...

"வாழ்க வளமுடன்"

23 மார்ச், 2011

ஓய்வாசனம் விளக்கமும் பயன்களும்: பாகம் - 9

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
*

பயன்கள்


யோகாசனங்களைச் செய்கின்றபோது ஜானுசீர்சாசனம் அதன்பின்னர் பச்சிமோஸ்தான் ஆசனம் என்று வரிசை மாறாமல்தான் செய்யவேண்டும். பயிற்சியாளர்கள் சீக்கிரம் யோகப்பயிற்சிகளை முடித்துக்கொண்டு அவசரமாகப் புறப்பட வேண்டியிருந்தால் அப்போது ஜானுசீர்சாசனத்தைச் செய்யாமல் பச்சிமோஸ்தான் ஆசனத்தை மட்டும் மூன்றுமுறை செய்துவிட்டுப் புறப்படலாம். ஆனால் ஜானுசீர்சாசனத்தை மட்டும் செய்துவிட்டுப் பச்சிமோஸ்தான் ஆசனத்தை ஒரு தடவையாவது செய்யாமல் விடக்கூடாது.

இரண்டு ஆசனங்களுக்கும் பொதுவான பயன்கள் ஒன்று தானென்றாலும் ஜானுசீர்சாசனத்தைச் செய்கின்றபோது உடம்பின் இடப் பக்கத்துக்கும், வலப்பக்கத்துக்கும் மாற்றி மாற்றிப் பயிற்சி கொடுக்கிறோம். அத்துடன் விட்டுவிட்டால் அது நிறைவளிக்க முடியாது. ஆகவே பச்சிமோஸ்தான் ஆசனத்தை அடுத்ததாகக் கட்டாயம் செய்தால்தான் வயிற்றின் உள்ளுறுப்புக்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சியும், உள்ளுறுப்புக்களும் சமன்பாட்டுக்கு வரும்.

இவ்விரண்டு ஆசனங்களாலும் தொந்தி வேகமாகக் கரைகிறது. வயிற்றுத் தசைகள் வலிமை பெறுகின்றன. வயிறு, இடுப்பு, தொடைகள், கண்டக்கால்கள் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தசைகள் திண்மை பெறுகின்றன. கால் நரம்புகளுக்கு வலிமை கிட்டுகிறது. தண்டுவடம் சுறுசுறுப்பாகப் பணியாற்றுகிறது. கணையம், கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை ஆகிய உறுப்புக்கள் வளம்பெறுகின்றன.

மானுட தேகத்தில் கல்லீரல் ஒரு அற்புதமான உறுப்பு. அதிமுக்கியமாக நமது உடல்நலம் பேணிக் காக்கப்பட வேண்டுமானால், நமது உடம்பில் ஒவ்வொரு உறுப்பும் செம்மையாக இயங்கவேண்டும். அதிலும் கல்லீரலானது வளமாகவும் வலிமையாகவும் இருக்கவேண்டும். கல்லிரலைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொண்டால், நாம் அதைப் பேணிக்காக்க வேண்டியதன் அவசியத்தை நன்றாகப் புரிந்துகொள்ளலாம்.

நமது உடம்பிலுள்ள உறுப்புக்களிலேயே கல்லீரலுக்கு மட்டும்தான் இரண்டு வழிகளில் இரத்தம் கிடைக்கிறது. மகாதமனியில் இருந்துவரும் கல்லீரல் தமனி, ஆக்சிஜன் சேர்ந்த இரத்தத்தைக் கல்லீரலுக்கு எடுத்துவருகிறது. குடல் பகுதியிலிருந்து ஊட்டச்சத்து மிகுந்த இரத்தம் போர்ட்டல் சிரைவழியாகக் கல்லீரலுக்கு வருகிறது. இப்படி வரும் இரத்தத்தைக் கல்லீரல் ஒரு நிமிடத்துக்கு ஏறத்தாழ ஒன்றரை லீட்டர் அளவுக்கு வடிகட்டி அனுப்பிக் கொண்டேயிருக்கிறது. அப்போது இரத்தத்திலுள்ள ஊட்டச் சத்துக்களில் உடம்பின் அன்றைய பணிக்கு வேண்டியதுபோக உபரியாக உள்ள ஊட்டச்சத்துக்களைத் தன்னகத்தே சேமித்து வைத்துக் கொள்கிறது. எப்போதாவது நமது உடம்பில் ஏதேனும் ஒருவகை ஊட்டச்சத்துக் குறையுமானால், அப்போது கல்லீரல் தன்னகத்தே சேமித்து வைத்துள்ள ஊட்டச்சத்தைக் கொடுத்து ஈடுசெய்கிறது.

நமது இரத்தத்திலுள்ள சிவப்பணுக்களின் ஆயட்காலம் ஏறக்குறைய 120 நாட்களாகும். அதுவரை அவை இரத்தத்தோடு சுழன்றுகொணடு இருக்கும். நாட்பட்ட, தளர்ந்த சிவப்பணுக்களை நமது வயிற்றிலுள்ள மண்ணீரல் சிதைத்து அழித்துவிடுகிறது. ஓவ்வொருநாளும் நமது உடம்புக்குள்ளே கோடிக்கணக்கில் சிவப்பணுக்கள் இறக்கின்றன. இந்த சிவப்பணுக்களிலே உள்ள ஹிமோகுளோபினைக் கல்லீரல் சிதைமாற்றம் செய்து பிலிரூபினாக மாற்றுகிறது. இந்தப் பிலிரூபின்தான் பித்தத்தக்கு நிறத்தைத் தருகிறது. கல்லீரல் பணியாற்றுகின்றபோது இதன் செல்கள் இயற்கையாகவே சேதமாகின்றன. இவ்வாறு சேதமடைகின்ற செல்களுக்குப் பதிலாகப் புதிய செல்களைக் கல்லீரலே படைத்துக்கொள்ளும் அபாரசக்தியைக் கல்லீரல் இயற்கையிலே பெற்றிருக்கிறது.

*

பித்தப்பை:-

கல்லீரல் செல்கள் பித்தநீரைச் சுரக்கின்றன. ஒரு நாளைக்குச் சராசரியாக நமது தேவைக்கு ஏற்றபடி வேண்டியளவு பித்தநீரைக் கல்லீரலின் செல்கள் சுரக்கின்றன. பித்தநீர் கொழுப்பை ஜீரணிக்க உதவுகிறது. கல்லீரல் பாதிக்கப்பட்டால் பித்தநீரிலுள்ள நிறமியான பிலிரூபினின் அளவு அதிகரிக்கும். இந்த அளவானது இரட்டிப்பாகின்றபோது மஞ்சட்காமாலை வருகிறது. மஞ்சட்காமாலை வருவதற்குப் பலகாரணங்கள் இருந்தாலும் அதற்கான தலையாய காரணம் கல்லீரல் பலம் குன்றுவதேயாகும. மகோதரம் என்ற நோயின் காரணத்துக்கும் கல்லீரலே முக்கியமானதாகும். ஆகவே கல்லீரல், பித்தப்பை இரண்டும் அத்துடன் அவற்றின் இயக்கமும் சீராக இருக்கவேண்டியது நமது ஆரோக்கியத்திற்கு அவசியமாகும்.

*

கணையமும் சர்க்கரைநோயும்:-

இன்று உலகிலே ஏராளமானவர்கள் சர்க்கரை நோயினால் கஷ்டப்படுகிறார்கள். விஞ்ஞானமும், மருத்துவமும் எவ்வளவு வளர்ந்தாலும் சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டும் இன்னமும் விடிவு பிறக்கவில்லை. இனீமேலாவது மருத்துவம் ஏதாவது ஒரு முறையைக் கண்டறிந்து சொல்லுமென்று உறுதியாகச் சொல்வதற்கில்லை. ஏனென்றால் சர்க்கரை நோயென்பது கணையம் என்ற சுரப்பி செய்ல் குன்றுவதால் வருகின்றது. எனவே இதற்கு யார்தான் என்னசெய்ய முடியும்.

நமது உணவுப் பொருட்களில் அவற்றின் இயற்கைத் தன்மைக்கு ஏற்பக் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ சர்க்கரை அடங்கியிருக்கிறது. உட்கொள்ளுகின்ற உணவு இரைப்பையிலிருந்து சிறுகுடலுக்குச் செல்லுகின்றபோது கணையம் கணையநீரைச் சுரந்து உணவிலுள்ள அமிலத்தன்மைகளை மாற்றுகிறது. கணையத்திசுக்கள்(லங்கர்காண்) இன்சுலின் என்னும் ஹார்மோனைச் சுரந்து இரத்தத்திலுள்ள சர்க்கரையை ஜீரணிக்கச் செய்கிறது. கணையம் சுரக்கும் இன்சுலினின் அளவு குறைந்தாலோ, சுரக்காதுபோனாலோ அதற்கேற்றபடி இரத்தத்தில் சர்க்கரையின் அளவும் கூடுகிறது. இந்தக் கூடுதல் சர்க்கரையைச் சிறுநீரகங்கள் பிரித்துச் சிறுநீர்மூலம் வெளியேற்றுகின்றன.

ஜானுசீர்சாசனம், பச்சிமோஸ்தான் ஆசனம் இரண்டும், பக்கத்துக்குப் பக்கமாகவும், நேர்படவும் பித்தப்பை, கணையம், சிறுநீரகம் ஆகிய உறுப்புக்களுக்குச் செயல் வேகத்தையும் ஆரோக்கியத்தையும் தருகின்றன. இதனால் கல்லீரல், பித்தப்பை சம்மந்தப்பட்ட நோய்களும் சர்க்கரை நோயும் அடியோடு அகலுகின்றன. சில சமயங்களில் பித்தப்பையில் பித்தக்கற்கள் உருவாவதுமுண்டு. பித்தக்கற்கள் சிலவோ, பலவோ அல்லது ஒரே கல்லாகவோ உருவாகும். இப்பித்தக்கற்களை இவ்விரண்டு ஆசனங்களும் இலகுவாகப் பிதுக்கிப் பித்தப்பையிலிருந்து வெளிளேற்றிச் சிறுகுடலுக்குள் தள்ளிவிடும். சிறுகுடல் அந்தக் கற்களை நகர்த்திக் கொண்டேபோய், மலக்குடலுக்குள் தள்ள, பித்தக்கல்லானது மலத்துடன் வெளியேறி விடுகிறது. எனவே ஆப்பரேசன் இல்லாமலே பித்தக்கற்களை வெளியேற்றுவதற்கு இவ்வாசனங்கள் எவ்வளவு துணைபுரிகின்றன என்பது புலனாகின்றது.

இதைப்போலவே சர்க்கரைநோய் சம்மந்தப்பட்ட வகையிலும் இவ்வாசனங்கள் செயலிழந்துபோன கணையத்தை இதமாகப் பிசைந்து, நல்ல இரத்த ஓட்டத்தைக்கொடுத்து மெல்லத்தட்டி எழுப்பி அதன் பணியான இன்சுலின் சுரப்பை அதற்கு நினைவுட்டிப் பணியாற்ற வைத்து சர்க்கரை வியாதியை அடியோடு போக்குகின்றன. அத்துடன் கணையத்துக்கு வரக்கூடிய கணையக்கட்டிகள், கணையப்புற்று, கணையஅழற்சி போன்ற இடர்களிலிருந்து கணையத்தைக் காப்பாற்றி நம்மையும் காப்பாற்றுகின்றன. பெண்களுக்கும் மேலே குறிப்பிட்ட எல்லாப் பலன்களும் கிட்டுவதோடு, பிரத்தியேகமாக அவர்களுக்கு அடிவயிற்றுச் சரிவையும், குடல் பிதுக்கத்தையும் தடுத்து உதவுகின்றன. கருப்பை, ஓவரி, ஓவரிக் குழாய்கள் ஆகியவற்றிலுள்ள குறைபாடுகள் அகன்று மாதவிலக்கு சம்மந்தமான உபாதைகள் தவிர்க்கப்படுகின்றன. பெண்மலட்டுத் தன்மை அகலுகிறது. வெள்ளை வீழ்தல் என்று சொல்லப்படும் கொடிய நோய் அடியோடு அகலுகிறது.

இந்த ஆக்கத்தின் மூலமாக சர்க்கரை நோயை அடியோடு தொலைத்து, பூரண ஆரோக்கியத்தைத் தருகின்ற ஆசனங்களை விபரித்துள்ளேன். இதுவரை சொல்லப்பட்ட பன்னிரெண்டு ஆசனங்களையும் இனிச் சொல்லவிருக்கும் ஒரு ஆசனத்தையும் சேர்த்து பதின்மூன்று ஆசனங்களையும் ஒரு சர்க்கரை நோயாளி பயிலத் தொடங்கிவிட்டால் அவரது நோய் பூரணமாகக் குணமாகிவிடும் என்பது உறுதி. சர்க்கரைநோய் இல்லாதவர்கள் கூட இந்தப் பதின்மூன்று ஆசனங்களையும் செய்துவந்தால் இதுவரை கண்டறியாத ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் பெறுவார்கள்.

***

ஓய்வாசனம்:-

ஆசனப்பயிற்சிகளை முடித்துக்கொண்டு சற்று ஓய்வெடுத்துக் கொள்ளுகின்ற இந்த ஆசனத்துக்கு ஓய்வாசனம் என்று பெயர் வந்தது. யோக சாஸ்திரத்தில் இந்த ஆசனம் சாந்தி ஆசனம் என்று சொல்லப்படுகிறது. சிலர் இதைச் சவாசனம் என்று கூறுவார்கள். சவம் என்றால் பிணம் என்று அர்த்தம். சவத்தைப்போல கைகால்களை அசைக்காமல் இருப்பதால் இதனை இப்பெயர் கொண்டு அழைக்கிறார்கள் போலும். சவம் என்ற சொல்லைப் பாவித்து அமங்கலமாக உபபோகிக்க வேண்டாம் என்று கருதியே ஓய்வாசனம் என்று குறிப்பிட்டிருக்கின்றேன்.

மனிதன் நோய்நொடி இல்லாமல் பூரண நலததோடும், பூரண ஆயுளோடும் வாழவேண்டும் என்பதற்காக இதுவரை யோகாசன விளக்கங்களை எழுதிவிட்டு, அவன் ஓய்வுகொண்டு சுறுசுறுப்போடு எழுந்திருக்கவேண்டிய இந்த ஆசனத்தை ஓய்வாசனம் என்றோ சாந்தியாசனம் என்றோ எழுதுவதுதான் பொருத்தமானது.

செய்முறை:-




யோகாசனங்களைச் செய்து முடித்துவிட்டு அப்படியே மல்லாந்து படுக்கவேண்டும். தலைக்கோ காலுக்கோ தலையணை எதுவும் வைத்துக்கொள்ளக் கூடாது. யோகாசனங்களைச் செய்த அதே விரிப்பில் மல்லாந்து படுத்துக் கண்களை மூடி உடம்பைத் தளர்வாக வைத்திருந்தால் போதும். சுவாசம் சௌகரியப்படி இயல்பான கதியில் இருக்கலாம். இந்த நிலையில் இரண்டு அல்லது மூன்று நிமிடங்களோ, இன்னும் கொஞ்சம் கூடுதலாகவோ அவரவர் சௌகரியப்படி ஓய்வெடுத்துக் கொண்டு எழுந்து கொள்ளலாம்.

பயன்கள்:-

யோகாசனங்களைச் செய்கின்றபோது விரைவாக ஓடிய இரத்தம் இப்போது சுகமான ஆறுதலைப் பெறுகின்றது. பயிற்சியினால் வினைபட்ட உள்ளுறுப்புக்களும், வெளியுறுப்புக்களும் சாந்தி பெறுகின்றன. முக்கியமாக சுவாசமும் இதயத்துடிப்பும் சமப்படுகின்றன. இதயப்பிணிகள் உள்ளவர்களுக்கு இவ்வாசனம் நல்லதொரு மருந்தைப் போன்றதாகும் இதனால் இதயம் வளம்பெறுவதாகவும் இதயத்துடிப்பு சீர்படுவதாகவும் யோக சாஸ்திரம் கூறுகிறது. யோகாசனப் பயிற்சிக்குப் பின்னர் செய்யும் ஓய்வாசனத்தால் உடம்பிலுள்ள ஒவ்வொரு அணுவும் நலம்பெறுகின்றன.

***


"வாழ்க வளமுடன்"

2 comments:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

சர்க்கரை நோய் தீர்க்கும் காரணமான ஆசனங்கள் சிறப்பாக விளக்கி, ஓய்வாசனத்தையும் ஆராய்ந்த விதம் பாராட்டுக்குரியது.

prabhadamu சொன்னது…

//// இராஜராஜேஸ்வரி கூறியது...
சர்க்கரை நோய் தீர்க்கும் காரணமான ஆசனங்கள் சிறப்பாக விளக்கி, ஓய்வாசனத்தையும் ஆராய்ந்த விதம் பாராட்டுக்குரியது.
////



நன்றி இராஜராஜேஸ்வரி :)

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "