...

"வாழ்க வளமுடன்"

23 மார்ச், 2011

உத்திதபாதாசனம் விளக்கமும் பயன்களும்: பாகம் - 6

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
*

மூவகைக் கழிவுகள்:- (இரண்டாம் பயன்)

இரண்டாவது பயனாக சலபாசனத்தில் கிட்டுகின்ற மாபெரும் பயன் நமது சிறுநீரகங்களைப் பற்றியதாகும். மானுடதேகத்தின் ஒட்டுமொத்மான நலனைக் காப்பதில் ஒவ்வொரு உறுப்பும் அயராது பணியாற்றி உழைத்துக்கொண்டு இருக்கின்றன. இவற்றுள் சிறுநீரகத்தின் பணியும்,அதன்பங்கும் தலையாய இடத்தை வகிக்கிறது. இரவும் பகலுமாக அற்புதமாக ஒரு ஆலையைப்போல் சிறுநீரகங்கள் இயங்கி வருகின்றன. நமது உடம்பிலுள்ள எல்லா உறுப்புக்களும் ஓய்வின்றி இயங்குவதன் காரணமாக நமது இரத்தத்திலும், குடலிலும் கழிவுகள் சேருகின்றன. இக்கழிவுகள் திடநிலைக் கழிவுகள், திரவநிலைக் கழிவுகள், வாயுநிலைக் கழிவுகள் என மூவகைக் கழிவுகளாக நமது உடம்பினின்றும் வெளியேறுகின்றன.

திடநிலைக் கழிவுகள் குதத்தின் வழியாகவும், திரவநிலைக் கழிவுகள் சிறுநீர்ப்புற வழியாகச் சிறுநீராகவும், தோல் வழியாக வியர்வையாகவும், வாயுநிலைக் கழிவுகள் மூக்கின் வழியே கரியமில வாயுவாகவும், குதத்தின் வழியே அபான வாயுவாகவும் வெளியேற்றப்படுகின்றன. இக்கழிவுகள் முறையாகவும் சீராகவும் வெளியேறாவிட்டால் நமது உடலின் ஆரோக்கியம் பாழாகிவிடும். இக்கழிவுகள் முறையாக வெளியேறுகின்ற போது நாம் அமைதி பெறுகிறோம்.

*

சிறுநீரகங்கள்:

நாம் உண்ணுகின்ற உணவு ஜீரணமாகி உணவிலுள்ள சாரங்கள் கிரகிக்கப்பட்டு இரத்தத்தோடு கலக்கின்றன. இவ்வாறு இரத்தத்தோடு கலக்கின்ற போது இரத்தத்தில் நீரஇ உப்புஇ ய+ரியாஇ பலவகை அழுக்குகள்இ சர்கரைஇ அமிலங்கள், பொட்டாசியம், சோடியம், மக்னீசியம் இன்னும் பலவகைப் பொருட்கள் கலக்கின்றன. இந்தக்கலப்பான இரத்தம் சிறுநீகங்களுக்குச் செல்லுகின்றபோது சிறுநீரகங்கள் வேண்டாத பொருட்களையும், அதிகப்படியாக இருக்கின்ற நீரையும் வடிகட்டிப் பிரித்துச் சிறுநீராக்கி சிறுநீர்ப்பைக்கு அனுப்பி வைக்கின்றன.இவைதவிர சிறுநீரில் சிலசமயம் வைட்டமின்களும், ஹார்மோன்களும் கல்லீரலால் மாற்றப்பட்டோ அல்லது மாற்றப்படாமலோ, நச்சுத்தன்மைகள் நீக்கப்பட்டோ நீக்கப்படாமலோ வெளியாவதுண்டு. சீறுநீரில் புரதங்கள் தொடர்ந்து அதிமாகக் காணப்பட்டால் அதை அல்புமினூரியா என்று மருத்துவர்கள் குறிப்பிடுவார்கள். இவ்வாறு சிறுநீரில் அல்புமின் அதிகமாக வெளிப்படுவது சிறுநீரக நோயின் அறிகுறியாகக் கருதப்படுகிறது.

சிறுநீரில் சர்க்கரை மிகுதியாகக் காணப்பட்டால் அது சரக்கரைநோயின் அறிகுறியாகும். இவ்வாறு ஜீரணத்தின்போது சரியான வேதிவினைக்கு உள்ளாகமலும், உள்ளாகித் தகுந்த மாற்றத்துக்கு உள்ளாகாமலும் இரத்தத்தோடு கலந்துவரும் பொருள்களை சிறுநீரகம் பிரித்து வெளியேற்றுகிறது.


பொதுவாகச் சிறுநீரை சோதித்துப் பாரப்பதன்மூலம் நமது உடம்பிலுள்ள பெருவாரியான குறைபாடுகளை மருத்துவர்கள் கண்டறிகிறார்கள். வேண்டாத பொருட்கள் பிரித்து அனுப்பப்படாமல் அவை நமது இரத்தத்தில் கூடுகின்றபோது நமது உடல்நலம் வெகுவாகப் பாதிககப்படுகிறது. உதாரணமாக இரத்தத்தில் பொட்டாசியத்தினுடைய அளவு கூடிவிட்டாலும் இதயம் நின்றுபோய் மரணம் சம்பவிக்கும். இரத்தத்தில் நீரின் அளவு அதிகரித்துவிட்டாலும் கலங்கள் இயங்கமுடியாமல் போய்விடும். நீரின்அளவு இரத்தத்தில் குறைந்து விட்டால் கலங்கள் உலர்ந்து போய்விடும். இதேபோன்று அமிலங்கள் இரத்தத்தோடு கலந்து நிலைபெறுவதும் அபாயத்தைத் தரக்கூடியதாகும். இப்படியான தீமைகளைத் தரக்கூடியவைகள் நமது இரத்தத்தில் சேராமல் சிறநீரகங்கள் நம்மைக் காப்பாற்றுகின்றன.

*


இருவகை இடர்கள்:

இத்தகைய அற்புத உறுப்பான சிறுநீரகத்துக்கு இரண்டு வகையில் நோய்த் தாக்கங்கள் வருகின்றன. சிறுநீரகத்தில் கற்கள் உருவாதல், சிறுநீரகக்காசம், சிறுநீரகக்கட்டிகள், சிறுநீரகப்புற்று ஆகியவை முதல்வகை இடர்களாகும். இரண்டாவது வகையில் சிறுநீரகத்துக்கு வருகின்ற இடர்பாடு சிறுநீரகத்தொற்று என்பதாகும். சிறுநீர் கழிக்கின்றபோது சிறுநீர் வெளியேறும் புறவழி மூலமாகக் கிருமிகள் உள்ளே புகுந்து சிறுநிரகங்களைப் பாதிக்கின்றன. இதனால் வலியோடு சிறுநீர் வெளியேறுவது, சிறுநீர்ப்பாதையில் எரிச்சல், சிறுநீர்ப் பாதையிலும் சிறுநீர்ப்பையிலும் கட்டிகள் உருவாதல், சிறுநீரகங்களிலும் சிறுநீர்க் குழாய்களிலும் ஒவ்வாமை (அலர்ஜிகள்) போன்றவை நேர்கின்றன. இவற்றில் ஓரிரண்டு காரணங்களால் வருகின்ற இடர்பாடுகள் தொடர்ந்து நீடித்து சிறுநீரகங்களைச் செயலிழக்கச் செய்வதுமுண்டு.

இரண்டு சிறுநீரகங்களில் ஏதேனும் ஒன்று செயலிழந்து போனாலும் ஒரு சிறுநீரகம் மட்டும் தனியாக எல்லாப் பணிகளையும் தடங்கல் இல்லாமல் செய்யும் திறமை கொண்டதாகும். இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துபோனால் நமக்குப் பெரும்தீங்கு வருகிறது. அப்போது நவீனமுறையில் டயாலிசிஸ் செய்துகொள்வதும், மாற்றுச் சிறுநீரகம் பொருத்திக் கொள்வதும் அவசியமாகிறது.

*


சிறுநீரகக் கல்:-

இக்காலத்தில் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகி துயரப்படுபவர்களின் தொகையும் அதிகரித்து வருகிறது. இவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படடு சிறுநீரகக்கற்கள் அகற்றப்பட்டாலும் திரும்பவும் சிறுநீரகக்கற்கள் உருவாகிக் கொணடேயிருக்கும். ஆனால் யோகாசனங்கள் மூலமாக சிறநீரகத்தில் கற்கள் உருவாவதைத் தடுத்துவிடலாம். கற்கள் உருவாகி இருந்தாலும் ஆசனங்கள் மூலமாக அவற்றை வெளியே கொண்டு வந்துவிடலாம். இப்படி என் சொந்த அனுபவத்தில் சிலரை நலம்பெறச் செய்திருக்கிறேன்.


அத்துடன் செயலிழந்து போகும் தறுவாயிலுள்ள சிறுநீரகங்களை மீண்டும் செயல்படச் செய்துவிடலாம். சிறுநீரகங்கள் முற்றும் செயலிழந்துபோய், வாரத்துக்கு இரண்டு மூன்று டயாலிசிஸ் செய்துகொண்டுவரும் சிறுநீரக நோயாளிகளையும் டயாலிசிஸ் தேவைப்படாத அளவுக்கு ஆரோக்கியத்துக்கு மீட்டு வந்து விடலாம். சிறுநீரகங்களின் செயல்திறன், சிறுநீரக்கற்கள் போன்ற விடயங்களில் யோகாசனங்களின் வெற்றி நம்மை மலைக்க வைக்கக் கூடியதாக அமைந்திருக்கிறது. அவற்றுள் முக்கியமான இடத்தை இந்தச் சலபாசனம் வகிக்கின்றது என்பது முக்கியமான விடயமாகும்.

*


இரண்டு ஹார்மோன்கள்:-

சிறு நீரகம் இரண்டுவகையான ஹார்மோன்களைச் சுரக்கிறது. ஒரு ஹார்மோனின் பெயர் எரித்ரோபொயட்டின் எனப்படும். நமது உடல் எலும்புகளுக்குள்ளே அமைந்திருக்கும் எலும்பு மச்சை என்ற பொருள் இரத்தத்துக்கு வேண்டிய சிவப்பு அணுக்களைப் படைக்கிறது. இந்தப் படைப்பாற்றலை சிறுநீரகம் சுரக்கும் எரித்ரோபொயட்டின் என்ற ஹார்மோன் தூண்டி ஊக்கப்படுத்துகிறது. சிறுநீரகம் சுரக்கும் மற்றொரு ஹார்மோன் ரெனின் என்பதாகும். இந்த ஹார்மோன் சிறுநீரில் உப்பு, நீர் இவற்றின் சமநிலையைப் பேணிக்காக்கிறது. சலபாசனத்தில் சிறுநீரகம் வளம்பெற்று இயங்கி நமது உடல் நலத்தைப் பாதுகாக்கிறது.

*


பெண்களும் சலபாசனமும் (மூன்றாம் பயன்)

பெண்ணின் கருப்பையைப் பேணிக் காப்பாற்றுவதில் சலபாசனம் ஓர் பெரும் துணைவன் என்று கூறலாம். இன்று நமது குடும்பத்திலுள்ள கன்னிப் பெண்களிடம் காணப்படும் துயரம், மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் வயிற்றுவலி போன்ற இன்னோரன்ன துன்பங்களை சலபாசனம் மூலமாகத் தீர்த்துக்கொள்ளலாம்.


கருப்பை வளர்ச்சியின்மை, கருப்பை முன்பின்னாகவோ பக்கவாட்டிலோ சாய்ந்திருந்தால் இவ்வாறு மாதவிலக்கு நாட்களில் வயிற்றுவலி ஏற்படுமென்று யோகசாஸ்திரம் கூறுகிறது. கருப்பை, ஓவரி ஆகிய நுட்பமான உறுப்புக்களில் இந்த சலபாசனம் மென்மையாக இயங்கி மேற்சொன்ன குறைபாடுகளை அடியோடு தீர்த்துவைக்கிறது. இதனால் மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் வயிற்றவலி அகன்று விடுகிறது. கருவுற்ற பெண்கள் தயவுசெய்து சலபாசனம் செய்ய வேண்டாம்.

***


உத்திதபாதாசனம்:-

உத்தி + இதம் + பாதம் + ஆசனம் என்று இது விரிவுபடும். உத்தி என்றால் தொப்புள், வயிறு என்று பொருள்படும். உத்தியாகிய தொப்புள் (உந்திக்கமலம்), வயிறு ஆகிய பகுதிகளுக்கு நலம் சேர்க்கின்ற ஆசனம் இது.

செய்முறை:-

படுக்கையில் மல்லாந்து படுக்க வேண்டும். இரண்டு கைகளையும் பக்கத்துக்கு ஒன்றாகக் கவிழ்த்து வைத்துக்கொண்டு மூச்சை உள்ளே இழுத்து அடக்கிக் கொள்ள வேண்டும் இப்போது இரண்டு கைகளையும் சேர்த்து மேலே தூக்கி 45 பாகை அளவில் நிறுத்த வேண்டும். இந்த நிலையில் பத்து நொடிகள் இருந்தால் பொதும்.


பின்னர் மூச்சை மெதுவாக வெளியேற்றியபடியே கால்களை இறக்கித் தரையில் வைத்துக்கொள்ளலாம். கொஞ்சம் இளைப்பாறிக் கொண்டு பின்னர் மீண்டும் உத்திதபாதாசனம் செய்யவேண்டும். இவ்வாறு மூன்று அல்லது நான்கு முறைகள் இவ்வாசனத்தைச் செய்தால்போதும். இதற்குமேல் தேவையில்லை.

பயன்கள்:-

இவ்வாசனத்தில் நமது உந்திக்கமலம் சுறுசுறுப்படைகின்றது. வயிற்றிலுள்ள ஜீரண உறுப்புக்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன. இதனால் ஜீரணம் துரிதப்படுகிறது. குடல் உறிஞ்சிகள் உணவிலுள்ள சாரத்தை சுத்தமாக உறிஞ்சிக் கொள்ளுகின்றன. இடைஇ பிங்கலை ஆகிய கால்நரம்புகள் வலிமை பெறுகின்றன. இடுப்பில் நளினமாக இயங்கி இடுப்பு வலியைப் போக்குகிறது. தொடைகள் கால்களிலுள்ள தொளதொளத்த தசைகள் கரைந்து வலிமை பெறுகின்றன. கால் பாதங்களிலுள்ள பித்தவெடிப்புக்கள் அகலுகின்றன. பாதங்களில் ஏற்படும் புண்களை இவ்வாசனம் அடியோடு களைகிறது. மூல நோயால் கஷ்டப்படுபவர்கள் இவ்வாசனத்தை ஆறுமுறை செய்தால் போதும். நோயின் கடுமை நீங்கிப் படிப்படியே பூரண நலம் கிடைக்கும்.

***

உந்திக்கமலம்:-

தொப்புளிலிருந்து மேலே இரண்டும், கீழே இரண்டுமாக நான்கு பிரதான இரத்தக் குழாய்கள் செல்வதாகவும், இவை பிரிந்து 700 இரத்தக குளாய்களாக விரிவடைவதாகவும் யோக நூல்கள் கூறுகின்றன. இவ்வாசனத்தைச் செய்கின்றபோது தொப்புளிலிருந்து இந்த 700 இரத்துக் குழாய்களுக்கும் சுகமான ஒரு அழுத்தம் பரவி இரத்த ஓட்டத்தத்தைத் துரிதப்படுத்தியும் சமநிலைக்குக் கொண்டுவந்தும் நமது உடம்பின் எல்லாப் பாகங்களுக்கும் சமச்சீரான இரத்த ஓட்டம் கிடைக்கச் செய்கின்றது. வயிற்று இரைச்சல், அடிக்கடி பேதியாதல் போன்ற குடல் சம்பந்தமான குறைபாடுகளும் உத்திதபாதாசனம் செய்வதால் அகலுகின்றன.

இவ்வாசனம் பார்ப்பதற்கு மிக எளிமையானது. நல்ல உயர்வான பலன்களளைத் தரக்கூடியது. சும்மா ஏனோ தானோ என்று செய்யாமல் மெதுவாக இசைக்கு அசைவதுபோல நன்கு அனுபவித்து இவ்வாசனத்தைச் செய்யவேண்டும். அவ்வாறு செய்கின்றபோது உண்டாகும் சுகம் ரொம்ப அலாதியானதாக இருக்கும். சிலரால் பத்து நொடிகள்வரை இப்படிக் கால்களை வைத்திருக்க முடியாது. கால்கள் நடுங்கும், உடம்பு தடதடவென்று உதறும். அப்படிப்பட்டவர்கள் சகித்துக்கொண்டு இதைச் செய்யவேண்டியதில்லை. தங்களுக்குச் சிரமமில்லாத வகையில் ஐந்து அல்லது ஆறு நொடிநேரம் அளவுக்கு இருந்தாலும் போதும். பழக்கத்தில் சரியான காலஅளவைக் கொண்டுவந்துவிடலாம்.

இன்னும் சிலர் பழக்கத்தில்வர சுகமாக இருக்கிறது என்பதற்காக 15, 20 நொடிகள்வரை இவ்வாசனத்தில் கால்களை உயர்த்தி வைத்துக்கொண்டே இருப்பார்கள். அப்படியும் செய்யக்கூடாது. யோகாசனங்கள் சுகமாக இருக்கின்றன என்பதற்காக எந்த ஆசனத்தையும் பத்து நொடிகளுக்குமேல் நீடிக்கக்கூடாது. வேண்டுமானால் ஒன்றிரண்டு நொடிகள் மட்டும் கூட்டிக்கொள்ளலாம். அதற்குமேல் நேரத்தை அதிகரிக்கக்கூடாது. நான்கு முறை செய்வதை, ஐந்து அல்லது ஆறுமுறை செய்யலாமே தவிர பத்துநொடி நேரம் என்பதைப் பதினைந்து, இருபது நொடிகளென நீடிக்கக்கூடாது. தேவைப்பட்டால் நானே நேரத்தைக் கூட்டிச் சொல்லுவேன். அப்படிக் கூட்டிச்சொல்லியுள்ள ஆசனங்களில் மட்டும் கூடுதலான நேரம் இருக்கலாம். ஆகவே நான் குறிப்பிட்டுச் சொல்லுகின்ற கால அளவுகளைக் கருத்தில் கொள்ள வேண்டுகிறேன். கருவுற்ற பெண்கள் யோகாசனங்களைச் செய்யக்கூடாது. ஆசனப்பயிற்சியுள்ள பெண்கள் கருவுற்றால் அவர்கள் இவ்வாசனத்தை நான்கு அல்லது ஐந்து மாதங்கள்வரை செய்யலாம்.
சிலருக்கு இரண்டு கால்களையும் சேர்;த்து உயர்த்தி இவ்வாசனத்தைச் செய்ய முடியாமலிருக்கும். அவர்கள் உத்திதபாதாசனத்தைச் செய்வது போலவே ஒவ்வொரு காலாக உயர்த்திப் படத்தில் காட்டியிருப்பது போலச்செய்யலாம். இதனை ஏகபாதஉத்தானாசனம் என்று கூறுவார்கள்.சில நாட்கள் பயிற்சியின் பின்னர் இரண்டு கால்களையும் சேர்த்து உயர்த்திச் செய்யச் சுலபமாக வந்தவிடும். இரண்டுக்கும் பலன்கள் ஒன்றுதான். இருப்பினும் இரண்டு கால்களையும் சேர்த்து உயர்த்திச் செய்யும்போதுதான் இதன் முழுப்பயனையும் விரைவில் பெற்றுக்கொள்ளலாம்.

***

இதுவரை ஐந்து ஆசனங்களை அறிமுகம் செய்து எழுதியிருந்தேன். இனி இரண்டாவது கட்டத்துக்கு வருவோம். இந்த இரண்டாவது கட்டம்தான் சர்க்கரை நோய்க்கு ஒரு சரியான சாட்டை அடியாக இருக்கும். இந்தச் சாட்டைக்கு உத்திஷ்ட ஆசனங்கள் என்று பெயர். இவை

1) உத்திஷ்டபாதாசனம்

2) உத்திஷ்டபிரதிபாதாசனம்

3) உத்திஷ்டபந்தாசனம்

4) உத்திஷ்ட உபாங்கபாதாசனம்

5) உத்திஷ்டஉபாங்கபந்தாசனம்

என்று ஐந்து வகையாகப் பிரித்துப் பயிலப்படுகின்றன. இவ்வாசனங்களைப் பற்றிய செயல்முறை விவரிப்புக்களைத் தெரிந்து கொள்ளுவதற்கு முன்னால், இவ்வாசனங்களைப் பற்றிய எச்சரிக்கைகளைத் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம்.

மனித உடம்பில் இவற்றின் இயக்கம் அபூர்வமானது. வயிற்றிலும் வயிற்றின் உள்ளுறுப்புக்களிலும் மிகக் கடுமையாக இயங்கும் தன்மைகளைக் கொண்டவையாகவும், அஸ்திரங்களிலே பிரம்பாஸ்திரத்துக்கு ஒப்பானவையாகவும் இவை யோகசாஸ்திரத்தால் விமர்சிக்கப் படுகின்றன. சர்க்கரைநோய் என்ற அழிக்க முடியாத அரக்கனை அழித்து ஒழிக்கின்ற பிரம்மாஸ்திரம் தான் இந்த ஆசனங்கள். பொதுவாக இவை முரட்டு ஆசனங்களென்று கருதப்படுகின்றன. இவற்றை எடுத்த எடுப்பில் யாரும் பயிலக்கூடாது. இவ்வாசனங்களுக்கு முன்னால் சொல்லப்பட்ட ஐந்து ஆசனங்களையும் தினசரிப் பயிற்சி முறைக்குக் கொண்டுவராமல் இவற்றைப் பயிலவேண்டாம்;. சர்க்கரை நோய்க்கு பிரம்மாஸ்திரம் போன்றவையென்று சொல்லப்படுகிறதே என்று கருதி இவற்றை எடுத்த எடுப்பில் நீங்கள் பயிலத் தொடங்கக்கூடாது என்பதால் இந்த எச்சரிக்கையையும் எழுதவேண்டியுள்ளது. முதற்கட்டமாகச் சொல்லப்பட்ட ஐந்து ஆசனங்களையும் மட்டும் ஒருமாத காலமாவது காலை, மாலை இரண்டுவேளையும் பழகி உடம்பைத் தயார் செய்துகொண்ட பின்னர் இவ்வாசனங்களைப் பழகத் தொடங்குமாறு அன்போடு வேண்டிக் கொள்ளுகின்றேன். உங்கள் உடல்நலம் கவனத்தில் கொள்ளப்படவேண்டும் என்பதற்காகவே இவ்வாறு கூறுகின்றேன்.

யோகசாஸ்திரம் என்பது தேர்ந்து ஞானிகளால் அவர்களின் சொந்த அனுபவங்களோடு சீரியமுறையில் செப்பம் செய்யப்பட்ட ஒரு முறையான கல்வியாகும். இதன் படிகளும், மேல்நிலைப் பாடங்களும் மிகவும் முன்யோசனையோடு தயாரிக்கப்பட்ட கட்டுக்கோப்புக்களை உடையவையாகும். இதில் கடினமான ஆசனங்களென்று எவையுமில்லை. எல்லா ஆசனங்களும் மிகமிக எளிமையானவையே. பழகுவதற்கு மிக எளிமையாகக் கைவரக்கூடியவை. எளிமையாகப் பழகக் கூடியனவாக இருந்தாலும் சில ஆசனங்கள் கடினமான விளைவுகளைக் கொண்டவை. இம்மாதிரிக் கடினமான விளைவுகளைக் கொண்டதாகவோ, அல்லது பழகுவதற்குச் சிரமமானவைகளாகவோ உத்திஷ்ட ஆசனங்களைப்போல எவையேனும் சில ஆசனங்கள் இருக்கலாம். அவை பழகுவதற்குக் கடினமாக இருப்பதாக எண்ணி அவற்றை நாம் கைவிடக்கூடாது என்பதற்காக, அவற்றைக் கொஞ்சம் எளிமைப்படுத்தி மாறுதல் செய்து நமது யோகிகள் நமக்குத் தந்திருக்கிறார்கள். யோகசாஸ்திர போதனையில் இருக்கும் எத்தனையோ சிறப்புக்களில் இது ஒரு தனிச்சிறப்பு.

இவை ஒருபக்கம் இருக்க என்னிடம் சர்க்கரை நோய்க்காக ஆசனங்கள் பயில வந்தவர்கள் யாருக்கும் இதுவரை இந்த உத்திஷ்ட ஆசனங்களைக் கற்பிக்காமலே, இவற்றைவிட இன்னும் எளிய ஆசனங்களைக் கொண்டே சர்க்கரைநோயை முற்றும் குணப்படுத்தியிருக்கின்றேன். இங்கே எளிய ஆசனங்களோடு உத்திஷ்ட ஆசனங்களையும் அறிமுகம் செய்திருப்பதால் நிச்சயமாக நீங்கள் நலம் பெறுவதில் எந்தத் தடையுமில்லை என்பது உறுதி.

பொதுவாக முரட்டு ஆசனங்கள் எனப்படுகின்ற உத்திஷ்ட ஆசனங்களிலே, உத்திஷ்டபாதாசனம், உத்திஷ்டபிரதிபாதாசனம், உத்திஷ்டபந்தாசனம் என்பவை கொஞ்சம் கடினமானவை. ஆகவே அதை இன்னும் கொஞ்கம் எளிமைப்படுத்தி உத்திஷ்டஉபாங்க பாதாசனமென்றும், உத்திஷ்டஉபாங்க பந்தாசனமென்றும் வகைசெய்து வைத்தார்கள். முதலில் இவ்வாசனத் தொகுப்பில் எளிமையை விளக்கிவிடுகிறேன். இதனால் இதனை அடுத்துவரும் கடினமாக வயிற்றின் உறுப்புக்களில் இயங்கி நலம்தரும் உத்திஷ்ட பாதாசனம், உத்திஷ்ட பந்தாசனம் ஆகியவை எளிமையாகிவிடும். அல்லது உத்திஷ்ட உபாங்கபாதாசனம், உத்திஷ்ட உபாங்கபந்தாசனம் ஆகிய இரண்டுமட்டுமே உங்களுக்கு நலம்தரப் போதுமானவையாகும


***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "