...

"வாழ்க வளமுடன்"

09 செப்டம்பர், 2011

ஸ்டூடண்ட் இன்ஷூரன்ஸ்: படிப்பைவிட இது முக்கியம்!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

''வெளிநாடுகளுக்குப் போய் என்ன படிக்க வேண்டும் என நம்மூர் இளைஞர்களுக்குத் தெரிகிற அளவுக்கு, எந்தெந்த இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்தால் இழப்புகளிலிருந்து தப்பிக்கலாம் என்பது தெரிவதில்லை. சில ஆயிரம் ரூபாயைக் கவலைப்படாமல் கட்டினால், பல லட்ச ரூபாய் செலவை எளிதாக தவிர்க்க முடியும்'' என்கிறார் நிதி ஆலோசகரான வி.ஹரிஹரன். எப்படி என்பதையும் அவரே விளக்கிச் சொன்னார்.

''இந்தியாவிலிருந்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா, லண்டன் போன்ற நாடுகளுக்கு ஆண்டுக்கு சுமார் மூன்று லட்சம் மாணவர்கள் படிக்கச் செல்கிறார்கள். இந்த மாணவர்களில் வெறும் 10 சதவிகிதத்தினரே ஸ்டூடண்ட் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கிறார்கள் என்பது அதிர்ச்சிகரமான உண்மை. மாணவர் மற்றும் பெற்றோர் இடையே போதிய விழிப்புணர்வு இல்லை என்பதே இதற்கு காரணம். ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில்தான் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் வெளிநாடுகளுக்குப் படிக்கச் செல்கிறார்கள். அப்போதே இந்த இன்ஷூரன்ஸை எடுத்துக் கொண்டால் நல்லது'' என்றவர், வெளிநாடு செல்லும் மாணவர்கள் என்னென்ன இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டும் என்பதையும் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

டிராவல் இன்ஷூரன்ஸ்!

''வெளிநாட்டுப் பயணத்தின் போது, இந்தியாவிலிருந்து கிளம்பி அங்கு சென்று சேரும் வரை இந்த பாலிசி பயனளிக்கும். விமானப் பயணத்தின்போது ஏற்படும் விபத்து மற்றும் உடல்நிலை பாதிப்பு, லக்கேஜ் காணாமல் போவது, பாஸ்போர்ட் மற்றும் சான்றிதழ் போன்றவைகள் காணாமல் போவது, தீவிரவாதி களால் விமானம் கடத்திச் செல்லப்படுவது, விமானப் பயணம் காலதாமதமாவது போன்ற காரணங்களுக்கு இந்த பாலிசியில் இழப்பீடு கிடைக்கும்.

60 முதல் 90 நாட்களுக்கான படிப்பு என்றால், போக - வர சேர்த்து டிராவல் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக் கொள்ளலாம். வருடக் கணக்கில் சென்று படிக்கப் போகிறார்கள் எனில், போகும்போது தனியாக டிராவல் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக் கொண்டு, வரும்போது தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.


மெடிக்ளைம் இன்ஷூரன்ஸ்!

பொதுவாக ஒரு இடத் திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லும்போது தட்பவெப்பநிலை காரணமாக உடல்நிலை பாதிப்படையும். இந்தியாவில் ஆகும் மருத்துவச் செலவைவிட வெளிநாடுகளில் பல மடங்கு கூடுதலாகச் செலவாகும். அந்த வகையில் மெடிக்ளைம் பாலிசி எடுப்பது அவசியம். ஆக்ஸ்ஃபோர்டு போன்ற பல்கலைக் கழகங்கள் அனைத்துவிதமான அம்சங்களும் அடங்கிய பாலிசியை காப்பீடு நிறுவனங்களுடன் இணைந்து வழங்கி, அதற்கான செலவை

கட்டணத்துடன் சேர்த்து விடுகின்றன. சில பல்கலைக் கழகங்களில் இந்த வசதி கிடையாது. அப்படியே இருந்தாலும் பிரீமியம் அதிகமாக இருக்கும். இதை அலசி ஆராய்ந்து பல்கலைக் கழக இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதா? அல்லது தனியாக மெடிக்ளைம் பாலிசி எடுப்பது நல்லதா என்பதை முடிவு செய்துகொள்ள வேண்டும்.

கவனிக்க வேண்டியவை..!

எவ்வளவு காலம் வெளிநாட்டுக்குப் படிக்க போகிறீர்களோ, அதற்கு தகுந்த மாதிரி பாலிசியை எடுக்க வேண்டும்.

ஏற்கெனவே ஏதாவது ஒரு நோய் இருந்தால் அதை பாலிசி எடுக்கும்போது மறக்காமல் குறிப்பிடுங்கள்.

மருத்துவமனை மற்றும் மருத்துவமனை அல்லாத சிகிச்சைகள் என இரண்டு விதமாக கவரேஜ் இருக்கிறது. தேவைக்கேற்ப இதை எடுத்துக் கொள்ளலாம்.

வெளிநாடுகளில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், பெற்றோர்கள் அங்கு செல்வதற்கும், உடலை இந்தியா கொண்டு வருவதற்கும் ஆகும் செலவுகளைச் சேர்த்து கவரேஜ் கிடைக்கும்படியாக பாலிசி எடுக்கலாம்.

கலவரம், உடல்நிலை பாதிப்பு போன்ற காரணங்களால் படிப்பு தடையானால் ஏற்படும் இழப்புக்கும் சேர்த்து கவரேஜ் இருக்க வேண்டும்.

கிளைம் எப்படி வாங்குவது?

இங்கிருக்கும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருக்கும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுடன் சேர்ந்து பாலிசியை விற்கின்றன. எனவே, இந்தியாவில் பாலிசி எடுத்துவிட்டு வெளிநாட்டுக்குச் சென்றால், இங்குள்ள நிறுவனம் நீங்கள் எடுத்திருக்கும் பாலிசியின் வெளிநாட்டு நிறுவனத்தின் கட்டணமில்லா டெலிபோன் நம்பரை கொடுத்துவிடும். அந்த நம்பரை தொடர்பு கொண்டால் கிளைம் விவரங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பிரீமியம் மற்றும் கவரேஜ்!



எல்லாம் சரி, இதற்கு எவ்வளவு பிரீமியம் என்றுதானே கேட்கிறீர்கள். 23 வயதான ஒரு மாணவர், ஒரு லட்சம் அமெரிக்க டாலர் கவரேஜ் கிடைக்கும் வகையில் இரண்டு வருட பாலிசிக்கு ஆண்டுக்கு 31,000 ரூபாய் பிரீமியம் கட்ட வேண்டும். டிராவல், மெடிக்ளைம் மற்றும் தனிநபர் விபத்து பாலிசிகளை உள்ளடக்கியது இந்த பாலிசி.

மருத்துவச் செலவு - 50,000 டாலர், அசம்பாவிதம் - 1 லட்சம் டாலர், பொதுவான சிகிச்சை - 250 டாலர், பாஸ்போர்ட் காணாமல் போனால்- 200 டாலர், லக்கேஜ் காணாமல் போனால் - 1,000 டாலர், தனிநபர் விபத்து - 10,000 டாலர், படிப்பு இடையில் தடைப்பட்டால் - 7,500 டாலர், தற்செயல் பாதிப்பு - 1 லட்சம் டாலர் போன்ற அம்சங்கள் கவராகும்.

மேலே குறிப்பிட்ட ஏதாவது ஒன்று நடந்து கிளைம் கிடைத்தால் அதுபோக மீதி இருக்கும் தொகையைத்தான் மீண்டும் கிளைம் செய்ய முடியும்'' என்று முடித்தார்.

இனியாவது வெளிநாட்டுக்குப் படிக்கப் போகும் மாணவர்கள் இந்த பாலிசியையும் எடுத்துக்கொண்டு பறந்தால் எந்தச் சூழ்நிலையிலும் பதற வேண்டியதிருக்காது.


***
thanks யூத்ஃபுல் விகடன்
***



"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "