இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
87. பூச்சிக்கடிமுள்ளிக்கீரை சாறு, வாழைத்தண்டு சாறு இரண்டையும் சம அளவு எடுத்து, 60 மி.லி. அளவு சாப்பிட்டால் வண்டுக்கடி மற்றும் தேள் கடியால் உடலுக்குள் ஏறிய விஷம் முறிந்துபோகும்.
*
88. பெண்களுக்கு மீசை
சில பெண்களுக்கு இப்படி ஏற்படுவதுண்டு. இதை மருத்துவ மூலமாக அகற்றிவிடுவது நல்லது, பொன்னாதாரம் என்ற மருந்தை, நாட்டு மருந்துக் கடையிலிருந்து வாங்கி வந்து, தண்ணீர் விட்டு அரைத்து, முடி நீக்க வேண்டிய பாகத்தில் தேய்த்து விட வேண்டும். மறுநாள் காலை வெந்நீரால் கழுவிவிட்டால் முடி சுத்தமாக உதிர்ந்துவிடும். பிறகு முளைக்காது.
*
89. பெரு வயிறு
பாலக் கீரையுடன் வேப்பிலை, ஓமம், மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் பெருவயிறு குறையும்.
சாணாக்கிக் கீரை சாறில் கரிசலாங்கண்ணிக் கீரை விதையை ஊற வைத்து அரைத்துச் சாப்பிட்டால் பெரு வயிறு குணமாகும்.
*
90. பேன் பொடுகு நீங்க
அரைக்கீரை சாறெடுத்து அதில் வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து, தலையில் தேய்த்துக்குளித்து வர, பேன், பொடுகு, நீங்கி முடி நன்கு வளரும்.
பொடுதலைக் கீரைச் சாறில் வசம்பு, வெள்ளை மிளகு இரண்டையும் சம அளவு ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி, ஒரு ஸ்பூன் பொடியை நல்லெண்ணெயில் குழைத்து தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால், பேன், பொடுகு பிரச்னை முழுமையாகத் தீரும்.
*
91. பேதி
முக்குளிக் கீரை சாற்றில் வெந்தயத்தை ஊற வைத்து அரைத்துச் சாப்பிட்டால் அடிக்கடி உண்டாகும் பேதி, கழிச்சல் போன்றவை குணமாகும்.
*
92. போதைப் பழக்கத்தில் இருந்து மீள
பருப்புக் கீரையுடன் ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து அரைத்து தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டால் குடிப்பழக்கம் பற்றும் போதைப் பழக்கத்தில் இருந்து மீளலாம்.
*
93. மஞ்சள் காமாலை
துத்தியில் கொழுந்து இலைகளைப் பறித்து வந்து அரைத்து நெல்லிக்காயளவு ஒரு நாளைக்கு இரு வேளை என்ற கணக்கில் ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால், மஞ்சள் காமாலை குணமாகும்.
உலர்ந்த புதினா இலையில் கஷாயம் செய்து குடித்தால் மஞ்சள் காமாலை, விக்கல், வயிற்று வலி போன்றறை தீரும்.
கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து, 2 சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து அதிகாலையில் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை குணமாகும்.
வல்லாரைச் சாறு (15 மிலி), கீழாநெல்லி இலைச்சாறு (15 மிலி), பசும்பால் (100 மிலி) ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, அதிகாலையில் சாப்பிட்டு வந்தால், முற்றிய மஞ்சள் காமாலை கூட குணமாகும்.
*
94. மந்தம்
புளிச்சக்கீரையை சிறிது ஓமம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் மந்தம் குணமாகும்.
பண்ணைக் கீரையுடன் சிறிது ஓமம் கலந்து அரைத்துச் சாப்பிட்டால் வயிறு மந்தம் தீரும்.
*
95. மரு
அகத்திக்கீரை சாற்றில் கடல் சங்கை இழைத்து மருக்கள் மீது தடவினால் அவை உதிர்ந்து விழுந்துவிடும்.
முகத்தில் உருவாகும் பரு, உடலில் உருவாகும் பாலுண்ணி போன்றவற்றுக்கு அம்மான் பச்சரிசி செடியில் இலையை ஒடிக்கும் போது வெளியாகும் பாலைத் தடவினால் மரு, பாலுண்ணியிலிருந்து குணம் பெறலாம். வாய்ப்புண், நாக்குப்புண், உதடு வெடிப்பு போன்றவற்றுக்கும் இந்தச் செடியின் பால் நல்ல பலன் தரும்.
*
96. மலச்சிக்கல்
உலர்ந்த கறிவேப்பிலை, உலர்ந்த நிலாவரை இரண்டையும் சம அளவு எடுத்து பொடியாக்கி, தினமும் இரவு உணவுக்குப் பிறகு ஒரு ஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டால் பெருவயிறு மறையும். மலச்சிக்கலும் தீரும்.
உலர்ந்த கறிவேப்பிலை (கால் கிலோ), சுக்கு, மிளகு, சீரகம், உப்பு - தலா 10 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ளவும். தினமும் இதை சூடான சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட்டால் மந்தம், மலக்கட்டு, சர்க்கரை நோய் போன்றவை குணமாகும்.
வெந்தயக் கீரையுடன் பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து அரைத்து சட்னியாகச் செய்து சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும்.
வெந்தயக் கீரையுடன் நிலாவரை இலையை சம அளவு சேர்த்து, சிறிது ஓமம் கலந்து அரைத்து இரவில் சாப்பிட்டால் காலையில் மலம் தாராளமாகக் கழிந்து, வயிற்று உப்பிசம் தணியும்.
கரிசலாங்கண்ணிக் கீரையுடன் இரண்டு கடுக்காயைத் தட்டிப்போட்டு கஷாயமாக்கிச் சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும்.
கல்யாண முருங்கை இலையுடன் ஓமம், வாய்விளங்கம் இரண்டையும் சேர்த்து அரைத்து இரவில் சாப்பிட்டு வந்தால் அதிகாலையில் மலம் தாராளமாகக் கழியும்.
கொடிப்பசலைக் கீரை, கொத்தமல்லி விதை, சீரகம் மூன்றையும் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும்.
முடக்கத்தான் கீரையுடன் சிறிது வாய்விளங்கத்தைச் சேர்த்து அரைத்து, நெல்லிக்காய் அளவு இரவு உணவுக்குப் பிறகு சாப்பிட்டால் மலச்சிக்கல் சரியாகும்.
துத்திக் கீரையுடன் சிறிது வாய்விளங்கம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும்.
அம்மான் பச்சரிசி கீரையை அரைத்துச் சாப்பிட்டால் கலக்கட்டு உடையும்.
பாலக் கீரையுடன் பருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல் சரியாகும்.
பிண்ணாக்குக் கீரையுடன் மிளகு, பூண்டு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து சூப் செய்து சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும்.
பிண்ணாக்குக் கீரையுடன் நிலாவரை இலையைச் சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் மலம் தாராளமாகக் கழிந்து, குடலில் இருக்கும் கிருமிகள் ஒழியும்.
பண்ணைக் கீரையை பருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் நாள்பட்ட மலச்சிக்கல் தீரும்.
வங்கார வள்ளைக் கீரையை உலர்த்திப் பொடியாக்கி, தினமும் இரவு உணவுக்குப் பிறகு சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும்.
மணலிக் கீரை, சோம்பு இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும்.
பரட்டைக் கீரையை உலர்த்திப் பொடியாக்கி, இரவில் சாப்பிட்டால் மலச்சிக்கல் மறையும்.
பாற்சொரிக் கீரையை உலர்த்திப் பொடியாக்கி இரவில் சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும்.
சதகுப்பைக் கீரையுடன் கறிவேப்பிலையைச் சேர்த்து அரைத்து, இரவு உணவுக்குப் பிறகு சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும்.
*
97. மனக்கோளாறு
மணலிக் கீரையை உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவு சாப்பிட்டால் மன உளைச்சல், மன அழுத்தம், மன நலக்கோளாறுகள் குணமாகும்.
*
98. மாதவிடாய்
தாமதமாகும் மாதவிலக்கை வரவழைக்க
சூதகத் தடை (ஹோர்மோன் பிரச்னை) உள்ள பெண்களுக்கு உடம்பு பருத்து மூன்று, ஆறு மாதங்களுக்குக் கூட மாதவிலக்கு வராமல் இருக்கும். முள்ளு முருங்கை இலையையும் கல்யாண முருங்கை இலையையும் உரல் அல்லது மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ளவும். (அரைக்கும்பொழுது இலேசாக தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்). இதைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 தேக்கரண்டி சாப்பிட வேண்டும். சாறு எடுத்த மூன்று மணி நேரத்திற்குள் சாப்பிட்டால்தான் சிகிச்சை பலனளிக்கும்.
முருங்கைக் கீரையுடன் சிறிது கருப்பு எள் சேர்த்து கஷாயமாக்கி ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும்.
உலர்ந்த புதினா இலையோடு ஒரு ஸ்பூன் கருப்பு எள் சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.
கொத்தமல்லி சாறில் கருஞ்சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.
வெங்காயத் தாளை அரைத்து, அதில் கருப்பு எள், கருஞ்சீரகம் இரண்டையும் சம அளவில் கலந்து நன்கு காய வைத்து அரைத்துக்கொள்ளவும். மாதவிலக்கு வராத சமயங்களில் ஒரு ஸ்பூன் அளவுக்கு காலை மாலை என மூன்று நாட்கள் சாப்பிட்டால் பிரச்னை தீரும். இதைக் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடக்கூடாது.
பிரண்டையை இடித்துச் சாறு எடுத்து, அதில் சிறிது பெருங்காயம் சேர்த்துச் சாப்பிட்டால் மாதவிலக்குப் பிரச்னைகள் சரியாகும்.
வல்லாரைச் சாறில் பெருஞ்சீரகத்தை ஊற வைத்து எடுத்துப் பொடியாக்கி, தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் சரியாகும்.
கல்யாண முருங்கை இலையை கருப்பு எள் ஊற வைத்த தண்ணீரில் அரைத்து, காலை மாலை இரு வேளையும் சாப்பிட்டால் தாமதித்த மாதவிலக்கு சீராகும்.
முடக்கத்தான் கீரைச் சாற்றில் கறுப்பு எள்ளை அரைத்துச் சாப்பிட்டால் மாதவிலக்கு உண்டாகும்.
மாதவிலக்கின்போது இரத்தப்போக்கு அதிகமாக இருக்கும்போது பண்ணைக் கீரையை சமைத்துச் சாப்பிட்டால், அதிகப்படியான இரத்தப்போக்கு கட்டுப்படும்.
*
99. மார்பு சளி
மணலிக் கீரையுடன் சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, பனை வெல்லம் ஆகியவற்றைச் சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் மார்புச் சளி குணமாகும்.
*
100. மார்பு புண்
கானாம்வாழைக் கீரையை அரைத்து, பெண்களின் மார்பில் ஏற்படும் புண்கள் மீது பற்றுப்போட்டால் அவை உடனே ஆறிவிடும்.
*
101. மார்பு வலி
நல்வேளைக் கீரைக் கீரையுடன் தாமரைப்பூ சம அளவு சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் மார்பு வலி உடனே குணமாகும்.
*
102. முகப்பரு
முளைக்கீரை சாற்றில் முந்திரிப்பருப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால், முகப்பரு, தேமல் போன்றவை மறைந்து முகப்பொலிவு உண்டாகும்.
சிறுகீரையுடன், முந்திரிப் பருப்பு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து முகப்பருக்கள் மீது தடவி வந்தால் குணம் பெறலாம்.
*
103. முகப்பொலிவு
பருப்புக் கீரையுடன், குடை மிளகாய், வெங்காயம், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும். முகப்பொலிவும் கூடும்.
*
104. முடக்கு வாதம்
வாதநாராயணன் கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, பூண்டு (3 பல்), பெருங்காயத்துடன் (சுண்டைக்காய் அளவு) விளக்கெண்ணெய் விட்டு வதக்கி அரைத்துச் சாப்பிட்டால் முடக்குவாதம், விரைவாதம் ஆகியவை குணமாகும்.
*
105. மூக்கடைப்பு
தூதுவளைக் கீரையுடன் சீரகம், பூண்டு, மிளகு, மஞ்சள் சேர்த்துக் கொதிக்க வைத்து வடிகட்டிச் சாப்பிட்டால் மூக்கடைப்பு, தும்மல், மூக்கில் நீர் கொட்டுதல் போன்றவை குணமாகும்.
துயிலிக் கீரை சாறில் மாசிக்காயை ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி, மூக்குப் பொடி போல் மூக்கில் உறிஞ்சிக் கொண்டால், மூக்கடைப்பு நீங்கும்.
*
106. மூக்கில் இருந்து இரத்தம் வடிதல்
பிரண்டை வதக்கி சாறு எடுத்து இரண்டு துளிகளைக் காதில் விட்டால், காது வலி நீங்கும். மூக்கில் விட்டால் மூக்கில் இருந்து இரத்தம் வடிதல் குணமாகும்.
*
107. மூச்சுத் திணறல்
வங்கார வள்ளைக் கீரைச் சாறில் சுக்கு பவுடரைக் குழைத்துச் சாப்பிட்டால் இதய நோய்களும், இரத்த அழுத்தமும் குணமாகும்.
பரட்டைக் கீரை , தூதுவளை, முசுமுசுக்கை மூன்றையும் சம அளவு எடுத்து உலர்த்திப் பொடியாக்கி தினமும் காலை, மாலை இரு வேளையும் சாப்பிட்டால் ஆஸ்துமாவில் ஏற்படும் மூச்சிரைப்பு குணமாகும்.
*
108. மூட்டு வலி
முருங்கைக்கீரையோடு உப்பு சேர்த்து அவித்து தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டால் மூட்டுவலிகள் குணமாகும்.
கறிவேப்பிலை, சுக்கு, வெந்தயம், மஞ்சள் ஆகியவற்றை நன்கு வறுத்து பொடி செய்து, தினமும் காலை மாலை இரு வேளையும் உணவுக்குப் பிறகு 5 கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் மூட்டு வலி, வாதநோய்கள் நீங்கும்.
பிரண்டை இலை, முடக்கத்தான் இலை, சீரகம் மூன்றையும் தலா 10 கிராம் அளவு எடுத்து அரைத்து காலையில் சாப்பிட்டால் மூட்டு வலி, மூட்டுத் தேய்வு, இடுப்பு வலி போன்ற குறைகள் தீரும்.
முடக்கத்தான், வாதநாராயணன் இரண்டையும் சம அளவு எடுத்து, பூண்டு (ஒரு பல்), மஞ்சள் தூள் (2 சிட்டிகை) சேர்த்து அரைத்து, அதிகாலையில் தொடர்ந்து சாப்பிட்டால் எப்படிப்பட்ட மூட்டு வலியும் குணமாகும்.
குப்பைக் கீரை, முடக்கத்தான் கீரை, சீரகம் மூன்றையும் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் மூட்டு வலிகள் குணமாகும்.
வாதநாராயணன் கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் மூட்டு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி போன்றவை குணமாகும்.
மணலிக் கீரையை மிளகு, பூண்டு, மஞ்சள், ஓமம் ஆகியவற்றோடு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் மூட்டு வலிகள், வாத வலிகள் குணமாகும்.
பரட்டைக் கீரை, முடக்கத்தான் கீரை, வாதநாராயணன் கீரை மூன்றையும் சிறிது பூண்டு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் வாதத்தால் ஏற்படும் வலிகள், மூட்டு வலிகள் குணமாகும்.
பரட்டைக் கீரை, வாதநாரானணன் கீரை, முடக்கத்தான் கீரை மூன்றையும் சம அளவு எடுத்து சாறு பிழிந்து அதில் நல்லெண்ணிய் விட்டுக் காய்ச்சி தைலமாக்கித் தேய்த்தால், கை, கால், இடுப்பு, மூட்டு வலிகள் குணமாகும்.
***
"வாழ்க வளமுடன்"
0 comments:
கருத்துரையிடுக