...

"வாழ்க வளமுடன்"

12 ஜூன், 2011

பெண்கள் ஆடை, அணிகலன் அலங்காரம் = part - 2

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


நகைகள்:

நீண்ட கழுத்து, வட்ட முகம், நீண்ட காது மடல் என்று கழுத்து, காது பகுதிகளின் அமைப்பை வைத்தே என்னென்ன நகை பொருத்தமாக இருக்கும் என்பதைத் தெளிவாக சொல்லிவிடமுடியும். உங்கள் முக வடிவமைப்பு, கழுத்தின் நீள அகலத்தை பொருத்து நகைகளைத் தேர்ந்தெடுங்கள். பொதுவாகவே ஒல்லியும், உயரமுமாக இருப்பவர்களுக்கு கழுத்து சற்று நீளமாகத்தான் இருக்கும்.


அகலமான நெக்லஸ், சோக்கர், குந்தன் ஜூவல்லரி ஆகியவை அணியலாம். கூடவே ஒரு நீளமான செயின் அணியுங்கள்.


குட்டை கழுத்து பகுதி உள்ளவர்கள் ஒற்றைக்கல் நெக்லஸ் அல்லது தடிமனான சங்கிலியில் டாலர் வைத்து அணியலாம்.


குண்டாகவும், குள்ளமாகவும் இருப்பவர்களுக்கு கழுத்து நீளம் குறைவாக இருக்கும். பட்டையான நெக்லஸ், சோக்கர் போட்டால் அது கழுத்தை இன்னும் அகலமாகக் காட்டுவதுடன் இருக்கிற கொஞ்சநஞ்ச இடத்தையும் அடைத்துக் கொள்ளும்.


மெல்லிய சங்கிலி, சின்ன சைஸ் முத்து, மெல்லியதான பீட்ஸ் இவற்றை ப்ளெய்ன் ஆகவோ அல்லது சிறிய டாலருடனோ அணிந்து கொண்டால் எடுப்பாக இருக்கும். மெல்லிய, நீண்ட செயின்கள் நிச்சயம் உங்களுக்கு அழகுதான். டாலர் இல்லாமல் அணிந்தால் இன்னும் அழகாக இருக்கும்.


கழுத்தைச் சுற்றி செயின் படர்ந்திருக்கும் பகுதிகளில் அதிக கற்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். கழுத்துக்கு கீழே தொங்கும் செயின் பகுதியில் கற்கள் பதித்திருந்தால் தப்பில்லை. அதிக நகைகள் போடாமல் மெல்லிய செயின், சிறிய காதணிகள் போட்டால் அம்சமாக இருக்கும்.


அகலமான நகைகளைத் தவிர்த்துவிடுங்கள். உடலின் நிறத்துக்கு ஏற்ப உடை மற்றும் நகைகளைத் தேர்ந்தெடுங்கள்.

***

சிவப்பு நிறம் உள்ளவர்கள்:

ரூபி, பச்சை, நீலம் போன்ற கற்கள், மணிகள் உள்ள நகை அணியலாம்.

**

கறுப்பு நிறம் உள்ளவர்கள்:

வைர நகைளை அணிந்தால் அவ்வளவு அழகாக இருக்கும்!


முத்து வகைகள், வெள்ளை, பிளாக் மெட்டல் நகைகள் உங்களுக்கு மிகமிக அழகாக பொருந்தும்.


அதிகப்படியான நகைகளை அணியவேண்டாம். சின்னதாக ஐந்து கல் பதித்த அமெரிக்கன் டயமண்ட் தோடு, மெலிதான செயினில் பதக்கம், ஒரு துளி தெறித்தது போன்ற ஒற்றைக் கல் மூக்குத்தி போன்றவை உங்கள் முக அழகை பிரகாசமாகக் காட்டும்.


முத்து செட்டும் அம்சமாக இருக்கும்.
தங்கத்திலும் பட்டை பட்டையாக இல்லாமல் மெல்லிய நகைகள் அணியுங்கள்.


ஒல்லியானவர்கள நிறைய வளையல் அணிந்து கொள்ளுங்கள்.
பட்டையான ஜரிகை போட்ட புடவைகள் அணிந்து கொண்டால், நகை சற்று சிம்பிளாக இருக்க வேண்டும்.


சிம்பிள் புடவையாக இருக்கும்பட்சத்தில் குந்தன், டெம்பிள் போன்ற நகைகள் அணியலாம். இது எல்லோருக்குமே பொருந்தும். டல் ஒயிட், க்ரே, ஸ்கை ப்ளூ, பேபி பிங், அல்ட்ரா லைட் ப்ரவுன் போன்றவை எந்த டிசைன் நகைகளுக்கும் பொருத்தமான ஆடை வண்ணங்கள்.


கால்களின் கணுக்கால் பகுதி ஒல்லியாக இருந்தால் பட்டையான கொலுசு போடுங்கள்.


குண்டான கால்களுக்கு மெல்லிய ஒரே சலங்கை வைத்த கொலுசு அழகாக இருக்கும்.


நடுத்தரமான கால்களுக்கு மெல்லிய, பட்டையான கொலுசு இரண்டுமே பொருத்தமாக இருக்கும்.


மெல்லிய விரலுக்கு பட்டையான சலங்கை வைத்த மெட்டி அழகாக இருக்கும்.


விரல்கள் கொழுகொழுவென்று இருந்தால் மெல்லிய மெட்டிகள் போடலாம். குறிப்பாக இரண்டாவது விரலில் மெட்டி போட்டால் அழகுக் கூடும்

***

குள்ளமானவர்களுக்கான உடை புடவை:

கம்பீரத்தையும் கண்ணியத்தையும் கலந்துகட்டி வெளிப்படுத்துவது புடவை மட்டுமே.


டார்க் கலர்களைவிட வெளிர் நிறங்களே அழகு.


தலைப்பின் நீளம் குறைவாக இருப்பது நல்லது.


காட்டன், பேப்பர் சில்க், ஆர்கண்டி, டஸ்ஸர் சில்க் புடவைகளைத் தவிர்க்கவும்.


கையளவு பார்டர் உள்ள புடவை அணியுங்கள். நேர் கோடுகள் உள்ள ஆடைகளை அணிவதாலும் உயரத்தை அதிகமாக்கிக் காட்டலாம்.
சாய்வான கோடுகள் உள்ள ஆடை அணியவேண்டாம். இன்னும் குட்டையாகக் காட்டும்.


இயன்றவரை பிளெய்ன் புடவை, சிறிய பூக்கள் உள்ள புடவை கட்டுங்கள். பேபி பிங்க், லோ வயலட், வெளிர் நீலத்தில் வெள்ளைப்பூக்கள்... இதெல்லாம் ஓகே.


ஷிபான், ஜார்ஜெட், மைசூர் சில்க், பின்னி சில்க், பிரின்டட் சில்க் டிசைன் புடவைகள் உங்களுக்காகவே உருவாக்கப்பட்ட ரகங்கள். இதில் ஜரிகை ரகங்களை விழாக்களுக்கு அணியலாம். இது காஞ்சிப் பட்டுக்கு ஈடுகொடுக்கும்.


சின்னச் சின்ன பூக்கள், டிசைன்கள் உள்ளதை எடுங்கள். பெரிய பூக்கள், பெரிய டிசைன் வேண்டாம். சின்ன பார்டர் போதும், அதிக டிசைன் தேவையில்லை.


குண்டாக இருப்பவர்கள் குஜராத்தி டைப்பில் புடவை உடுத்தவேண்டாம். மேலும் குண்டாக காட்டும். ஒரு பக்க கரை போட்ட புடவை அழகு. இரண்டு பக்க ஜரிகை போட்ட புடவை கட்ட ஆசையாக இருந்தால் சிறிய பார்டர் ஓகே. குள்ளம், பருமனை குறைத்துக் காட்டும். டார்க் நிற உடைகளை அணியுங்கள். ஒல்லியான தோற்றத்தைக் கொடுக்கும். லோ ஹிப் வேண்டாம்.


ஒல்லியாக சற்று குள்ளமாக இருப்பவர் அழுத்தமான கலர்களில் உடை அணிவதைத் தவிருங்கள். (ஆனால் கருப்பு, மெரூன் போன்றவை யாருக்கும் பொருந்தும்) சின்ன பார்டர் புடவையைத் தேர்ந்தெடுங்கள். கங்கா, யமுனா சேலை போல் ஒரு பக்கம் டிசைன் உள்ள புடவை சற்று பூசினாற்போலவும் உயரமாகவும் காட்டும். பிரைட் டிசைன், பெரிய பூ டிசைன்களை தவிர்த்துவிடுங்கள். புடவைகளில் நீளவாட்டு கோடுகளும், நீள வாட்டு டிசைன்களும் உங்களுக்குப் பொருத்தம்.

***

சுடிதார்:

வயதை குறைத்துக்காட்டும் டிரஸ் என்றால் அது சுடிதார், சல்வார்-கமீஸ்தான். வயது, உருவ அமைப்பைப் பார்த்து துணி எடுத்துக் கொள்வது நல்லது.

பிளெய்ன் துணியில் மிகச் சிறிய டிசைன், கழுத்து, ஓரங்களில் மெல்லிய எம்ப்ராய்ட்ரி டிசைன், சைடு ஸ்லிட்டில் டிசைன் அம்சமாக இருக்கும்.

நீளவாக்கில் கோடு, மெல்லிய கொடி போன்ற டிசைன் உயரமாக காட்டும்.


ஜரிகை வைத்து தைத்தால், சல்வாரின் முன் பக்க முழு நீளத்துக்கும் வைத்துக் கொள்ளுங்கள். ஒன்று அல்லது ஒன்றரை இன்ச்சுக்கு மேல் வேண்டாம்.


குண்டாக இருப்பவர்கள்:


ஸ்லிட்டில் ஜரிகை வைத்து தைக்காதீர்கள். அது சுற்றளவை கூட்டி காண்பிக்கும்.


எந்த டிசைனும் மெல்லியதாக இருக்கட்டும். அடர்த்தி டிசைன்களே வேண்டாம்.


முழுக்கை டாப்ஸ், மிகவும் குறைந்த கையுள்ள டாப்ஸ் உங்களுக்கு பொருந்தாது. நடுத்தர நீளம், முக்கால் கை பொருந்தும்.


ரொம்ப டைட் வேண்டாம். லூசாகவும் வேண்டாம். இடுப்பு மட்டும் சற்று லூசாக இருக்கட்டும். அது மடிப்புகளை மறைக்கும்.


அகலமான சல்வார், பஞ்சாபி பைஜாமா உங்களுக்கு சரிவராது. காலை ஒட்டின, அகலம் குறைவான சல்வார் நன்றாகப் பொருந்தும்.


சுருக்கம் வைத்த பைஜாமா வேண்டாம். இடுப்பு அளவை மேலும் அதிகரித்துக் காட்டும்.


மேல்புறம் சுருக்கம் கொடுத்துத் தைக்காமல், ஒரு ஜாண் பட்டி கொடுத்து அதற்கு கீழிருந்து சல்வார் வரும்படி தைத்து கொள்ளுங்கள். இடுப்பு இளைத்த மாதிரி காட்டும்.


பார்டர் அழுத்தமான டிசைன், திக் லைன் போட்ட மெட்டீரியல் வேண்டவே வேண்டாம்.


காட்டன் லைனிங் கொடுத்து தைக்கக்கூடிய லேஸ், ஷிபான் துணிகள் வேண்டாம். குண்டாக காட்டும். ஜீன்ஸ் அணிவதை தவிர்த்து விடுங்கள். குளிர் பிரதேசங்களுக்கு போனாலும் ஓவர்கோட் இருக்குதே.

***

ஒல்லியாக இருப்பவர்களுக்கான உடை:

இப்போதைய ஃபேஷனான ஷார்ட் டாப்ஸ் உங்களுக்கு நன்றாகப் பொருந்தும். பளீர் நிறமாகத் தேர்ந்தெடுங்கள்.


குட்டை ஸ்லீவ் அல்லது மீடியம் ஸ்லீவ் ஓகே.


ஸ்லீவ் லெஸ் டாப்ஸ் உங்களை உயரமாகக் காட்டும்.


லூசான சல்வார், பேன்ட் போன்ற சல்வார், ஜீன்ஸ் உங்களுக்குப் பொருந்தும்.


காட்டன் துப்பட்டா என்றால் ஒரு பக்கமாக, தோள் பட்டைக்கு வெளியில் வராதபடி அணிந்து கொள்ளுங்கள்.


ஷிபான் துப்பட்டாவாக இருந்தால் இரு பக்கமாக மார்பு வரை இறக்கி போடுங்கள்.


ஜீன்ஸ், டி-ஷர்ட் உங்களுக்குப் பிரமாதமாக இருக்கும். டைட் ஜீன்ஸ் என்றால் லூஸ் ஷர்ட் நல்லது. அகலமாகக் காட்டும். லூசான ஜீன்ஸ் என்றால் ஷார்ட் டாப்ஸ் போடலாம்.


**

கண்களை அழகாக காட்ட

சென்சிடிவான பாகம் கண் ஆகும். தூக்கமின்மை, கடின உழைப்பு, சத்துக்குறைவு, கண்களுக்கு அதிக வேலை.... இவற்றால் கருவளையம் வந்து கண் அதன் ஜீவனையே இழந்துவிடும்.


கண்களுக்கு நிறைய ஓய்வு கொடுங்கள்.


குறைபாடுகள் இருந்தால் உடனே பரிசோதித்து உரிய சிகிச்சை பெறுங்கள். பார்வை பாதித்தால் வயதான தோற்றம் தருமே என்று கண்ணாடி போடாமல் இருக்காதீர்கள். கண்ணாடியும் அழகுதான். வட்ட முகத்துக்கு மெல்லிய சிறிய சதுர வடிவ கண்ணாடி பொருத்தமாக இருக்கும். ஓவல் முகத்துக்கு சற்று அகலமான சதுர கண்ணாடி பொருந்தும். நீள முகத்துக்கு வட்ட கண்ணாடி பொருந்தும்.


கண்களை சிறிதாகவும் பெரிதாகவும் மாற்றிக் காட்ட ஐலைனர் பயன்படுத்துங்கள்.


பெரிய கண் உள்ளவர்கள் மெல்லிய கோடாகவும், சிறு கண் உடையவர்கள் அழுத்தமாகவும் ஐலைனர் போடவேண்டும்.


விழி துருத்திக் கொண்டு இருப்பது போல் தோற்றம் உள்ளவர்கள் பழுப்பு நிற ஐஷேடோ பயன்படுத்தலாம்.


கருமையான விழி உடையவர்கள் புருவத்துக்கும் இமைக்கும் நடுவில் சாக்லெட், நீலம், பச்சை நிற ஐஷேடோ பயன்படுத்தலாம்


முக அழகிற்கு தகுந்த மாதிரி புருவத்தை மாற்ற
முகத்தின் ஒட்டு மொத்த அழகைக் காட்டுவதில் புருவத்துக்கு ஈடு இணையில்லை என்றே சொல்லலாம். வில் போன்ற புருவம், அடர்த்தியான புருவம், தடிமனான புருவம், கீற்று போன்ற புருவம் என்று வகைப்படுத்தி கூறலாம். முகத்துக்கு ஏற்ப, கண்களுக்கு ஏற்ப புருவத்தை ட்ரிம் செய்து கொள்ளுங்கள்.
குறுகிய நெற்றி உள்ளவர்களுக்கு புருவங்களுக்குள் இடைவெளி அதிகம் இருக்கட்டும்.


நீண்ட நெற்றி உள்ளவர்களுக்கு புருவங்களுக்குள் அதிக இடைவெளி தேவையில்லை.


ஓவல் முகம் உள்ளவர்களுக்கு புருவம் சிறு வளைவுடன் இருந்தால் வசீகரமாக இருக்கும்.


அகன்ற மூக்கு உள்ளவர்கள் புருவங்களின் இடைவெளியை அதிகப்படுத்தாதீர்கள்.


புருவங்கள் நெருங்கி இருந்தால் முகம் குறுகி, கண்கள் சிறிதாக தெரியும்.


சதுர முகம் உள்ளவர்கள் பெரிய வளைவாக பிறை வடிவில் மாற்றிக் கொள்ளுங்கள். முகம் ஓவல் வடிவமாகத் தெரியும்.


புருவத்தின் முடிவு மிகவும் கீழ் நோக்கி இருந்தால் வயதான தோற்றம் தரும். மாற்றிக்கொள்ளுங்கள்.


கருப்பு நிறம், அழகிய முகம் உள்ளவர்கள் புருவத்தை சரி செய்து கொள்ளவேண்டிய அவசியமே இல்லை.


வட்ட முகம் உள்ளவர்கள் புருவம் கீழ் நோக்கி வருவதுபோல் அமைத்துக் கொள்ளவும்.


நீண்ட, ஓவல் முகம் உள்ளவர்கள் சிறிய புருவத்தை அமையுங்கள்.


நீளமூக்கு உள்ளவர்களுக்கு புருவம் தழைத்தே இருக்கட்டும். தினம் விளக்கெண்ணெய் தடவுங்கள். முடி நன்றாக வளரும்.


வீட்டிலேயே புருவத்தை சீர் செய்பவர்கள் பிளேடால் எடுக்காதீர்கள். அதிகமாக வளர ஆரம்பித்துவிடும். எதிர்த்திசையில் எடுத்தால் முரட்டுத்தனமாக வளரும். அடுத்த முறை நூலினால் எடுக்கும்போது அந்த இடத்தில் ஆழப்புள்ளி உண்டாகலாம்.


உடைக்கு மேட்சான நிறத்தில் ஐ ஷேடோ எடுங்கள். கண்களை மூடி புருவம் மீது ப்ரஷ்ஷால் தடவுங்கள்.


***



"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "