...

"வாழ்க வளமுடன்"

25 நவம்பர், 2010

எளிய பாட்டி வைத்தியம் -- PART = 3

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
41. குஷ்ட நோய்கள்


வல்லாரை, வெள்ளெருக்கு, ஆடுதின்னாப்பாலை மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்து நெல்லிக்காய் அளவுக்குத் தொடர்ந்து சாப்பிட்டால் எப்படிப்பட்ட குஷ்ட நோய்களும் குணமாகும்.



*


42. கைகால் எரிச்சல்


பருப்புக் கீரை, உளுந்து இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டால் கைகால் எரிச்சல் குணமாகும்.


**



42. கொழுப்பு கரைய


பசலைக் கீரையுடன் பூண்டு, மிளகு, மிளகாய் வற்றல் ஆகியவற்றைச் சேர்த்து அவித்து, கடைந்து சாப்பிட்டால், உடலில் உள்ள அதிகப்படியாக கொழுப்பு கரையும்.


பருப்புக் கீரையுடன் பூண்டு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் கொழுப்பு கரையும்.


தூதுவளைக் கீரைச் சாறை 30 மிலி அளவில் தினசரி காலையில் சாப்பிட்டு வந்தால், உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புக்கள் கரையும்.



*


43. டெங்கி


கொசுக்களின் மூலம் பரவும் வைரஸ்களினால் டெங்கிக் காய்ச்சல் ஏற்படுகிறது. டெங்கி மோசமாகும்பொழுது உள்ளுறுப்புக்களில் இரத்தக் கசிவு ஏற்பட்டு இறப்பு ஏற்படுகிறது. நவீன மருத்துவத்தில் டெங்கிக்கு மருந்து கிடையாது. ஆனால் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் டெங்கியை அம்மான் பச்சரிசி இலையைக் கொண்டு எளிதில் குணப்படுத்துகிறார்கள்.


அம்மான் பச்சரிசி வெறும் இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து சுத்தமாக கழுவிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி இலையை ஒரு நிமிடத்திற்கு கொதிக்க விடவும். பிறகு இந்த நீரை ஆற வைத்து வடிகட்டி குடிக்கவும். 24 மணி நேரத்திற்கு நோயாளி இந்த அம்மான் பச்சரிசி நீரை மட்டும் குடித்து வர வேண்டும்.



*


44. சரும நோய்


பருப்புக் கீரையுடன் சிறிது மஞ்சள் கலந்து அரைத்து, அக்கி மற்றும் படை, தேமல் போன்ற தோல் நோய்கள் மீது பூசினால் நிவாரணம் பெறலாம்.


புளிச்சக்கீரையை மஞ்சள் சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டால் கரப்பான் போன்ற தோல் நோய்கள் தீரும்.


அகத்திக்கீரையுடன் சம அளவு தேங்காய் சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து, அதில் கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து, கரும்படை, தேமல், சொறி, சிரங்கு போன்றவற்றின் மீது பற்றுப்போட்டால் பூரண குணம் கிடைக்கும்.


கல்யாண முருங்கை இலையுடன் கருஞ்சீரகம் சேர்த்து அரைத்துப் பூசினால், படை, சொறி, சிரங்கு ஓன்ற தோல் நோய்கள் குணமாகும்.


முடக்கத்தான் கீரைச் சாறில் சிறிது மஞ்சள் தூள் கலந்து படை, சொறி, கரப்பான் போன்ற தோல் நோய்கள் மீது பூசினால் குணம் பெறலாம்.


அம்மான் பச்சரிசி கீரை, வெள்ளெருக்கு இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டால் தோல் நோய்கள் குணமாகும்.


முசுமுசுக்கைக் கீரைச் சாறில் பரங்கிப்பட்டையை ஊற வைத்து, உலர்த்தி பாலில் வேக வைத்து மீண்டும் உலர்த்திப் பொடியாக்கிக் கொள்ளவும். தினமும் காலை மாலை இரு வேளையும் ஒரு கிராம் சாப்பிட்டால் தோல் நோய்கள் அனைத்தும் விலகும்.


ஆரைக்கீரைச் சாறில் கருஞ்சீரகத்தை ஊற வைத்துப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் ஒரு கிராம் அளவில் சாப்பிட்டால் தேமல், படை, கரும்படி போன்ற தோல் நோய்கள் குணமாகும்.


படை, கரப்பான் போன்ற தோல் நோய்கள் மீது பண்ணைக் கீரையை அரைத்துப் பற்றுப்போட்டால் அவை குணமாகும்.


பரட்டைக் கீரையை அரைத்து சொரி, சிரங்குகள் மீது தடவினால் அவை குணமாகும்.


பரட்டைக் கீரைச் சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தைலமாகக் காய்ச்சிப் பயன்படுத்தினால் படை, சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.


*



45. சளி


சளித்தொல்லையைப் போக்க மிளகு தேங்காய்ப்பால் துணை புரியும்.
தேவையான பொருட்கள்: மிளகுத்தூள் ஒரு தேக்கரண்டி, கருப்பட்டித்தூள் 2 மேஜைக்கரண்டி, தண்ணீர் ஒரு டம்ளர், கெட்டியான தேங்காய்ப்பால் அரை டம்ளர்


செய்முறை : ஒரு பாத்திரத்தில் மிளகுத்தூள், கருப்பட்டித்தூள், தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். இது பாதியாக வற்றியதும் இறக்கி தேங்காய்ப் பாலை விட்டுக் கலந்து பரிமாறவும். இது 3 நாட்கள் தொடர்ந்து குடித்தால் சளித்தொல்லை போய்விடும். தேங்காய்ப்பாலுக்கு சளியைப் போக்கும் தன்மை உண்டு. அதனுடன் மிளகும் சேர்வதால் உடம்புக்கு நல்லது. மிளகுக் காரம் வேண்டாம் என்றால் மிளகைப் பொடிக்காமல் நன்றாக வறுத்து கொதிக்கவிட்டு வடிகட்டி அருந்தலாம்.


ஒரு கைப்பிடி அளவுக்குப் புதினா இலை, மிளகு (3) இரண்டையும் விழுதாக அரைத்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சளி, இருமல், நுரையீரல் கோளாறுகள் நீங்கும்.


வெங்காயத் தாளை அரைத்து அதில் திப்பிலியைக் கலந்து காய வைத்துப் பொடியாக்கவும். அரை கிராம் பொடியைத் தேனில் கலந்து சாப்பிட்டால் சளி, இருமல், ஆஸ்துமா போன்றவை குணமாகும்.


வல்லாரைச் சாறில் திப்பிலியை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் கலந்து சாப்பிட்டால் சளி, கபம், இருமல் போன்றவை விலகும்.


கல்யாண முருங்கை இலையுடன் மூன்று மிளகு சேர்த்து அரைத்து அதிகையால் சாப்பிட்டால் சளி மற்றும் கப நோய்கள் குணமாகும்.


நல்வேளைக் கீரையை (அரை கிலோ) உலர்த்தி, சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, அதிமதுரம், தாளிசபத்திரி ஆகியவற்றைத் தலா 50 கிராம் சேர்த்து பொடியாக்கிக் கொள்ளவும். தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவு சாப்பிட்டால் சளி, இருமல், நுரையீரல் நோய்கள் தீரும்.


முசுமுசுக்கைக் கீரை (3), மிளகு (3) இரண்டையும் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் சளி கபம் குணமாகும்.


மணலிக் கீரையுடன், மிளகு சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் மூக்கில் இருந்து நீர் கொட்டுதல் குணமாகும்.


பரட்டைக் கீரைச் சாறில் சுக்கை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தேனில் ஒரு கிராம் அளவு குழைத்துச் சாப்பிட்டால் சளி, இருமல் குணமாகும்.


பரட்டைக் கீரை சாறில் திப்பிலியை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தேனில் நான்கு சிட்டிகை அளவு குழைத்துச் சாப்பிட்டால், சளி, சைனஸ், தும்மல் போன்றவை குணமாகும்.


சாணாக்கிக் கீரைச் சாறில் மிளகை ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி, நான்கு சிட்டிகை அளவு பொடியைத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் நெஞ்சில் கட்டிருக்கும் சளி குணமாகும்.



*


46. சிறுநீரகக் கல்


பசலைக் கீரைச் சாற்றில் சிறுநெருஞ்சிமுள்ளை ஊற வைத்து உலர்த்தி, பிறகு பசும்பாலுடன் சேர்த்து வேக வைத்து, உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் என 20 நாட்களுக்கு சாப்பிட்டால்ச சிறுநீரகக் கற்கள் கரையும். சிறுநீரகம் தொடர்பான பிற நோய்களும் குணமாகும்.


முள்ளிங்கிக் கீரை சாறை 30 மிலி அளவில் தொடர்ந்து 21 நாள்கள் குடித்தால் சிறுநீரகக் கற்கள் கரைந்து போகும். சிறுநீர்ப்பை வீக்கமும் குணமாகும்.


காசினிக் கீரையை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் சிறுநீரகக் கற்கள் குறையும்.


சாணாக்கிக் கீரைச் சாறை, அதிகாலையில் 30 மிலி அளவு குடித்தால் சிறுநீரகக் கற்கள் கரையும்.



*


47. சிறுநீரகக் கோளாறு


சிறுகீரையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து கஷாயம் தயாரித்து அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகக் கோளாறுகள் அனைத்தும் சரியாகும்.


வங்கார வள்ளைக் கீரையுடன் சிறிது சதகுப்பை, மஞ்சள் சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் சிறுநீரக நோய்கள் குணமாகும்.


சாணாக்கிக் கீரையை கஷாயமாக்கிச் சாப்பிட்டால் சிறுநீரகக் கோளாறுகள் குணமாகும்.



*


48. சிறுநீர் சொட்டு சொட்டாக வருதல் (சிறுநீர் ஒழுக்கு)


பாலக் கீரையுடன் சிறிது சீரகம், மஞ்சள் சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால், சொட்டுச் சொட்டாக சிறுநீர் வெளியேறும் பிரச்னை தீரும். சிறுநீர்ப்பையும் வலுப்படும்.


பண்ணைக் கீரையுடன் சிறிது சீரகம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால், சொட்டுச் சொட்டாக சிறுநீர் வெளியாவது (சிறுநீர் ஒழுக்கு) நிற்கும்.


*



49. சிறுநீர் கடுப்பு


சுக்குக் கீரையுடன் சோம்பு, சீரகம், மஞ்சள், வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் சிறுநீர்க்கடுப்பு சரியாகும்.



*


50. சிறுநீர் எரிச்சல்


கானாம்வாழைக் கீரையை அரைத்துச் சாப்பிட்டால் சிறுநீர் எரிச்சல் தீரும்.


பொடுதலைக் கீரையுடன் சிறிது சீரகம், பார்லி சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் சிறுநீர்க்கடுப்பு, எரிச்சல் நீங்கி, சிறுநீர் தாராளமாகப் பிரியும்.



*


51. சிறுநீர் பிரிய


முருங்கைக்கீரை (ஒரு கைப்பிடி), பார்லி (20 கிராம்), சீரகம் (கால் ஸ்பூன்), மஞ்சள் (சிறிதளவு) ஆகியவற்றை ஒன்றாக்கி கஷாயமாக்கி வடிகட்டிச் சாப்பிட்டால், நீர்க்கட்டு உடைந்து, சிறுநீர் தாராளமாகப் பிரியும்.


ஒரு கைப்பிடி அளவு மணத்தக்காளிக் கீரையுடன் ஒரு ஸ்பூன் பார்லி, நான்கு சிட்டிகை மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் நீர்ச்சுருக்கு, நீர் எரிச்சல், சிறுநீர் பிரியாமை போன்ற குறைபாடுகள் சரியாகும்.


புதினா இலையை ஒரு ஸ்பூன் கடுகு சேர்த்து எண்ணெய் விட்டு வதக்கி உப்பு சேர்க்காமல் சாப்பிட்டால் நன்கு சிறுநீர் பிரியும்.


வெங்காயத்தாளுடன் ஒரு ஸ்பூன் பார்லியைப் பொடியாக்கி சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால், நீர் எரிச்சல், நீரடைப்பு நீங்கி, சிறுநீர் தாராளமாகப் பிரியும்.


வெந்தயக் கீரையுடன் சிறிது சீரகம் சேர்த்துக் கஷாயமாக்கி சாப்பிட்டால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் சரியாகும்.


முள்ளங்கிக் கீரையுடன் ஒரு ஸ்பூன் பார்லியை கலந்து வேகவைத்துச் சாப்பிட்டால் நீர்க்கட்டு உடையும். சிறுநீரும் தாராளமாகப் பிரியும்.


கல்யாண முருங்கை இலையுடன் சிறிது பார்லியைச் சேர்த்து அரைத்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால், சிறுநீர் எரிச்சல் குறையும். சிறுநீர் தாராளமாகப் பிரியும்.


முடக்கத்தான் கீரையுடன் சிறிது சதகுப்பையைச் சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் சிறுநீர் தாராளமாகப் பிரியும்.


பிண்ணாக்குக் கீரையுடன் சிறிது சீரகம், மஞ்சள் சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் சிறுநீர் தாராளமாகப் பிரியும். நீர்க்கட்டும் குணமாகும்.


சதகுப்பைக் கீரையைக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் சிறுநீர் நன்கு பிரியும். கால் வீக்கமும் குணமாகும்.


*



52. சீதபேதி


பருப்புக் கீரையுடன் ஊற வைத்த வெந்தயத்தை ஒரு ஸ்பூன் சேர்த்து அரைத்துக் கொடுத்தால், சீதபேதி, இரத்த பேதி இரண்டும் உடனே நிற்கும்.


சுக்காங் கீரைச் சாறில் வெந்தயத்தை (அரை ஸ்பூன்) ஊற வைத்து அரைத்துச் சாப்பிட்டால் சிதபேதி, சீழ்மூலம் குணமாகும்.


பண்ணைக்கீரை சாறில் மாதுளம் பழத்தோலை அரைத்துச் சாப்பிட்டால் சிதபேதி குணமாகும்.


*



53. சீதளம்


புளிச்சக்கீரைச் சாறில் மிளகை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் அரை ஸ்பூன் சாப்பிட்டால் ருசியின்மை பிரச்னை தீரும்.



*


54. சைனஸ்


மணலிக் கீரை சாறில் திப்பிலியை ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கிச் சாப்பிட்டால் சைனஸ் பிரச்னை குணமாகும்.



*


55. சொறி


முகத்தில் சொறியா? கண்ட சலூன்களில் சுத்தம் செய்யாத கத்தியினால் முகசவரம் செய்துகொண்டால் முகத்தில் சொறி ஏற்படுவதுண்டு. இதற்கு ஒரு வெற்றிலையை நன்கு அரைத்து அத்துடன் எலுமிச்சம் பழச்சாற்றையும் கலந்து சொறியின்மீது தடவி வரவும். இவ்வண்ணம் சில நாட்கள் செய்து வந்தால் சொறி குணமாகும்.


சிறுகீரையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து நன்றாக அரைத்து உடலில் தேய்த்தால் சொறி, சிரங்கு, படை போன்ற தோல் நோய்கள் குணமாகும்.



*


56. தலைபாரம்


துயிலிக் கீரையுடன் பூண்டு சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் தலைபாரம் குணமாகும்.


*



57. தலைவலி


சுக்கை எடுத்து கொஞ்சம் தண்ணீர் விட்டு உரசி நெற்றிப்பொட்டில் கனமாக பத்துப் போட வேண்டும். கொஞ்சம் தகதகவென்று எரியும். சிறிது நேரத்தில் தலைவலி பறந்துபோகும்.


கற்பூரவள்ளி இலையை எடுத்து சாறு பிழிந்து, அதனுடன் கொஞ்சம் நல்லெண்ணெய், சர்க்கரை சேர்த்துக் கலக்கி நெற்றுப்பொட்டில் பத்து போட்டால் தலை வலி சரியாகும்.


நான்கு மிளகை தண்ணீர் விட்டு அரைத்து, கொஞ்சம் கற்பூரத்தூளை சேர்த்து நெற்றியில் பத்து போட்டால் தலைவலி சரியாகும்.


சிலருக்கு சைனஸ் காரணமாக தலைவலி வரும். அவர்கள் இரவில் தூங்கும்பொழுது தலையணையில் நொச்சி இலையை வைத்து தூங்கினால் நாளடைவில் தலைவலி சரியாகும். நொச்சி இலை சாறு எடுத்து, நல்லெண்ணெய் விட்டு நன்றாகக் காய்ச்சி, சூடு ஆறியதும் தலைக்குத் தேய்த்து ஒரு மணி நேரம் வெந்நீரில் குளிக்க வேண்டும். இதை வாரத்திற்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாள் என்று இரண்டு மாதம் வரைக்கும் செய்தால் சைனஸ் சரியாகும். தலைவலியும் சரியாகும்.


பருப்புக் கீரையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால், உடல் சூட்டால் உண்டாகும் தலைவலி நீங்கும்.


வெள்ளை எள்ளை எருமைப்பால் விட்டு அரைத்து, முன் நெற்றியில் பத்துப் போட்டு சூரியன் உதிக்கும்போது வரும் வெளிச்சத்தில் காட்டி வந்தால் ஒன்றைத் தலை வலி மூன்றே நாளில் சரியாகும்.


கொத்தமல்லிச் சாறில் சுக்கை இழைத்து நெற்றில் பற்றுப்போட்டால் தலைபாரம், தலைவலி குணமாகும். கொத்தமல்லிச் சாறை சந்தனப்பொடி குழைத்து பற்றுப் போட்டால் பித்தத்தால் ஏற்படும் தலைவலி சரியாகும். கொத்தமல்லியோடு சந்தனம், நெல்லி வற்றல் சேர்த்து தண்ணீரில் ஊற வைத்துக் குடித்தால் தலைசுற்றல் குணமாகும்.


கரிசலாங்கண்ணி கீரையை மிளகு, சோம்பு சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் அனைத்து விதமான தலை வலியும் தீரும்.


தூதுவளைக் கீரை (ஒரு கைப்பிடி) வெற்றிலை (ஒரு கைப்பிடி) சுக்குப்பொடி (25 கிராம்) மஞ்சள் (25 கிராம்) ஆகியவற்றை ஒன்றாக அரைத்து, பட்டாணி அளவு மாத்திரைகளாக செய்து நிழலில் உலர்த்திப் பத்திரப்படுத்தவும். இதில் ஒரு மாத்திரையை உள்ளுக்குச் சாப்பிட்டு, ஒரு மாத்திரையை வெந்நீரல் கரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால், தலைவலி, தலைபாரம், சைனஸ் போன்றவை இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும்.


கொடிப்பசலைக் கீரையை நீரில் போட்டு அலசினால் கொழகொழப்பான திரவம் கிடைக்கும். இதைத் தலை அல்லது நெற்றியில் தடவினால் தலைவலி குணமாகும். நல்ல தூக்கமும் வரும்.


நல்வேளைக் கீரையை அரைத்து தலையில் வைத்துக் கட்டினால், நெடுநாள் தொல்லைதரும் தலைவலி குணமாகும்.



*


58. தலைமுடி


கறிவேப்பிலை, கரிசலாங்கண்ணி இரண்டையும் சம அளவு எடுத்து உலர்த்திப் பொடி செய்து, தினமும் காலை மாலை இரு வேளையும் 5 கிராம் அளவு (ஒரு ஸ்பூன்) சாப்பிட்டால் தலை முடி கறுமையாகவும் அடர்த்தியாகவும் வளரும்.



*


59. தாகம்


வெங்காயத் தாளுடன் சீரகம், சோம்பு சேர்த்து அரைத்து கஷாயமாகச் சாப்பிட்டால் தீராத தாகம் தீரும்.


கொடிப்பசலைக் கீரையுடன் சிறிது சீரகம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் தீராத தாகமும் தீரும்.


*


60. தாய்ப்பால் சுரக்க


கல்யாண முருங்கை இலையுடன் சம அளவு அம்மான் பச்சரிசி இலையைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.


பிரசவித்த பெண்கள் சிலருக்குத் தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் அம்மான் பச்சரிசிக் கீரையின் பூக்களை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரைத்து, பசும்பாலில் கலந்து 18 நாட்களுக்கு காலையில் மட்டும் சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.


முள்ளிக்கீரையுடன் பச்சைப் பயறு சேர்த்து அவித்துச் சாப்பிட தாய்ப்பால் பெருகும்.


பாற்சொரிக் கீரையை சிறிது பச்சைப் பயிறு சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் தாய்ப்பால் பெருகும்.


சதகுப்பைக் கீரையை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும்.



*


61. தீப்புண் ஆற


பருப்புக் கீரையை அரைத்து தீப்புண்கள் மீது தடவினால் விரைவில் புண்கள் ஆறும்.


*



62. தேள் கொட்டு


தேள் கொட்டினால் விஷம் ஏறும். கொட்டிய இடத்தில் கடுப்பு இருக்கும். வெற்றிலை இரண்டை எடுத்துப் பத்து மிளகை அதில் வைத்து மடித்து வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கினால் விஷம் இறங்கும். வலி நிற்கும் இது ஓர் உடனடி நிவாரணி.



*


63. தூக்கம் வர


நொச்சி இலைகளைக் கொண்டு வந்து கொதிக்கும் நீரில் போட்டு ஆவி பிடித்தால், இரவில் நல்ல தூக்கம் வரும். வெங்காயத்தை உணவில் நிறைய சேர்த்துக்கொள்ளுதல் நல்லது. வெங்காயத்தை நசுக்கி அடிக்கடி முகர்ந்தாலும் நல்ல தூக்கம் வரும்.


ஆரைக்கீரையுடன் சிறிது சீரகம் சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் நன்றாகத் தூக்கம் வரும்.


முக்குளிக் கீரையை சூப் செய்து மாலை நேரத்தில் சாப்பிட்டால் இரவு நன்றாக தூக்கம் வரும்.


மணலிக் கீரை, துளசி, வில்வம் மூன்றையும் சம அளவு எடுத்து உலர்த்திப் பொடியாக்கி தினமும் இரவு நேரத்தில் 2 கிராம் அளவு சாப்பிட்டால் நன்றாகத் தூக்கம் வரும்.


சுக்குக் கீரையுடன் சோம்பு சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் நன்றாகத் தூக்கம்வரும்.



*


64. தைராய்டு நோய்கள்


பசலைக் கீரைச் சாறு (100 மிலி) மற்றும் இஞ்சிச் சாறு (100 மிலி) ஆகியவற்றில் 100 கிராம் கொள்ளை ஊற வைத்து பிறகு காய வைத்துப் பொடியாக்கிக்கொள்ளவும். இதில் தினமும் 2 ஸ்பூன் எடுத்து சிறிய வெங்காயம் சேர்த்து கஞ்சி காய்ச்சிக் குடித்தால் தைராய்டு நோய்கள் குணமாகும்.



*


65. தொண்டைச் சதை குணமாக (Tonsil)


மணத்தக்காளிக் கீரையில் இருந்து சாறு எடுத்து, அதில் அதிமதுரத்தை ஊற வைத்து உலர்த்தி தூள் செய்து, தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் தொண்டை சதை (Tonsil) குணமாகும். இனிய குரல் வளம் உண்டாகும்.


தூதுவளைக் கீரைச் சாறில் அதிமதுரத்தை ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி, 2 கிராம் பொடியைத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் டான்சில் எனப்படும் தொண்டைச்சதை குணமாகும்.


*



66. தொண்டை


பிண்ணாக்குக் கீரை சாறில் அதிமதுரத்தை ஊற வைத்து, பிறகு காய வைத்துப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் சாப்பிட்டால் நல்ல குரல் வளம் உண்டாகும். தொண்டையில் ஏற்படும் நோய்களும் குணமாகும்.



*


67. நரம்புத் தளர்ச்சி


அரைக்கீரை சாற்றில் மிளகை ஊற வைத்து உலர்த்தித் தூளாக்கி தினமும் 5 சிட்டிகை அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் கை, கால் நடுக்கம், நரம்புத் தளர்ச்சி போன்றவை சரியாகும்.


கானாம்வாழைக் கீரை சாறில் ஜாதிக்காயை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டால், ஆண்மைக் குறைவும் நரம்புத் தளர்ச்சியும் குணமாகும்.


ஆரைக்கீரைச் சாறு எடுத்து, தொடர்ந்து இரண்டு நாள் அதிகாலையில் 30 மிலி அளவில் சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.




*

68. நரை


கரிசலாங்கண்ணி கீரைச் சாறில் நெல்லிமுள்ளி, சீரகம் இரண்டையும் சம அளவு ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவு சாப்பிட்டால் இளநரை மறையும்.



*


69. நினைவாற்றல்


சிறுகீரையோடு மிளகுத்தூள், உப்பு சேர்த்து சமைத்து கொஞ்சம் நெய்யையும் சாதத்தில் போட்டு சாப்பிட்டால் அற்புதமான நினைவாற்றல் கிடைக்கும்.


ஆரைக்கீரையை நிழலில் உலர்த்திப் பொடியாக்கிச் சாப்பிட்டால், அற்புதமான நிறைவாற்றல் பெறலாம்.



*


70. நீரிழிவு


நித்தியகல்யாணிப் பூ (காக்கட்டான், சுடுகாட்டுப்பூச்செடி) 6 எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை 200 மில்லி அளவு நீரில் போட்டு பாதியளவாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக்கொள்ள வேண்டும். இந்தக் கஷாயத்தை ஒரு நாளைக்கு நான்கு தடவை சாப்பிட வேண்டும். மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை சாப்பிடுவது நல்லது.


கறிவேப்பிலையை உலர்த்தித் தூளாக்கி தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.


முள்ளங்கிக் கீரை சாறில் வெந்தயத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் சாப்பிட்டால் நீரிழிவு குணமாகும்.


வல்லாரை இலை, பொடுதலைக் கீரை இரண்டையும் நிழலில் தனித்தனியே உலர்த்திப் பொடியாக்கி, சம அளவு எடுத்து ஒன்றாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமாகும்.


பொடுதலைக் கீரையை வெந்தயம் சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.


ஆரைக்கீரைச் சாறில் வெந்தயத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் 5 கிராம் அளவு சாப்பிட்டால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம்.


சாணாக்கிக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் சர்க்கரை நோயோடு அதனால் ஏற்பட்ட புண்களும் குணமாகும்.



*


71. நீர் அடைப்பு


கொடிப்பசலைக் கீரை, கத்தரி இலை இரண்டையும் சம அளவு (ஒரு கைப்பிடி) எடுத்து கஷாயமாக்கி வடிகட்டி நான்கு சிட்டிகை வெங்காரபஸ்பத்தை கலக்கிக் குடித்தால் நீர் அடைப்பு, நீர் எரிச்சல் குணமாகும்.


*



72. நீர்க்கடுப்பு


முளைக்கீரை சாற்றில் உளுந்தை ஊற வைத்து அரைத்துச் சாப்பிட்டால் நீர்க்கடுப்பு மறையும்.


பசலைக் கீரைச் சாறில் பார்லி, சீரகம் இரண்டையும் சம அளவு எடுத்து ஊற வைத்து உலர்த்திப் பொடி செய்து, அதைக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் நீர் எரிச்சல், நீர்க்கடுப்பு போன்றவை குணமாகும்.


பருப்புக் கீரை சானமும் 60 மி.லி. அளவில் காலை மாலை இரு வேளையும் சாப்பிட்டால் நீர்ச்சுருக்கு, நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் போன்றவை குணமாகும்.



*


73. நீர்க்கட்டு


கொடிப்பசலைக் கீரைச் சாறு ஒரு ஸ்பூன் அளவு எடுத்து அதில் சிறிது கற்கண்டு சேர்த்துக்கொடுத்தால், குழந்தைகளுக்கு ஏற்படும் நீர்க்கட்டு குணமாகும்.


முள்ளிக்கீரையுடன் சிறிது சீரகம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் நீர்க்கட்டு, நீர்க்கடுப்பு போன்றவை மறையும்.



*


74. நுரையீரல் நோய்


பொடுதலைக் கீரையுடன் மிளகு, பூண்டு, மஞ்சள் சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் சள, கபம், நுரையீரல் நோய்கள் குணமாகும்.


துயிலிக் கீரைச் சாறில் நல்லெண்ணெய் கலந்து தைலமாகக் காய்ச்சி, மார்பில் தேய்த்துக்கொண்டால், நுரையீரல் கோளாறுகள் தீரும்.



*


75. நெஞ்சு எரிச்சல்


குப்பைக் கீரையுடன் ஓமம், மஞ்சள் இரண்டையும் சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.


முக்குளிக் கீரையுடன் பூண்டு, மிளகு, ஓமம் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.



*


76. பசி எடுக்க


முளைக்கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம், மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் பசியின்மை நீங்கி, நல்ல பசி உண்டாக்கும்.


புதினா இலைச்சாறு, எலுமிச்சை சாறு இரண்டையும் தலா 100 மிலி அளவில் எடுத்து கால் கிலோ தேனுடன் சேர்த்து காய்ச்சி இறக்கிக் கொள்ளவும். இதை காலை மாலை இரு வேளையும் 15 மிலி அளவுக்குச் சாப்பிட்டால் நன்றாகப் பசி எடுக்கும்.


கொத்தமல்லிச் சாறில் பெருஞ்சீரகம், ஓமம் இரண்டையும் ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி, தினமும் உணவுக்கு முன் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும். ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.


கை அளவு கறிவேப்பிலையை மூன்று மிளகு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் நல்ல பசி உண்டாகும்.


வெங்காயத்தாளுடன் சிறிது இஞ்சி சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் நல்ல பசி உண்டாகும்.


முள்ளங்கிக் கீரை சாறில் மிளகை ஊற வைத்துப் பொடியாக்கி, அதிகாலையில் 2 கிராம் அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும்.


பிரண்டையின் இளந்தண்டை நெய்விட்டு வதக்கிச் சாப்பிட, சுவையின்மை, ருசியின்மை நீங்கி, நன்றாகப் பசி எடுக்கும்.


தூதுவளைக் கீரையை நன்றாக அரைத்துச் சாறு எடுத்து, மிளகுத் தூள் மற்றும் தேன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் நன்றாகப் பசி எடுக்கும்.


முடக்கத்தான் கீரையுடன் சின்ன வெங்காயம், சீரகம், மஞ்சள்தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் நன்றாகப் பசி எடுக்கும்.


நல்வேளைக் கீரையுடன் சிறிது சீரகம், மஞ்சள் சேர்த்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்.


ஆரைக்கீரையைப் பருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் நல்ல ருசியும் பசியும் உண்டாகும்.


புளியாரைக் கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் நன்றாகப் பசி எடுக்கும்.


சுக்காங் கீரையுடன் சிறிது இஞ்சி, பூண்டு இரண்டையும் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் நன்றாகப் பசி எடுக்கும்.


முள்ளிக்கீரையை மிளகு, சீரகம் சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும்.


துயிலிக் கீரையுடன் பருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் நன்றாகப் பசி எடுக்கும்.


பாற்சொரிக் கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து சூப் செய்து அதிகாலையில் சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும்.


சாணாக்கிக் கீரையை மிளகு, பூண்டு, வெங்காயம், மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும்.



*


77. பயம் விலக


அதிகாலையில் நான்கு வல்லாரை இலைகளை பறித்து நன்றாக மென்று தின்று அடுத்த நான்கு மணி நேரத்திற்கு எதுவும் சாப்பிடாமல் இருந்தால், எந்த விதமான அச்சம், பயம் போன்ற பல வகையான மனநோய்களும் விலகும்.


*



78. பருமன்


சிறுகீரை (2 கை அளவு), பார்லி (ஒரு கை அளவு) ஆகியவற்றோடு கொஞ்சம் சீரகம், நான்கு சிட்டிகை மஞ்சள் சேர்த்துக் கொதிக்க வைத்து, அதிகாலையில் சாப்பிட்டால் உடல் வீக்கம், உடல் பருமன் குறையும்.


மணத்தக்காளிக் கீரையை (100 கிராம்) சுத்தம் செய்து, கொதிக்கும் நீரில் 5 நிமிடம் போட்டு எடுத்து, அதில் எலுமிச்சம் பழத்தை (பாதி அளவு) பிழிந்து, சின்ன வெங்காயத்தை (2) அரிந்து போட்டு அரைத்துச் சாறு எடுக்கவும். இதைக் காலை உணவுக்குப் பிறகு சாப்பிட்டால், உடல் எடை, பெருவயிறு போன்றவை குறையும்.



*


79. பல் கோளாறுகள்


பல் ஈறு வீக்கத்திற்கு நெல்லிக்காயை நசுக்கி ஈறுகளில் தேய்த்து வாருங்கள். சீக்கிரத்தில் குணமடையும்.


அரைக்கீரை வேர், நில வேம்பு, சிறிது மஞ்சள் மூன்றையும் சேர்த்துக் கஷாயம் தயாரித்து வாய் கொப்பளித்தால் பல்வலி, பல் கூச்சம் போன்ற பல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.


புதினா இலை உலர்த்தி, சிறிது உப்பு கலந்து தொடர்ந்து பல் துலக்கி வந்தால் பல்வலி, பல் கூச்சம், பல் ஈறுகளில் ரத்தம் வடிதல் போன்ற பாதிப்புக்கள் தீரும்.


துத்திக்கீரையுடன் சிறிது படிகாரம் சேர்த்து அரைத்து, தண்ணீரில் கரைத்து வாய் கொப்பளித்தால் பல்வலி, பல் ஈறுகளில் உண்டாகும் இரத்தம் கசிவு, ஈறு அரிப்பு போன்ற குறைபாடுகள் தீரும்.



*


80. பால்வினை நோய்


பசலைக் கீரை, வேப்பிலை, வெள்ளை எருக்கு, ஆடுதீண்டாப்பாளை ஆகியவற்றைச் சம அளவில் எடுத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டால், ஆண்குறியில் உள்ள புண், சிபிலிஸ் போன்ற பால்வினை நோய்கள் முழுமையாக குணமாகும்.


*



81 பித்தம்


முளைக்கீரைச் சாற்றில் சீரகத்தை ஊற வைத்து, உலர்த்தித் தூள் செய்து சாப்பிட்டால் பித்த நோய்கள், மயக்கம், இரத்த அழுத்தம் போன்றவை சரியாகும்.


சிறு கீரையுடன் சிறுபருப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால் அனைத்து விதமான பித்த நோய்களும் குணமாகும்.


பசலைக் கீரைச் சாறில் நெல்லிக்காய் வற்றல், சோம்பு இரண்டையும் சம அளவில் ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி, தினமும் அதிகாலையில் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும். பித்தம் தணியும்.


அகத்திக்கீரை சாற்றில் சிறிது உப்பு சேர்த்துக் குடித்தால் வாந்தி ஏற்பட்டு பித்த நீர் வெளியாகும். இதனால் உடலில் இருக்கும் அதிகப்படியான பித்தம் குறையும்.


கொத்தமல்லியுடன் சிறிது சீரகம், மஞ்சள் சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் பித்த நோய்கள் தீரும்.


பிரண்டை இலையுடன் இஞ்சி, பூண்டு சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டால் பித்த மயக்கம், உடல் எரிச்சல் போன்றவை விலகும்.


கல்யாண முருங்கை இலை, சீரகம் இரண்டையும் நெல்லிச் சாறு விட்டு அரைத்து தினமும் அதிகாலையில் சாப்பிட்டால் பித்தம், பித்த மயக்கம், இரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் சரியாகும்.


துத்திக் கீரையை சீரகம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால், பித்த மயக்கம், வாந்தி போன்றவை குணமாகும்.


முசுமுசுக்கைக் கீரையுடன் ஒரு நெல்லிக்காயைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் பித்தம் தணியும்.


ஆரைக் கீரைச் சாறில் இஞ்சியை (ஒரு துண்டு) சேர்த்து அரைத்துக் குடித்தால் பித்த நோய்கள் விலகும்.


புளியாரைக் கீரைச் சாறில் சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கிச் சாப்பிட்டால் பித்த நோய்கள் குணமாகும்.


பாலக் கீரை சாறு எடுத்து அதில் எலுமிச்சம் பழத்தை (பாதி அளவு) பிழிந்து சாப்பிட்டால் பித்தம் தொடர்பான நோய்கள் விலகும்.


முக்குளிக் கீரைச் சாறில் நெல்லிக்காய் வற்றலை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் அதிகாலையில் 2 கிராம் அளவு சாப்பிட்டால் பித்த நோய்கள் தீரும்.


*

82. பித்தப் பை கல்


கரிசலாங்கண்ணிச் சாறை (30 மிலி) 48 நாட்கள் அதிகாலையில் சாப்பிட்டால் பித்தப்பை கற்கள் கரையும்.



*


83. பித்த வெடிப்பு


அகத்திக்கீரை, மருதாணி இலை, மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்துத் தடவினால், கால்களில் ஏற்படும் பித்த வெடிப்புக்கள் குணமாகும்.



*


84. புண்


பொடுதலைக் கீரையை அரைத்து, ஆசனவாய்க் கட்டிகள் மீது கட்டினால், அவை பழுத்து உடைந்து குணமாகும். மேலும் புண், அக்கிப்புண், நெறிக்கட்டி போன்றவற்றின் மீது பூசினால் குணம் பெறலாம்.


துத்திக் கீரையை அரைத்து சிறிது மஞ்சள் தூள் கலந்து புண்கள் மீது தடவினால், அவை விரைவில் ஆறும்.


ஆரைக்கீரையுடன் சிறிது சீரகம் சேர்த்து அரைத்து சாறு எடுத்து தேங்காய் எண்ணெய் சேர்த்து தைலமாகக் காய்ச்சி ஆறாத புண்கள் மீது தடவினால் அவை விரைவில் ஆறும்.


பண்ணைக் கீரையை அரைத்துச் சாறு எடுத்து, புண்கள் மீது தடவினால் அவை குணமாகும்.



*


85. புற்றுநோய்


கரிசலாங்கண்ணி கீரைச் சாறு (30 மிலி), பருப்புக் கீரை சாறு (30மிலி) இரண்டையும் ஒன்றாகக் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டால் ஆரம்ப நிலையில் உள்ள புற்றுநோய்கள் குணமாகும்.




***



"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "