...

"வாழ்க வளமுடன்"

09 மே, 2011

எண்ணெய்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு வித குணம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


பலவிதமான புதுப் புது நோய்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் நமது சமையல் முறைகளில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றம் ஆகும். முக்கியமாக சர்க்கரை நோய்க்கு நேர்முகமாகவோ அன்றி மறைமுகமாகவோ உணவுக்குப் பயன்படுத்தும் பொருட்கள், அவற்றை சமைக்கும் முறைகள் என்பனதான் என்பது பல ஆய்வுகளில் கண்டறிந்த உண்மை. சமையல் முறையில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றம் அதற்குப் பயன்படுத்தும் எண்ணெய்யின் தன்மையும் அளவும்தான்.


வழக்கமாக நாம் பயன்படுத்தும் எண்ணெய்களில் அதிகமாக கொலஸ்டிரால் என்னும் கொழுப்புச்சத்து உண்டு. இதன் காரணமாக எண்ணெயை அதிகமாக உபயோகிக்கும் போது, இருதய நோய்கள் மற்றும் சர்க்கரை நோய் போன்றவை வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாகும் என்று எண்ணி இவற்றை தேவைக்கு அதிகமாக பயன்படுத்த வேண்டாம் என்றும், தேவையேற்படின் மிகக் குறைந்தளவு கொலஸ்டிரால் உள்ள சுத்தப்படுத்தப்பட்ட சூரியகாந்தி எண்ணெய், கடுகு எண்ணெய் என்பனவற்றைப் பயன்படுத்தலாம் எனவும் மருத்துவ ஆய்வுகளில் கூறப்பட்டது. ஆனாலும் சர்க்கரை நோயாளிகளினதும், இருதய நோயாளிகளினதும் எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருப்பது என்னவோ உண்மைதான். இதன் ஆராய்ச்சியின் பயனாக கொழுப்பைப் பற்றிய புதிய உண்மைகள் வெளிப்பட்டுள்ளன.


உணவுக்குப் பயன்படுத்தும் எண்ணெய்களில் பல கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவை:

1. சேச்சுரெட்டட் கொழுப்பு அமிலங்கள் (Saturated Fatty Acids - SFA)
2. மொனோ அன்சேச்சுரட்டட் கொழுப்பு அமிலங்கள் (Mono Unsaturated Fatty Acids MUFA)
3. பொலி அன்சேச்சுரட்டட் கொழுப்பு அமிலங்கள் (Poly Unsaturated Fatty Acids PUFA)

என மூன்று வகைப்படும்

சமையல் எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்களின் அளவு : (100 கிராமில்)

எண்ணெய்வகை SFA, MUFA, PUFA
நெய் 65 32 3
தே.எண்ணெய் 89 7 2
க. எண்ணெய் 24 50 26
நல்லெண்ணெய் 18 43 9
சூரியகாந்தி எண்ணெய் 13 27 60

முக்கியமாக இந்த மூன்று கொழுப்பு அமிலங்களும், எந்த விகிதசாரத்தில் இருக்கிறது என்பதுதான் முக்கியம். இயல்பான உடல் இயக்கத்திற்கு இம்மூன்றும் 1:1:1 என்ற அடிப்படையில் இருக்க வேண்டும்.

பொலிசேச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களில் இரண்டு வகை உண்டு.

1. ஒமேகா 6
2. ஒமேகா 3

உடல் இயக்கத்தின் போது உயிரணுக்களிலிருந்து வெளிப்படும் கழிவுப்பொருள்களை உடைத்து, தகர்த்து எளிதாக உடலிலிருந்து வெளியேற்றும் பணிக்கு இவையிரண்டும் உதவுகின்றன. இந்தப் பணி முறையாக நடைபெறாவிட்டால் நச்சுப்பொருள்கள் தேங்க வழிவகுக்கும். இந்நச்சுப் பொருள்கள் தான் இருதய நோய்கள், சிறுநீரக நோய்கள், புற்று நோய்கள். ஒழுங்காக நடைபெற ஒமேகா 6ம் ஒமேகா 3ம் 4:1 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். மேலும் இந்த விகிதாசாரம் மிக அதிகமானால் இரத்தக் குழாய்கள் அடைபடும் சாத்தியக்கூறுகள் அதிகம்.


இக்கொழுப்பமிலங்களைத் தயாரிக்கும் திறன் எம் உடலுக்கு இல்லை. எனவே இவற்றை நாம் உணவின் மூலமாகவே பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. நம் உடல் ஆரோக்கியமாக சீராக இயங்க வேண்டுமாயின் இவை நம் உணவில் தேவையான அளவில் இருக்க வேண்டும். அத்துடன் மேலே குறிப்பிட்ட விகிதத்திலும் இருக்க வேண்டும்.


1:1:1 என்ற விகிதத்தில் இருக்குமாறு எந்த எண்ணெயும் இல்லை என்பது தான் கசப்பான ஒரு உண்மையாகும். எனவே எந்த ஒரு எண்ணெயையும் குறிப்பிட்டு இதுதான் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது என்று சொல்லிவிட முடியாது. ஆனால் நாம் இந்த விகிதாசாரத்தைப் பெற பலவித எண்ணெய்களைத் தேர்ந்தெடுத்து கூட்டாக உபயோகிக்கலாம்.


உணவை பொறிப்பதற்கு கடலை எண்ணெய், தாளிக்க நல்லெண்ணெய், சுவைக்கும் மணத்திற்கும் சிறிதளவு நெய் எனப் பயன்படுத்தினால் ஓரளவுக்கு இவ்விகிதாசாரத்தைப் பெற முடியும். மேலும் வழக்கமாக நாம் உண்ணும் உணவுகளில் ஒமேகா 6 அதிகமாகவும் ஒமேகா 3 குறைவாகவும் 40:1 என்ற விகிதத்தில் உள்ளன ஆரோக்கியமான உடல் இயக்கத்திற்கு 4:1 என்ற விகிதமே தேவை. நாம் பாவிக்கும் பாரம்பரிய எண்ணெய்களில் இருக்கும் இவ்வமிலங்களின் அளவு மிகச்சரியாக இல்லாவிடினும் ஓரளவிற்கு ஒத்துப்போகக் கூடியதாகவே காணப்படுகிறது.


நாம் பயன்படுத்தும் சமையல் எண்ணெய்களில் உள்ள ஒமேகா 6, ஒமேகா 3 விகிதாசாரம்.

எண்ணெய் ஒமேகா 6 ஒமேகா 5
நெய் 2 4
தேங்காய் எண்ணெய் 2 4
கடலை எண்ணெய் 25 50
நல்லெண்ணெய் 40 80
சூரியகாந்தி எண்ணெய் 60 120

இந்த அட்டவணைப்படி உடலுக்கு நல்லது என்று தற்சமயம் சொல்லப்பட்டு வரும் சூரியகாந்தி எண்ணெயில் கொலஸ்டிரால் குறைவாக இருந்தாலும் ஒமேகா 6, ஒமேகா 3 சதவிகிதம் 120:1 ஆக இருப்பதால் உடலின் பல உறுப்புகளின் சீரான இயக்கம் தடைபடும் என்பதும் தெளிவாகிறது.


இவ்வாறு ஆராய்ந்து பார்க்கும்போது நமது பாரம்பரியச் சமையல் எண்ணெய்களான தேங்காய் எண்ணெய், கடலை கொழுப்புச் சத்தைப் பெற்றிருந்தாலும் ஒமேகா 6, ஒமேகா 3, விகிதாசாரத்தில் தேவையான அளவைப் பெற்றிருப்பதால் நலம் பயக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெளிவாகக் தெரிகிறது. எனவே அன்றாடம் உபயோகிக்கும் போது அளவாகப் பயன்படுத்தினால் அதிக கொழுப்பு மறைந்துவிடும். எனவே நாமும் நமது பாரம்பரிய எண்ணெய்களை அளவுடன் பாவித்து வளமுடன் வாழ்வோமாக.

*

தேங்காய் எண்ணெயின் இயற்கை மருத்துவப் பயன்கள்;

உணவே மருந்து எனும் இயற்கை வைத்தியம் எனும் சிகிச்சை மூலம், இயற்கையில் கிடைக்கும் உணவு வகைகளை உண்ணும் வழக்கமாக அன்றாடம் உபயோகித்து வந்தால், பல்வேறு நோய்கள் வருவதை முன்கூட்டியே தடுக்கவும், நோய்கள் ஏற்பட்டு ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால், அதனை கட்டுப்படுத்தி போக்கிக் கொண்டு ஆரோக்கியமாக வாழ முடியும். இதற்கான பல்வேற உன்னத வழிகள் இருப்பதை பல்வேறு மேற்கோள்களுடனும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எண்ணற்ற ஞானிகளும், சித்தர்களும், ஆன்மீகப் பெரியோர்களும் ஆராய்ந்து அறிந்து, நமக்கு தந்துவிட்டுச் சென்றுள்ள அரிய குறிப்புகளை எனது இந்நூலில் தந்துள்ளேன்.


எனது நோக்கமே, நம்மின மக்கள் அனைவரும் இயற்கை வைத்திய சிகிச்சைகளின் பயன்களை நன்கு அறிந்து, தங்களது அனைவரின் வாழ்வில் கடைப்பிடிப்பதற்கான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்துடன் தான்.


நாம் அனைவரும் எளிதாகப் புரிந்து கொள்ளவும், எங்கும் எளிதாய் கிடைக்கும் காய்கறிகள், கனிவகைகள், மளிகைப் பொருட்கள் போன்றவற்றினால் கிடைக்கும் உயிர்சத்து மற்றும் ஆரோக்கியத்திற்கான பலாபலன்களையும் அறிந்து கொண்டு பயனடையவே இந்நூலில் இம் மருத்துவ விவரங்களைத் தந்துள்ளேன். நமக்கு மட்டுமின்றி உலகில் அனைத்து நாடுகளிலும் அனைவரும் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு முக்கியமான உணவுப்பொருளான எண்ணெய் வகைகளைப் பற்றியும், அதன் மருத்துவ குணங்களைப் பற்றியும் தொடர்கின்றேன்.


பொதுவாகவே எண்ணெய் என்றாலே நாம் அனைவரும் நமது குடும்பத்தில் அன்றாடம் உபயோகப்படுத்தும் கடலை எண்ணெய், (சுட்ட எண்ணெய்) தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசும் நெய், டால்டா மற்றும் வனஸ்பதி போன்றவை தான் ஞாபகத்திற்கு வரும். முக்கியமாக நமது உணவு வகைகள் அனைத்துமே எண்ணெய் சேர்த்து தயாரிப்பது வழக்கமாகும்.


முக்கியமாக கடலைப்பருப்பு, வெள்ளை உளுத்தம்பருப்பு, வரமிளகாய், பெருங்காயம், கடுகு போன்றவற்றை சேர்த்து தாளிதம் செய்து சேர்த்துக் கொள்வது என்பது தவிர்க்க முடியாததாகும். காலை சிற்றுண்டியான இட்லி, தோசை, சப்பாத்தி அல்லது பூரி மசாலா, பொங்கல், உப்புமா ஆகியவற்றிற்கும், சட்னி, சாம்பார் மற்றும் இட்லிப் பொடி போன்றவற்றிற்கும் எண்ணெய் சேர்த்து தயாரித்தால் தான் சுவையும், மணமும், குணமும் இத்தகைய உணவுப் பதார்த்தங்களுக்கு கூடுதல் ருசியைத் தரும் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வார்கள்.


ஆனாலும் ஒரு சிலருக்கு இவ்வித எண்ணெய்கள் சில சமயங்களில் அலர்ஜியை ஏறபடுத்துவதாக கூறினாலும், எண்ணெய் என்பது எவ்வாறெல்லாம் உடல் நலம் காப்பதில் முக்கிய இடம் வகிக்கிறது என்பதை புரிந்து கொள்ளாததால் தான். எண்ணெய்களின் அவசியத்தைப் பற்றி நம் முன்னோர்கள் கூறியுள்ள பழமொழி ‘சனி நீராடு’ என்பதாகும். மேலும், தமிழர் திருநாளாம் ‘தீபாவளி’ அன்று எண்ணெய் தேய்த்து கங்கா ஸ்நானம் செய்வது போன்றவை, இவற்றின் உபயோகங்கள் நமது ஆரோக்கியத்திற்கு அளிக்கும் சிறப்பினால் தான்.


ஒரு சிலர் இவ்வகை எண்ணெய்களை மூலிகைச் சாற்றுடன் சேர்த்து அருந்துவதும், கண்கள், காது, மூக்கு போன்ற உறுப்புகளில் பிரயோகப்படுத்துவதும் நாம் அறிந்ததே. அடிப்படையில் பார்த்தால் எப்படி எண்ணெய் தொழிற்சாலைகளில் உள்ள இயந்திரங்களை இலகுவாகவும் மிருதுவாகவும் இயங்கவும், துருப்பிடிக்காமலும் பாதுகாக்கின்றதோ, அதைப் போன்றே மனித உடலில் உள்ள உஷ்ணத்தை சீராகவும், குளிர்ச்சியாகவும் இருக்க உதவுகின்றது.


எண்ணெய் தேய்ந்து குளிப்பதால் உடலில் ஒரு புத்துணர்ச்சியும், பொலிவும், நரம்புகளுக்கு வலுவும், கண்களுக்கு சிறந்த பார்வையும், மூளைக்கு நல்ல பலமும் தரவல்லவையாகும். நம் வீட்டில் சாதாரணமாகவே அனைத்துப் பலகார பட்சணங்களும் கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் டால்டா போன்றவற்றில் தயாரிக்கப்படுவதோடு, பல்வேறு ஸ்வீட் வகையறாக்கள் நெய்யில் தயாரிப்பதுதான் வழக்கம்.


ஆசியாக் கண்டத்தில் வாழ்ந்தவர்கள் பழங்காலம் தொட்டே தென்னை மரத்தின் பயன்களை நன்கு கண்டறிந்து பலவகைகளில் அவற்றிலிருந்து எண்ணற்ற கைவினைப் பொருட்களையும், உணவு வகைகளையும் மற்றும் மருத்துவ சிகிச்சைகளுக்கும் என உபயோகிக்கும் வழிமுறைகளை எளிதாக தந்துள்ளனர். தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் இளநீர், தேங்காய், சருகு, மட்டை, ஓலை, பாளை, கீற்று ஆகியவற்றிலிருந்து நாம் உபயோகிக்கும் வகைகள் ஏராளம். சாதாரண விசிறி முதல் எண்ணற்ற வகையான அழகு சாதனங்கள் போன்றவை இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தில் மிகவும் பிரபலமான தொழிலாக அமைத்து உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதை நாம் நன்கு அறிவோம்.


இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியையும், அரபிக்கடலையும் ஒட்டிய பிரதேசமான மலபார் என்று அழைக்கப்படும் கேரளாவில் தென்னை மரங்கள் வளர்ப்பு என்பது ஒரு பிரதான விளைச்சல் தரும் பண்ணைத் தொழிலாகும். எனவே கேரளாவில் வாழும் ஆண்களும் பெண்களும் அன்றாடம் தேங்காய் எண்ணெயை சிரசில் தேய்த்து குளிப்பதோடு, அவர்களின் அனைத்து உணவு வகைகளிலும் அதிலும் வாழைக்காய், மரவள்ளிக்கிழங்கு மற்றும் உருளைக்கிழங்கு சிப்ஸ் இருக்கிறதே அதன் முக்கியத்துவமே தனி, அதிலும் கேரளா தேங்காய் பார்ப்பதற்கு மிகவும் பெரிதாகவும், நல்ல சத்துள்ளதாகவும், நீர்ப்பிடிப்பு கொண்டதாக, சுவை மிகுந்ததாகவும் விளைகின்றது. இளநீரும் அந்த மாதிரி!


தேங்காயை அதிக அளவில் அவர்கள் உபயோகப்படுத்துவதால்தான் அவர்களின் அழகு, கம்பீரம், பொலிவு, நீண்ட கரு முடிகள் என மிகவும் அழகுடன் திகழ்கின்றனர். பொதுவாக தென்னை மரங்கள் கடல் சார்ந்த பகுதிகளிலும், உப்பங்கழி என்ற கூறப்படும் மலைப்பகுதியை ஒட்டிய நீண்ட புழைகளின் இரு கரைகளிலும், ஆற்றோரப் பகுதிகளிலும் ஓங்கி வளரும் தன்மையோடு அதிக அளவில் தேங்காய் விளைச்சலையும் கொண்டு லாபகரமான தொழிலைக் கொண்டதாகும்.

தேங்காய் எண்ணெய் உபயோகிப்பதால் உடலுக்கு குளிர்ச்சி, கருமையான முடி வளருதல், முகப்பொலிவு, தேகத்தில் மினுமினுப்பு மற்றும் எலும்புகளுக்கும் நரம்புகளுக்கும் போதுமான வலுவும் சக்தியும் கிடைக்கின்றது. முக்கியமாக உடல் சீதோஷ்ணத்தைக் கட்டுப்படுத்தவும், சிறுநீரக செயலை சீராக வைத்திருக்கவும், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படா வண்ணமும், தொழுநோய், இருதய நோய், இரத்தத்தில் ஏற்படும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதிலும், பார்வை குறைபாட்டை நீக்கவும், இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்கவும், வாய்ப்புண்களைத் தடுக்கவும், புற்று நோயைத் தடுப்பதிலும், முக்கியமாக உணவுக் குழல் பகுதியான கொலன்களுக்கு கார்பன் சக்தியை அளிப்பதிலும் மிகவும் பயனுடையதாகும்.

இப்படியாக 80 சதவீதம் நமது உடலில் ஏற்படக்கூடிய அனைத்து நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள தேங்காய் மற்றும் அதன் அதன் உபரிப்பொருட்கள் நமக்கு சிறந்த பலன்களை தருபவையாகும். ஒரு சிலருக்கு அலர்ஜி ஏற்படவும் வாய்ப்பு இருப்பினும் பொதுவாக எந்த வித பக்க விளைவுகளை ஏற்படுத்தாது. மேலும் கோடைகாலங்களில் ஏற்படும் களைப்பு, நா வறட்சி, சோர்வு, மயக்கம் ஆகியவற்றை நீக்கவும் முக்கியமாக அம்மை, தட்டம்மை, மஞ்சள் காமாலை போன்ற நோய்களுக்கு இளநீர் என்பது இயற்கை தந்துள்ள அரும் மருந்தாகும். வாழ்க்கை வாழ்வதற்கே என்ற நோக்கில் நாம் அனைவரும் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெயை நமக்கு ஏற்ற முறையில், இயற்கை மருத்துவரின் ஆலோசனையுடன் பயன்படுத்தினால் பல்வேறு நன்மைகளைப் பெறலாம். கனடாவில் ஆலிவ் எண்ணெய் எத்தகைய முக்கியத்துவம் பெற்றுள்ளதோ அதுபோன்று நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் வகையில் வெஜிடபிள் ஆயில், சன்பிளவர் ஆயில் - எள் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவையும் முக்கியமானதாகும்.

கவிஞர் கண்ணதாசன் கூறியபடி, “பிள்ளையைப் பெற்றால் கண்ணீரு தென்னையைப் பெற்றால் இளநீரு” என்பதற்கேற்ப தென்னையின் பயன்கள் பரந்த அளவில் சிறந்ததாகக் கருதப்படுவதால் அனைவரின் வாழ்க்கையை உயர்த்தி, நிமிர்த்தி, தளரா உடல் வலிமையையும், நல்ஆரோக்கியத்தையும் தரும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.***
thanks றொசாரியோ ஜோர்ஜ்யின்
***
"வாழ்க வளமுடன்"

இந்த நாள் இனிய நாளாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "