...

"வாழ்க வளமுடன்"

25 நவம்பர், 2010

எளிய பாட்டி வைத்தியம் -- PART = 2

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
14. உடல் மினுமினுக்க


அகத்திக்கீரை, ஊற வைத்த வெந்தயம் இரண்டையும் சேர்த்து அரைத்து, அடை தட்டிக் காய வைக்கவும். பிறகு அதை நெல்லெண்ணெயில் வடை சுடுவது போல் சுட்டு எடுத்துவிட்டு, எண்ணெயைப் பத்திரப்படுத்தி வைத்து, தினமும் அதை உடலில் தடவிக் குளித்தால் உடல் மினுமினுக்கும். கண்களுக்கும் குளிர்ச்சி உண்டாகும்.

**

15. உடல் வனப்பு


சிறுகீரையை குடை மிளகாய், சிறு பருப்பு, பூண்டு ஆகியவற்றுடன் சேர்த்துச் சமைத்து, தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டால் உடல் வனப்பு பெறும்.


பொன்னாங்கண்ணி கீரையை நெய்யில் வதக்கி, அத்துடன் சிறிது மிளகு, உப்பு சேர்த்துக் கடைந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டால் உடலுக்கு அழகும், பொன்னிறமும் ஒரு சேர உண்டாகும். நீடித்த ஆயுளும், நோயில்லா வாழ்க்கையும் பெறலாம்.

**

16. உடல் வலி


துத்திக் கீரையை தண்ணீரில் போட்டு வேக வைத்து பிறகு, தண்ணீரில் போட்டு குளித்தால், உடல் வலிகள் சரியாகும்.

***

17. உடல் பருக்க


மணத்தக்காளிக் கீரையில் இருந்து சாறு எடுத்து, அதைத் தேனோடு சேர்த்து சர்பத் போல் காய்ச்சி தினமும் சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் பருக்கும்.


உலர்ந்த கறிவேப்பிலை, முந்திரிப் பருப்பு, நெல்லிமுள்ளி மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்துப் பாலில் கலக்கிக் குடித்தால், இளைத்த உடல் பெருக்கும்.


பிரண்டையைக் கணு மற்றும் நார் நீக்கி, நெய்யில் வதக்கி, மிளகு, உப்பு சேர்த்துச் சாப்பிட்டால் இளைத்த உடல் பெருக்கும்.


சுக்காங் கீரையைப் பருப்பு போட்டுக் கடைந்து சாப்பிட்டால் இளைத்த உடல் பெருக்கும்.


**

18. உடல் வலிமை பெற


பசலைக் கீரைச் சாறில் கருப்பு உளுந்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி கஞ்சி காய்ச்சிக் குடித்தால், உடல் வலிமை பெறும். இளைத்த உடல் பெருக்கும்.


புளிச்சக்கீரை சாறுடன் உளுந்தை ஊற வைத்து அரைத்துச் சாப்பிட்டால் உடல் வலிமை பெறும்.


வெந்தயக் கீரையை அரைத்து, அதில் மாதுளை ஓடு, வில்வ ஓடு இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்துக் கலந்து காய வைத்துப் பொடியாக்கித் தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவு சாப்பிட்டால் நல்ல உடல் வலிமை உண்டாகும். சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.


தினமும் நான்கு வல்லாரை இலையுடன் இரண்டு பாதாம் பருப்பு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால், உடல் வலிமை பெறும். இனிமையான குரல் வளம் உண்டாகும்.


முடக்கத்தான் கீரைச் சாறில் உளுந்து, கருப்பு எள் இரண்டையும் சம அளவு போட்டு ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, 2 ஸ்பூன் அளவு எடுத்து, சின்ன வெங்காயம் சேர்த்துக் கஞ்சி காய்ச்சிக் குடித்தால் உடல் வலிமை பெறும்.


கானாம்வாழைக் கீரையுடன் வேப்பந்துளிர், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் வலுப்பெறும். இரத்தம் சுத்தமாகும்.


அம்மான் பச்சரிசி கீரையுடன் கடுக்காய் பொடி கலந்து சாப்பிட்டால், உடல் பலம் அதிகரிக்கும். உடல் வலிமை பெறும்.


முசுமுசுகைக் கீரையுடன் வெந்தயம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் உடல் பலம் உண்டாகும்.


பாலக்கீரையை அரிந்து, சின்ன வெங்காயம், சீரகம், மிளகு ஆகியவற்றுடன் சேர்த்து வதக்கிச் (அசைவம் சாப்பிடுபவர்கள் நாட்டுக்கோழி முட்டையைச் சேர்த்துக்கொள்ளலாம்) சாப்பிட்டால் உடல் வலிமை உண்டாகும்.


பிண்ணாக்குக் கீரை சாறில் அமுக்கரா கிழங்கை ஊற வைத்து, பிறகு காய வைத்துப் பொடியாக்கிச் சாப்பிட்டால், உடல் பலம் அதிகரிக்கும். உணர்வு நரம்புகளும் வலுப்பெறும்.


துயிலிக் கீரை சாறில் அமுக்கரா சூரணத்தைக் கலந்து சாப்பிட்டால் உடல் பலவீனம் தீரும்.


பாற்சொரிக்கீரையைப் பொடியாக நறுக்கி, சப்பாத்தி மாவுடன் சேர்த்துப் பிசைந்து, சப்பாத்தி செய்து சாப்பிட்டால் உடல் வலிமை உண்டாகும்.

***


19. எடை குறைய


பசலைக்கீரை சாறில் ஒரு ஸ்பூன் முள்ளங்கி விதையை ஊற வைத்து அரைத்துச் சாப்பிட்டால் உடல் எடை குறையும்.


காசினிக் கீரையை உலர்த்திப் பொடியாக்கி தினமும் இரவில் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.


குப்பைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் அதிகப்படியான உடல் எடை குறையும்.


நல்வேளைக் கீரையை பூண்டு சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.


நச்சுக்கொட்டைக் கீரைச் சாறில் பாதி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து குடித்தால் உடல் பருமன் குறையும்.


முள்ளிக் கீரை சாறில் கொள்ளை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் ஒரு வேளை கஞ்சி காய்ச்சிக் குடித்தால் உடல் பருமன் குறையும்.


வங்கார வள்ளைக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.


**

20. எலும்பு ஜூரம்


புளிச்சக்கீரை, பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் எலும்பு ஜூரம் தணியும்.



***


20. கட்டி


புளிச்சக்கீரையை அரைத்து கட்டிகள் மீது கட்டினால் அவை உடைந்துபோகும்.


கொத்தமல்லியை, நல்லெண்ணெய் சேர்த்து வதக்கி, வீக்கம் மற்றும் கட்டிகள் மீது கட்டினால், அவை சீக்கிரம் கரைந்து போகும் அல்லது பழுத்து உடைந்து, புண் எளிதில் ஆறிவிடும்.


நல்வேளைக் கீரையை அரைத்து கட்டிகள் மீது கட்டினால் அவை பழுத்து, உடைந்து, சீழ் பிடிக்காமல் குணமாகிவிடும்.


துத்திக்கீரை சாறு எடுத்து, பச்சரிசி மாவைக் கலந்து கட்டிகள் மீது பற்றுப்போட்டால், அவை பழுத்து உடைந்து விரைவில் ஆறும்.

**

21. கணையக் கோளாறு


காசினிக் கீரை, சிறுகுறிஞ்சான் இலை இரண்டையும் சம அளவில் உலர்த்திப் பொடியாக்கிச் சாப்பிட்டால் கணையக் கோளாறுகள் அனைத்தும் தீரும்.


**



22. கண்கள் அழகு பெற


ஆப்பிள் பழத்தை நறுக்கி, சுத்தமான தேனில் நனைத்துச் சாப்பிட வேண்டும். சில வாரங்களுக்குச் சாப்பிட வேண்டும். அதன் பிறகு உங்கள் கண்கள் அழகு பெறுவதோடு சிறந்த ஒளியையும் பெறும்.



**


23. கண் நோய்கள் தீர


பொன்னாங்கண்ணிக் கீரையுடன் சிறிது மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள், பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து சூப் செய்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) வரை சாப்பிட்டால் கண் பார்வை கூர்மையாகும். கண் தொடர்பான நோய்கள் அனைத்தும் தீரும்.


பொன்னாங்கண்ணிக் கீரையை நெய்விட்டு வதக்கி கண்கள் மீது வைத்துக் கட்டினால் கண் நோய்கள் குணமாகும்.


பொன்னாங்கண்ணிக் கீரையைத் தைலமாகக் தயாரித்து தலையில் தடவிக் குளித்தால் கண் புகைச்சல், கருவிழி நோய், கண் அழுத்தம், உடல் சூடு, வெட்டைச் சூடு போன்ற அனைத்துப் பிரச்னைகளும் சரியாகும்.


பாலக் கீரையைத் தொடர்ந்து 21 நாட்களுக்கு கடைசலாகவோ, சூப்பாகவோ செய்து சாப்பிட்டால் கண் தொடர்பான அனைத்து பாதிப்புகளும் குணமாகும்.



**


24. கண் புகைச்சல்


சிறு கீரையுடன் மிளகு, வெங்காயம், பூண்டு, மஞ்சள் சேர்த்து சூப்பாகச் செய்து சாப்பிட்டால் கண் புகைச்சல், கண்காசம், கண் படலம் போன்றவை குணமாகும்.



**


25. கப நோய்கள்


அரைக்கீரைத் தண்டுடன் மிளகு, மஞ்சள் சேர்த்து கஷாயம் தயாரித்து தினமும் அதிகாலையில் சாப்பிட்டால் சளி, இருமல் மற்றும் நுரையீரல் தொடர்பான கபநோய்கள் குணமாகும்.


சிறு கீரையுடன் சிறிது சுக்கு, மிளகு, திப்பிலி, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் உஷ்ணத்தால் ஏற்படும் கப நோய்கள் விலகும்.


முருங்கைக் கீரைச் சாறில் மிளகு, அதிமதுரம் இரண்டையும் ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் 2 கிராம் அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால், கப நோய்கள், இருமல், காச நோய்கள் அனைத்தும் தீரும்.


கொத்தமல்லியோடு உப்பைக் கொஞ்சம் கூடுதலாகச் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் வாந்தி ஏற்பட்டு அதிகப்படியான கபம் வெளியேறும்.


கரிசலாங்கண்ணிக் கீரைச் சாறில் திப்பிலியை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலையில் 2 கிராம் சாப்பிட்டால், கப நோய்கள், ஆஸ்துமாவால் ஏற்படும் மூச்சிரைப்பு போன்றவை குணமாகும்.


துயிலிக் கீரை, தூதுவளை இலை இரண்டையும் சம அளவில் அரைத்துச் சாப்பிட்டால் கப நோய்கள் குணமாகும்.


**



26. கர்ப்பப்பை கோளாறுகள்


சதகுப்பைக் கீரையை சீரகம், மிளகு, பூண்டு சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் கர்ப்பப்பை கோளாறுகள் அனைத்தும் விலகும்.


**



27. கல்லீரல் நோய்கள்


பொன்னாங்கண்ணிக் கீரையைக் கடைந்தோ அல்லது சூப்பாகவோ செய்து சாப்பிட்டால் கல்லீரல் சார்ந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்.


பருப்புக் கீரை, கீழாநெல்லி இரண்டையும் சம அளவு எடுத்து, சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் கல்லீரல் வீக்கம் குணமாகும்.


கறிவேப்பிலை, நாவல் மர இலை, கீழாநெல்லி மூன்றையும் விழுதாக அரைத்து பாலில் கலக்கிச் சாப்பிட்டு வந்தால், கல்லீரல் சார்ந்த பாதிப்புக்கள் குணமாகும்.


கரிசலாங்கண்ணிக் கீரையை மிளகு சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் கல்லீரல் வீக்கம், இரத்த சோகை போன்ற குறைபாடுகள் சரியாகும்.


முள்ளங்கிக் கீரை சாறுடன் வெல்லம் கலந்து சாப்பிட்டால் கல்லீரல் நோய்கள் குணமாகும்.


காசினிக் கீரையுடன் சீரகம், மஞ்சள் சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் கல்லீரல் வீக்கம் குணமாகும்.


கைப்பிடி அளவு சுக்காங் கீரையை எடுத்து அதில் சீரகம் (20), சின்ன வெங்காயம் (1) சிறிது எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து, அதிகாலையில் சாப்பிட்டால் கல்லீரல் பாதிப்புக்கள், மஞ்சள் காமாலை போன்றை குணமாகும்.


**



28. கழிச்சல்


துத்திக் கீரையை சாறு பிழிந்து (15 மிலி), ஒரு ஸ்பூன் நெய் கலந்து சாப்பிட்டால் கடுமையான கழிச்சல் நோயும் குணமாகும்.



**


29. காச நோய்


முசுமுசுக்கைக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், காச நோய் குணமாகும்.


**



30. காது நோய்


தூதுவளைக் கீரையை காய வைத்து பொடியாக்கி தினமும் சாப்பிட்டால், காது தொடர்பான நோய்கள் அனைத்தும் சரியாகும்.


முடக்கத்தான் கீரைச் சாறில் சில துளிகளைக் காதில் விட்டால் காது வலி குணமாகும்.


நல்வேளைக் கீரைச் சாறை ஓரிரு துளிகள் காதில் விட்டுக்கொண்டால், காது வலி குணமாகும்.


**


31. காதில் ஈ எறும்பு புகுந்துவிட்டதா?


அது மாதிரி சமயங்களில் காதைக் குடையவோ கசக்கவோ கூடாது. உடனே கால் அவுன்ஸ் தண்ணீரில் அரை அவுன்ஸ் உப்பைப் போட்டுக் கரைத்து, அதைக் காதில் கொஞ்சம் விட வேண்டும். உடனே உள்ளே சென்ற பூச்சி வெளியே வந்துவிடு•. அப்படி வராவிட்டால் காதைச் சாய்க்கவும். தண்ணீரோடு அவை செத்து விழும்.


**



31. காமம்


அரைக்கீரையுடன் குடைமிளகாய், கசகசா, தேங்காய்ப்பால் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வர, காமம் அதிகரித்து, அளவில்லா கலவிச் சுகம் உண்டாகும்.


முருங்கைக் கீரைச் சாறில் ஜாதிக்காயை உடைத்து ஊற வைத்து எடுத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் இரவில் 2கிராம் சாப்பிட்டால், காம உணர்வு அதிகரித்து கலவிச் சுகம் உண்டாகும்.


புளிச்சக்கீரையை குடை மிளகாய், கசகசா சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால் உடலுறவு இச்சை உண்டாகும். போகத்தில் அளவில்லா திருப்தி உண்டாகும்.


வெங்காயத் தாள், ஓரிதழ்த் தாமரை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டால் விந்தின் சூடு குறையும். உடலுறவில் நீடித்த இன்பம் கிடைக்கும்.


வெங்காயத் தாளை அரைத்து, அதில் ஒரு கிராம் ஜாதிக்காய் பொடியைக் கலந்து சாப்பிட்டால் காம உணர்வு அதிகரிக்கும்.


வெந்தயக் கீரையுடன் குடை மிளகாய், கசகசா, பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் காம உணர்வு அதிகரிக்கும்.


முள்ளங்கீரை சாறில் நெருஞ்சில் முள்ளை ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் விந்து உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.


கல்யாண முருங்கை இலையுடன் கசகசா, உளுந்து இரண்டையும் மாதுளம் பழச்சாறு சேர்த்து அரைத்து தினமும் சாப்பிட்டால் ஆண்மை பெருகும். காமம் அதிகரிக்கும்.


கொடிப்பசலைக் கீரையுடன் இரண்டு குடை மிளகாய், ஒரு ஸ்பூன் கசகசா சேர்த்து வேக வைத்து கடைந்து சாப்பிட்டால், உடலுறவு வேட்கை அதிகரிக்கும்.


குப்பைக்கீரையுடன் குடை மிளகாயைச் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் காம உணர்வு அதிகரிக்கும்.
கானாம்வாழைக் கீரையை கொட்டைப் பாக்கு சேர்தது அரைத்துச் சாப்பிட்டால் போகம் நீடிக்கும். காம உணர்வும், ஆண்மையும் அதிகரிக்கும்.


கானாம் வாழைக் கீரைச் சாறில் கசகசாவை ஊற வைத்து அரைத்து, தேனில் குழைத்துச் சாப்பிட்டால் (2 கிராம்) காம உணர்வு அதிகரிக்கும்.


முக்குளிக் கீரையுடன், குடை மிளகாய் சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால் உடலுறவில் அதிக ஆர்வம் ஏற்படும்.


முக்குளிக் கீரைச் சாறில் தென்னம்பாளை அரிசியை அரைத்துச் சாப்பிட்டால், நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட முடியும்.


முக்குளிக் கீரையுடன் சிறிது லவங்கம், பட்டை ஆகியவற்றைச் சேர்த்துச் சாப்பிட்டால் ஆண்மை பெருகும். காம உணர்வு அதிகரிக்கும்.


முக்குளிக் கீரை, நெருஞ்சி முள் இரண்டையும் பாலில் போட்டு அவித்து, உலர்த்திப் பொடியாக்கிச் சாப்பிட்டால் விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.



**


32. காயம்


அகத்திக்கீரையை அரைத்து ஆறாத, நாள்பட்ட காயங்கள் மீது தடவினால், அவை விரைவில் ஆறும்.


**



33. காய்ச்சல்


அரைக்கீரையுடன் மிளகாய் வற்றல், சிறுபருப்பு, மிளகு ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்க வைத்து, சாற்றை வடித்து, சாதத்தில் கலந்து காய்ச்சல் உள்ளவருக்குக் கொடுத்தால், காய்ச்சல் உடனே மறையும்.


முளைக்கீரையுடன் சீரகத்தை நெய்யில் வறுத்துச் சேர்த்து, மிளகாய் வற்றலைக் கிள்ளிப்போட்டு, தண்ணீர் சேர்த்து அவித்து சாற்றை வடித்து, சாதத்தோடு கலந்து சாப்பிட்டால் அனைத்து வகையான காய்ச்சலும் குணமாகும்.


அகத்திக்கீரை சாற்றை மூக்கில் பிழிந்துவிட்டால் அடிக்கடி உண்டாகும் காய்ச்சல் குணமாகும்.


புதினா இலையை (50 கிராம்) கஷாயமாகச் செய்து தினமும் 30 மிலி முதல் 50 மிலி வரை குடித்து வந்தால் கடுமையான காய்ச்சலும் குணமாகும்.


கொத்தமல்லியோடு சிறிது மஞ்சள், மிளகு சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் குளிர்க்காய்ச்சில் குணமாகும்.


கானாம்வாழைக் கீரையுடன் சிறிது மிளகு கூட்டி அரைத்துச் சாப்பிட்டால் குளிர் ஜூரம் உடனே குணமாகும்.


புளியாரைக் கீரையை மிளகு சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் அனைத்து விதமான காய்ச்சல்களும் குணமாகும்.


**



34. கால் ஆணி




பிண்ணாக்குக் கீரையை அரைத்து, சிறிது மஞ்சள் தூள் கலந்து, கால் ஆணிகளில் போட்டால் அவை மறையும்.



**


35. கால் வீக்கம்


புளிச்சக்கீரையுடன் பார்லி சேர்த்து கஞ்சி காய்ச்சிக் குடித்தால், கால் வீக்கம் குணமாகும்.


பிண்ணாக்குக் கீரையுடன் சிறிது பார்லி சேர்த்து கொதிக்க வைத்துச் சாப்பிட்டால் கால் வீக்கம் குணமாகும்.



**


36. குடல் கிருமிகள் ஒழிய


வங்கார வள்ளைக் கீரைச் சாறில் வாய்விளங்கத்தை அரைத்துச் சாப்பிட்டால் குடல் கிருமிகள் ஒழியும்.



**


37. குடல் புண்


முளைக்கீரையை சிறுபருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் குடல் புண்கள் குணமாகும்.


வெங்காயத் தாள், துத்தி இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து, சிறிது மஞ்சள் தூள் சேர்த்துச் சாப்பிட்டால் குடல்புண் மற்றும் வாய்ப்புண் குணமாகும்.


வெந்தயக் கீரையுடன் சிறிது உளுந்தைத் தட்டிப்போட்டு கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் குடற்புண் குணமாகும்.


உலர்ந்த பிரண்டை இலையை (100 கிராம்), சுக்கு (10 கிராம்), மிளகு (10 கிராம்) ஆகியவற்றுடன் சேர்த்துப் பொடியாக்கி, தினமும் காலையில் 2 கிராம் அளவில் சாப்பிட்டால் குடல் புண், தொண்டைப் புண், ஆசனப் புண் போன்ற அனைத்தும் குணமாகும்.


அம்மான் பச்சரிசி கீரையுடன் சிறிது மஞ்சள், ஓமம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் குடற்புண் குணமாகும்.


நச்சுக்கொட்டைக் கீரையை அரிந்து, பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டால் குடல்புண்கள் ஆறும்.


முள்ளிக்கீரையைச் சுத்தம் செய்து பருப்பு சேர்த்துச் சாப்பிட்டால் குடல்புண்கள் குணமாகும்.


பரட்டைக் கீரையைப் பருப்பு சேர்ந்து கடைந்து சாப்பிட்டால் குடல் புண்கள் குணமாகும்.



**


38. குடல் புழுக்கள்


மணலிக் கீரை சாறில் வாய்விளங்கத்தை (2) அரைத்து இரவில் சாப்பிட்டால் குடல் புழுக்கள் சாகும்.



**


39. குழந்தை வளர்ச்சி


முளைக்கீரையை தொடர்ந்து 40 நாட்களுக்கு குழந்தைகளுக்குக் கொடுத்தால் நல்ல உயரமாக வளர்வார்கள்.


**

40. குளிர் ஜன்னி


ஒரு கைப்பிடி மணத்தக்காளிக் கீரையோடு மிளகு (10), திப்பிலி (3), மஞ்சள் நான்கு சிட்டிகை ஆகியவற்றைச் சேர்த்து விழுதாக அரைத்து அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து சாப்பிட்டால், சளி இருமல் போன்ற கப நோய்கள் குணமாகும். குளிர் ஜன்னிக்கு அற்புதமான மருந்து இது.


***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "