...

"வாழ்க வளமுடன்"

20 மே, 2011

பயணம் செய்பவரின் கனிவான கவனத்திற்கு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

விடுமுறை விட்டாச்சு. டூர், பிக்னிக் என்று ஊர், உறவு, வீடு, நண்பர் வீடு என நகர்ந்து விட வேண்டியதுதான். புறப்படுவதற்குமுன், என்ன செய்யணும். எதை தூக்கணும், யாருகிட்ட சொல்லணும் என்று ஒரு ரவுண்டு போவோமா!

பயணச்சீட்டின் ஜெராக்ஸை எடுத்து வைத்து கொள்ள வேண்டும். சரியான நேரத்தில் கை கொடுக்கும். பயணத்தில் “மூத்த குடிமக்கள்’ இருந்தால், அவர்களின் வயது சான்றிதழை கண்டிப்பாக எடுத்து செல்ல வேண்டும்.


நீண்ட நாள் டூர் என்றால், நகைகள், பத்திரங்கள், பணம் போன்றவற்றை வங்கி லாக்கரில் வைத்து விட வேண்டும். குறைந்த நாள் போனமா வந்தமா டைப் டூர் என்றால் தினப்படி வந்து செல்லும் பால்/ பேப்பர்க்காரர்கள், வீட்டு பணி செய்பவர்களுக்கு கூட தெரிவிக்காமல், அக்கம் பக்கத்து ஒரு வீட்டில் பார்த்துக்க சொல்லிவிட்டு, சுருக்க போய் உடனே வந்துவிடலாம்.


நகை, வாட்ச், உடை, காலணி…

வீட்டில் இருக்கும் நகை எல்லாவற்றையும் போட்டு கொண்டு “வா திருடா, திருட வா’ன்று நாமே இன்விடேலின் கொடுக்க கூடாது.


மிக மெல்லிய, சிறிய,குறைந்த நகைகள் அணியலாம். பிளாட்டினம், பிளாஸ்டிக் ஐயிட்டங்கள் ஸ்மார்ட்டாய் காட்டும். ஒரு நாளிலேயே பல அணிகளை அணிய முடியும். விலை உயர்ந்த வாட்ச்கள் வேண்டாம்; வாட்ச்சே வேண்டாம்.


“செல்’லில்தான் டையம் இருக்கே. குட்டீஸ் கையில் பொம்மை வாட்ச்களை பார்த்து கொள்ளலாம். எவ்வளவுக்கெவ்வளவு விலையுயர்ந்த பொருட்கள் இல்லாமல் இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு டூரை மகிழ்ச்சியால் அனுபவிக்கலாம். அதிக எடையில்லாத, காட்டன் உடைகளை எடுத்து செல்லலாம்.
பெண் குழந்தைகள் என்ன வயது என்றாலும் உடலின் பெரும்பகுதி துணியால் மூடப்பட்டு இருக்கட்டும். மிடி, பிராக், எல்லாம் போடும்போது முட்டி வரை கூட உள்ளாடை போடலாம். வீணாய் தீயவர்களை தூண்ட வேண்டாமே.காலணிகளை லகுவானதாய் இருக்கட்டும்.


முக்கியமாய் ஆளுக்கொரு “செல்’ கண்டிப்பாய் இருக்கணும். அவரவர் அதை பொறுப்பாக வைத்து கொள்ள வேண்டும். பக்கத்து வீட்டு நண்பரிடம் வீட்டின் வெளிசாவியின் டூப்ளிகேட்டையும், குடும்பத்தாரின் செல்போன் நம்பர்களையும் கொடுத்து வையுங்கள்.


வீட்டு கதவை பூட்டும் முன் காஸ் சிலிண்டரையும் எல்லா சுவிட்ச்சுகளையும் ஆப் செய்திருக்கிறீர்களா… கதவுகளை சரியாக தாழிட்டிருக்கிறீர்களா… என்பதை சரி பாருங்கள். ஒருவருக்கு இருவராய் செக் செய்தா, சந்தேகம் தோன்றாது. வெளிப்புறமாக சில ஜோடி செருப்புகளையும், காய வைத்த நிலையில் சில துணிகளையும் விட்டு வைப்பது நல்லது.


ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இருதய நோய் போன்ற பிரச்னை இருப்பவர்கள் டாக்டரை சந்தித்து உங்கள் பயண விவரங்களை சொல்லி அவரின் ஆலோசனையும் அவருடைய செல்போன் எண்ணையும் வாங்கி கொள்ளுங்கள். எல்லா மருந்துகளும் எல்லா ஊரிலும் கிடைக்காது என்பதால், மருந்துகளையும் டோசேஜ் விவரங்களையும் எடுத்து செல்ல மறக்காதீர்கள்.


முதலுதவி விஷயங்கள்:

தைலம், குளூக்கோஸ் எடுத்து செல்ல வேண்டும். வலி நிவாரணம் களிப்பு, பஞ்சு, பேண்ட் எய்டு முதலியவற்றையும் உங்கள் பேக்கில் கட்டாயம் இருக்க வேண்டும்.


மற்ற பொருட்கள்!

எண்ணெய், பற்பசை, டூத் பிரஷ், சோப், பவுடர், ஷாம்பு, கொசுவர்த்தி, டார்ச் லைட், கத்திரிக்கோல், சிறிய கத்தி, கோப்பை, “செல்’ சார்ஜர் ஆகியவற்றையும் எடுத்து செல்ல மறக்க வேண்டாம்.
சோப் எடுத்து செல்ல வேண்டாம். கொழகொழப்பாய் இருக்கும். அதற்கு பதில் லிக்விட் சோப் எடுத்து செல்லலாம். அனைவரும் பயன்படுத்தலாம்.



பரிசு!

தங்கப் போகிற உறவினர் வீடுகளுக்கு பயனுள்ள பரிசுகளுடன் செல்லுங்கள். குழந்தைகள் இருந்தால் அந்த வீட்டிற்கு போகும்போது விளையாட்டு பொருட்கள்… வேலைக்கு செல்கிறவர்களுக்கு, அவர்கள் தயாரிக்க நேரமில்லாமல் சிரமப்படும் தோசை மிளகாய் பொடி, வத்தல், வடகம்… வயதானவர்களுக்கு பூஜையறை பொருட்கள், சுவாமி படங்கள் என்று கொடுத்து அன்பை தெரிவியுங்கள்.


முகவரி!

போகும் இடத்து உறவினரின் முகவரியை தெளிவாய் எழுதி பாத்திரமா வைத்துக் கொள்ளுங்கள். பஸ், டாக்ஸி, ஆட்டோ, நடை எப்படி வர வேண்டும் என, கேட்டு கொள்ளுங்கள். அவர்களிடையே ஆட்டோ அல்லது சொந்த வண்டி எடுத்து வந்து பிக்-அப் செய்ய சொல்வது மிகவும் சிறப்பான வழியாகும்.


உணவு!

உணவு விஷயத்தில் இவனுக்கு இந்த காய் பிடிக்காது. அவளுக்கு இந்த பானம் பிடிக்காது என்றெல்லாம் அடம் பிடிக்காமல் அட்ஜஸ்ட் செய்து போங்கள். உங்கள் உணவு முறையே இதுவரை பழகி இருப்பீர்கள். மாறுதலுக்கு பாதி நாட்கள் அவர்கள் உணவு முறையை ஏற்று உண்ணுங்கள். அதேபோல உங்கள் உணவு முறையை பாதி நாட்கள் கடைபிடியுங்கள். இரு குடும்பத்திற்கும் இன்ப மாறுதாய் இருக்கும். அதோடு சமையல் வேலைகளில் பங்கு கொள்ளுங்கள். விரைவாய் சமையல் வேலை முடியும். ஆண்கள், காய்கறிகள் பர்சேஸ் செய்யலாம். ஒருநாள் மாறுதலாய் ஓட்டலில் சாப்பிடலாம். நீங்கள் போன ஊரின் சிறப்பு உணவு பொருட்களை ருசித்து மகிழுங்கள்.


பணிபார்வை!

அவர்கள் வீட்டில் வேலைக்கு ஆள் இருந்தால், அதை உங்களின் ஏகபோக உரிமையாக கருதி, உங்கள் வேலைகளை ஏவாதீர்கள். உங்கள் வரவு யாருக்கும் தொந்தரவாய் இருக்க கூடாது.


டிவி!

ஊருக்கு போய் இந்த பெட்டி முன் டேரா போட்டு விடாதீர்கள். எல்லாரும் பார்க்க வேண்டிய இடங்களை பார்த்து விட்டு, வீட்டில் இரவு வேளையில் ரிலாக்ஸாக இருக்கும்போது குழு விளையாட்டு விளையாடலாம்.



வாங்கி வாருங்கள்!

காய்கறி, பேப்பர், பால், வாட்டர் கேன், இப்படி அத்தியாவசிய பொருட்கள், குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் என நிறைய வாங்கி தாருங்கள்.



மறக்காதீங்க!

நாம டூர் அடிக்கும்போது நம்ம வீட்டை பார்த்து கொள்கிற வேலையை செய்யும் நண்பர் வீட்டுக்கும் கண்டிப்பாய் பரிசு பொருட்கள் வாங்க வேண்டும்.


கேமரா!

கண்டிப்பாய் இது வேண்டும். ஒவ்வொரு கணமாய் பதிவு செய்யுங்கள். ஊருக்கு போனபின் பிரிண்ட் போட்டு, ஆல்பமாக்கி உங்கள் உறவினருக்கு அனுப்புங்கள்.



கடிதம்!

என்னதான் வாயாற நன்றி சொல்லி, பெரியவர்களை நமஸ்கரித்து விடை பெற்றிருந்தாலும், விருந்துண்ட வீடுகளுக்கு எழுத்து மூலம் ஒரு நன்றி கடிதம் அனுப்புங்கள். அதில் அவர்களை அவசியம் உங்கள் வீட்டுக்கு வருமாறு அழையுங்கள்.


கோவில்!

நீங்கள் செல்லும் கோவில்களின் வழிபாட்டு முறைகளை தெரிந்து கொள்ளுங்கள். உதாரணமாக, கேரளா கோவில்களில் ஆண்கள் வேட்டியும், பெண்கள் புடவையும் அணிய வேண்டும் என்பது கட்டாயம். சுடிதாரோ, பேண்ட்டோ அணிந்து சென்றால் அனுமதி கிடையாது. அதோடு, வழிபாட்டு நேரம் சிறப்பு வழிபாட்டு தினங்கள் பற்றியும் அறிந்து போக வேண்டும். தரகர்களிடம் மாட்டி கொள்ளாதீர்கள்.


வலை!

சுற்றுலாவிற்கென அரசாங்கம் முதல் தனியார் வரை ஏகப்பட்ட வெப்சைட் உண்டு. சிறப்பான சைட்களை விசிட் அடித்து, ஒரு அழகான பிளானை போட்டு போகலாம். இன்டர்நெட்டின் மூலம் எல்லா விவரமும், உதவியும், ஆலோசனையும் பெறலாம்.


போர்டு!

தீயில் கை வைக்காதே; ரெயிலில் ஓரமாக நிற்காதே எங்களோடே இரு, தூரப்போகாதே; இப்படிப்பட்ட வாசகங்கள் டூரின்போது நிச்சயமாய் பெற்றோர்களால் சொல்லப்படும். வாண்டுகளோ சொன்னபடி நடக்காமல் வாலை அவிழ்க்கும். எச்சரிக்கை, ஆபத்து போன்ற போர்டு உள்ள இடத்தில் குழந்தைகளை அழைத்து செல்ல வேண்டாம். என்ன தவறு செய்தாலும் குட்டீஸை அடிப்பது பப்ளிக்காக திட்டுவது என அநாகரிகம் வேண்டாம். தனியே, மிக இனிமையாக நிலைமையை விளக்கவும்.


பணம்!

பயணத்துக்கு தேவையான பணத்தை மொத்தமாக எடுத்து செல்லாமல், டிராவல் செக் ஆகவோ பண அட்டையாகவோ வைத்து கொள்ளவும். 1000 ரூபாய்க்கு 100,50,20,10 மற்றும் சில்லறை காசுகளையும் வைத்து கொள்ளவும். அவசர தேவைகளுக்கும், சிறிய தேவைகளுக்கும் இவை உதவும்.


சில முக்கிய ஆலோசனைகள்!

உங்கள் பயணம் பற்றிய தெளிவான குறிப்பை, நம்பிக்கையான அண்டை வீட்டாரிடம் சொல்லி விட்டு செல்லவும். கோபம், குற்றம் கண்டுப்பிடித்தல், மட்டம் தட்டுதல், மனதை நோகடித்தல் போன்ற குணங்களை தவிர்த்து அனைவரிடமும் இனிமையாக பேசி பயணத்தை மகிழ்ச்சியாக்கி கொள்ளுங்கள்.உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். அரை வயிறு நிரப்பினாலே போதும். செல்லும் இடத்தின் சீதோஷ்ண நிலைக்கேற்ப எளிய உடைகளை எடுத்து செல்லவும். நிறைய நகைகள் வேண்டாம். புதிய மனிதர்களிடம் மிக கவனமாய் பழகவும். புதியவர் கொடுக்கும் திண்பண்டத்தை குழந்தைகளை உண்ண வேண்டாம் என அறிவுறுத்துங்கள்.

காசு இல்லை என்று சொல்லாமல், குழந்தைகளை மிக சந்தோஷமாய் வைத்துக் கொள்ளுங்கள். டூரின் சந்தோஷத்தில் அவர்கள் 10 மாதங்கள் சந்தோஷமாக கல்வி கற்க வேண்டும். ஓகே!


***
thanks vayal
***




"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "