இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்

ஆரோக்கியமே ஆனந்தம். உடல் ஆரோக்கியம் இல்லாது எந்தப் புறவசதிகள் இருந்தாலும் சந்தோஷத்தை அனுபவிக்க முடியாது. ஆரோக்கியம் காக்க வேண்டும் என்றதுமே உங்களுக்குக் கடுமையான பயிற்சிகள், முயற்சிகள்தான் ஞாபகத்துக்கு வரும்.ஆனால் சில எளிய பயிற்சிகள், சில எளிய முயற்சிகள் போதும்.
இதோ... அந்த வழிகள்...
ஒன்றியிருங்கள்
ஒவ்வொரு கணமும் நாம் அந்தக் கணத்தோடு ஒன்றியிருக்க வேண்டும். உதாரணத்துக்கு, சாப்பிடுகிறீர்கள் என்றால் அதன் சுவை, அது சமைக்கப்பட்டிருக்கும் விதத்திலேயே மூழ்கிப் போங்கள். அதேபோல ஒவ்வொருமுறை நீங்கள் அமரும்போதும் சரியாக அமர்ந்திருக்கிறோமா என்று யோசித்துச் சரிப்படுத்திக்கொள்ளுங்கள். படிப்படியாக இந்த ஒழுங்குகள் உங்களின் மற்ற செயல்பாடுகளிலும் வந்துவிடும்.
மூச்சுப் பயிற்சி
மூச்சுப் பயிற்சி என்பது நீங்கள் `தற்போதைய கணத்தில்' ஒன்றியிருப்பதற்குச் சிறந்த வழியாகும். மூக்கு வழியாக மூச்சை உள்ளிழுங்கள். சற்று அப்படியே இருங்கள். நுரையீரலுக்குள் காற்று நிரம்புவதை உணர்ந்து பின்னர் மெதுவாக மூச்சை வெளிவிடுங்கள். ஒருநாளைக்கு இம்மாதிரி ஐந்து முறை செய்யுங்கள்.
இதயப் பயிற்சி
உங்களின் இதயத்துக்குப் பலமூட்டுவதற்கான எளிய பயிற்சி, அதிகாலை நடையாகும். அது உங்களின் கொழுப்பைக் காணாமல் போக்கும், இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும். தினசரி `ஜிம்'முக்கு செல்வதற்குச் சோம்பேறித்தனமாக இருக்கிறதா? ஒரு ஜோடி ஷூக்களுக்கு செலவழியுங்கள். நடக்கும் ஆர்வம் தன்னாலே வந்துவிடும்.
நடனம் ஆடுங்கள்
நமது கலாச்சாரத்தில் நடனம் ஆடுவது என்பது இயல்பான விஷயமில்லை. நீங்கள் கூச்சமானவர் என்றால், முதலில் உங்களுக்கு மிக நெருங்கியவர்களுடன் சேர்ந்து ஆடுங்கள். அல்லது உங்கள் துணையுடன் ஒரு நடனப் பயிற்சியில் சேருங்கள். அது இரண்டு வழிகளில் உதவும். அதாவது, உங்கள் இருவரின் ஆரோக்கியம் மேம்படும், உறவு இறுகும்.
சுயகவுரவம்
நீங்கள் உங்களை மதிக்காவிட்டால், பிறரிடம் இருந்தும் மதிப்பை எதிர்பார்க்க முடியாது. சுயகவுரவத்தை வளர்த்துக்கொள்வதற்கான சிறந்த வழி, நேர்மறையான உறுதியான எண்ணங்களை வளர்த்துக்கொள்வதாகும். திரும்பத் திரும்ப நீங்கள் நல்லவர், திறமையானவர் என்ற எண்ணங்களை மனதில் பதித்துக்கொண்டே இருந்தால் அது நன்மை பயக்கும். கெட்ட பழக்கங்களிலிருந்து நீங்கள் விடுபடவும் உதவும்.
பொழுதுபோக்கு
விளையாட்டு, இசை, வாசிப்பு... நீங்கள் வெகுவாக விரும்புவது எதை? முழுக்க முழுக்க அதற்கென்று வாரத்துக்குக் குறைந்தபட்சம் சில மணிநேரங்களை ஒதுக்குங்கள். உங்களின் மகிழ்ச்சியளவு தடாலடியாகக் கூடும்.
தண்ணீர் பருகுங்கள்
உடம்பின் தண்ணீர் அளவுக்கும் மனஅழுத்தத்துக்கும் தொடர்புண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா? உடம்பில் தண்ணீர் குறைந்த நிலையில் நீங்கள் எளிதாக எரிச்சலுக்குள்ளாகவும் செய்வீர்கள். தாகம் எடுத்தால்தான் தண்ணீர் பருகுவது என்றில்லாமல் அவ்வப்போது தண்ணீரை உள்ளுக்குள் ஊற்றிக்கொள்ளுங்கள்.
வேலையில் மகிழ்ச்சி
நீங்கள் பார்க்கும் வேலையைக் கொண்டாட்டமாக மாற்றிக்கொள்ளுங்கள். உங்களின் பணி நீங்கள் மனப்பூர்வமாக விரும்பாததாகக் கூட இருக்கலாம.ë ஆனாலும் அந்தப் பணியில் நீங்கள் ரசிக்கும் சில அம்சங்கள் இருக்கக்கூடும். அவற்றில் கவனம் செலுத்தி உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.
சிரியுங்கள்
சிரிப்பதற்கான எந்த வாய்ப்பையும் தவற விடாதீர்கள். சின்னச் சின்ன தொந்தரவான விஷயங்களையும் ஒரு `கார்ட்டூனிஸ்ட்'டின் பார்வையில் பாருங்கள். முக்கியமாக, சூழ்நிலையை உங்களால் மாற்ற முடியாதபோது, எடுத்துக்காட்டாக, நீங்கள் போக்குவரத்தில் மாட்டிக் கொண்டால் எரிச்சலடைவதற்குப் பதிலாக, சக வாகன ஓட்டிகள், போக்குவரத்துக் காவலர்களின் வெளிப்பாடுகளைப் பாருங்கள். அவற்றை ரசிக்க முயலுங்கள்.
***
thanks luxinfonew
***
"வாழ்க வளமுடன்"

0 comments:
கருத்துரையிடுக