ன செய்யலாம், நல்ல ரெஸ்யும் எப்படி தயாரிப்பது போன்ற பல்வேறு தலைப்புகளில் எனக்கு தெரிந்தவற்றை எந்த மொக்கையோ, நகைச்சுவையோ இல்லாமல் கொஞ்சம் சீரியஸாக அலசலாம். மீண்டும் ஒருமுறை இப்படி ஒரு பதிவெழுத தூண்டிய நண்பருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.



அவர் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் டீம் லீடாக வேலை செய்கிறார். வேலையில் படு கெட்டி என கடந்த 5 வருடமாக பெயர் வாங்கியிருக்கிறார். சான்றிதழும் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அவர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பதவி உயர்வு மட்டும் கிடைப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை. அவரின் நண்பன் மூலம் நாங்கள் அறிமுகமானோம். வேலைப் பற்றியே அதிகம் பேசினார். பேச்சுவாக்கில் எப்படியும் இன்னும் 2 வருடங்களில் மேலாளர் ஆகிவிடுவேன் என்றார்.


அவர் வேலை செய்வது ஒப்பீட்டளவில் சின்ன நிறுவனம் தான். இவர் டீமில் இருக்கும் மேலாளர் நகர்ந்தால்தான் இவருக்கு அந்த சீட் என்பது அவர் பேசியதில் புரிந்தது. காத்திருக்க அவரும் தயாராகவே இருக்கிறார்.


அவர் பரவாயில்லை. மற்றொரு நண்பரின் நிலை இன்னும் மோசம். ஒரு பன்னாட்டு தானியங்கி நிறுவனத்தில் நல்ல வேலையில் இருக்கிறார். இருந்தார் என படித்து விடுங்கள். மனதுக்கு பிடித்த வேலை. கையல்ல, பாக்கெட் நிறைய சம்பளம் என இருந்தவரை சென்ற மாதம் ஆட்குறைப்பில் மேன்ஷனுக்கு அனுப்பி விட்டார்கள். ஆம். வேலைப் போன கஷ்டத்தில அவர் வீட்டுக்குப் போகவில்லை. நண்பர்களின் மேன்ஷனில்தான் இருக்கிறார். அவரது நிறுவனத்தில் ஒரு வாரம் மட்டுமே நேரம் தந்திருக்கிறார்கள் .


அதற்குள் வேறு வேலை எப்படி தேடுவது? அவரிடம் அவரது புதிய பயோடேட்டா அப்போது கைவசமோ, கணிணிவசமோ இல்லை. கடைசியாக 3 வருடங்கள் முன்பு தயார் செய்ததுதான் . எப்படியும் ஒரு 15 வருடம் இங்கே இருக்கலாம் என்று முடிவு செய்திருந்ததாக சொன்னார்.


மேற்கண்ட சம்பவங்களில் இந்த இருவர் நீங்கள் தான் என்றால் மேற்கொண்டு தொடருங்கள். நீங்கள் இல்லை என்றால் இன்னொரு முறை படித்து இந்த சூழ்நிலை உங்களுக்கு வரக்கூடுமா இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.


பெரும்பாலானவர்கள் இருக்கும் வேலையில் பெரிய பிரச்சினை என்று வரும்வரை வேலை மாறுவது பற்றி யோசிப்பதும் இல்லை. அதற்காக தயாராவதும் இல்லை. கடைசிக்கட்ட நெருக்கடியில் கிடைக்கும் இன்னொரு சுமாரான வேலையில் சேர்ந்து பின் அதிலும் அரைமனதுடனே காலம் கழிக்கிறார்கள். வேலை மாற்றம் என்பது தவறேயில்லை, முறையாக இருக்கும் வேலையில் இருந்து மாறினால். எனவே எப்போதும் நம்மை அடுத்த மாற்றத்திற்கு தயாராக வைத்திருப்பது அவசியமாகிறது. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி ஒன்று சொல்வார்கள் “Love your job. Not your company.Because you never know when it will stop loving you”.


சரி. நம்மை எப்படி தயாராக வைத்திருப்பது? அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்? என்ற கேள்விகள் இந்நேரம் உங்களுக்கு எழுந்திருந்தால் மகிழ்ச்சி. நீங்கள் சரியான திசையில் பயணிக்கிறீர்கள். உங்கள் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பதில் சொல்லும் முன்பு சில விஷயங்களை உறுதிப்படுத்திவிடுவது நல்லது. எந்தத்துறை வேலையென்றாலும் ஒரு நிறுவனத்தில் குறைந்தது 3 - 5 வருடங்கள் வேலை செய்வது ஒரு ஸ்திரத்தன்மையை கொடுக்கும்.



அப்படியில்லாமல் அடிக்கடி வேலை மாறுவதை Job hopping என்பார்கள். அது உங்கள் சந்தை மதிப்பை குறைத்துவிடும். ஏதேனும் பிரத்யேக காரணத்தினால் மாறியிருந்தால் வேறு. அடிக்கடி மாறாமால் இருப்பது நல்லது என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது கேள்விகளுக்கு வருவோம்.

***

கீழ்கண்ட கேள்விகளுக்கு உங்களுக்கு நீங்களே பதில் சொல்லிப் பாருங்கள்.

1) அடுத்த 2 வருடங்களில் என்னவாக இருக்க வேண்டும் என்ற திட்டம் ஏதாவது வைத்திருக்கிறீர்களா?


2) கடைசியாக எப்போது உங்கள் Cvஐ புதுப்பித்தீர்கள்?


3 உங்கள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு தெரியுமா? புதியதாக போட்டியாளர்கள் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்பதை அறீவிர்களா?


4) உலகளவில், தேசிய அளவில் நீங்கள் ஈடுபட்டிருக்கும் துறையின் வளர்ச்சி மதிப்பீடு பற்றி தெரியுமா?


5) உங்கள் பாஸ்போர்ட் காலாவதி தேதி என்ன?


இதற்கான பதில்கள் உங்களை நீங்களே சுயபரிசோதனைக்கு உட்படுத்தத்தான். இதில் 3வது மற்றும் 4வது கேள்விகளுக்கு ஸ்திரமான பதில் தெரியாதவர்கள் இணையம் மூலமாக அல்லது தெரிந்தவர்கள் மூலமாகவோ தகவல் தெரிந்து வைத்திருப்பது நலம் . என்னால் முடிந்தளவு தகவல்கள் நானும் சேகரித்து தருகிறேன்.


மேலும் நம் ஈகரை நண்பர்களும் தங்களுக்கு தெரிந்த / அனுபவங்களை இங்கே பதிவிட்டால் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் குறிப்பாக HR துறையில் உள்ள நண்பர்கள் .

**

பின்குறிப்பு :-

இது வெறும் வேலைவாய்பு செய்திகளை மட்டும் சொல்லும் பகுதியாக இல்லாமல் நல்லவேளைக்கு நம்மை தயார்படுத்தும் பகுதியாக இருக்கவேண்டும் என்பதே எனது விருப்பம் அதனால் தான் இந்த பதிவு



***
நன்றி பாலா கார்த்திக்
***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "