...

"வாழ்க வளமுடன்"

14 மே, 2011

உஷார்!! ரசாயன அழகிகள் அல்லது இயற்கை அழகிகள் !!!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


திருமண வரன் விளம்பரங்களில் மணமகன் குறித்தத் தகவல்களுடன் எதிர்பார்க்கும் சாதி, மதம் ஆகிய விபரங்களுடன் சிவந்த நிறமுள்ள பெண் தேவை! என்றும் பார்த்திருப்பீர்கள். அதேபோல் மணப்பெண் வீட்டாரின் விளம்பரத்தில் ஜாதகம், சாதி, மதம், படிப்பு போன்றவற்றோடு மாநிறம், சிவப்பு நிறம் என்று மணப்பெண்ணின் சரும நிறமும் குறிப்பிடப்பட்டிருக்கும்.


சஞ்சிகைகள் மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களில் நடிக்கும்?! பெண்களில் கருத்த சருமம் உடைய மாடல் அழகியைக் காண்பது அரிது. பாட்டியைக் காட்டினால்கூட சிவந்தசருமத்தையுடைய பாட்டியைக் காட்டுமளவுக்கு மக்கள் மனதில் சிவந்த அல்லது வெளீர் நிறம் அழகின் நிறமாக விதைக்கப்பட்டுள்ளது. அனேகமாக இந்தியா போன்ற வெள்ளையரல்லாத பெருமக்கள் தேசத்தில்தான் இப்படியான விளம்பரங்களால் வெள்ளையும் சிவந்த நிறமும் அழகின் அடையாளங்களாக விதைக்கப்பட்டுள்ளது.


அமெரிக்கா அல்லது ஐரோப்பிய தேசங்களில் வெள்ளையருக்கு இணையாக கருப்பினத்தவரையும் மாடல்களாக, நடிகைகளாக ஏற்றுக் கொள்ளும் மனநிலை உள்ளது. ஆனால் நம்நாட்டில் வெளியிடப்படும் அரசன் சோப்பு விளம்பரத்திற்குக்கூட வெளீர்நிறச் சரும மாடல் மங்கையர் அவசியமாகிறது. லைஃப்பாய் சோப்பு தவிர அனேகமாக எல்லா சோப்புகளுக்கும் பெண்கள்தான் மாடல்கள். அவர்களும் வெளீர்நிறச் சரும அழகிகளாக இருந்தால்தான் அவர்களைப்போல் அழகைப் பெறும் ஆசையில் அல்லது நம்பிக்கையில் குறிப்பிட்ட சோப்புகளை விற்க முடியும் என்ற நிலை.

பழைய படங்களில் பெண்ணழகை வர்ணிக்கும் பாடல்களில் மஞ்சள் முகமே வருக என்றும் உலகப் பிரசித்திப் பெற்ற வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்ஸன் துரைக்கு வரிசெலுத்த மறுக்கும் கட்டபொம்மன் "மாவரைத்தாயா...எம்வீட்டுப் பெண்களுக்கு மஞ்சளரைத்தாயா.." என்று பெண்களின் அன்றாட அழகுசாதனபொருளாக மஞ்சள் இருந்துள்ளது. இயற்கையிலேயே கிருமி நாசினியாகவும் விளங்கும் மஞ்சளின் மகிமையை அறிந்துதான் சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா மஞ்சளுக்குக் காப்புரிமை பெற்றதையும் இந்திய மஞ்சளின் பாரம்பர்யத்தைச் சுட்டிக்காட்டி அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையும் மறந்திருக்க முடியாது.


பெண்களின் அழகுசாதனமாக இருந்த மஞ்சள் மலையேறி அவ்விடத்தை ஃபேர்னஸ் கிரீம்கள் பிடித்துக் கொண்டன. மஞ்சளை அடிப்படையாகக் கொண்ட ஃபேர்னஸ் கிரீம்கள் உலக அழகிகளின் சாய்ஸாகக் காட்டப்படும் கிரீம்களுடன் போட்டிபோட முடியாமல் ஏறத்தாழ சந்தையிலிருந்து விலகுமளவுக்கு அழகு சாதனப்பொருட்களின் படையெடுப்பு இந்தியப் பெண்களை மட்டுமல்லாது ஆண்களையும் அடிமையாக்கி விட்டது. சமீபத்தில் பெண்களின் சிவப்பழகு கிரீமைப் பயன்படுத்தும் ஆணழகனை நண்பர்கள் கிண்டலடிப்பதுபோல் ஒரு விளம்பரம் காட்டப்பட்டது.


அழகுக்கு நிறத்தை அடிப்படையாகக் கருதும் இந்தியர்களின் மனப்பான்மையைச் சரியாகப் புரிந்து கொண்ட மேற்கத்திய முதலாளிகள் உலக அழகிப்போட்டி போன்ற சர்வதேசப் போட்டிகளை நடத்தி சிவப்பாக இருந்தால்தான் அழகு என்ற எண்ணத்தை நிரந்தரமாக விதைத்து விட்டது ஒருபக்கமென்றால் எதைப் போட்டாவது முகச்சருமத்தைச் சிவப்பாக்க வேண்டுமென்ற 'நிறவெறி' தலைக்கேறி அழகு சாதன கிரீம்களுடன் சரும நோய்களுக்கான மருந்துக்களையும் பயன்படுத்தி சிவப்பாக்கும் கொடுமை பெரும்பாலான பெண்களிடம் இருக்கிறது. பெட்னோவேட் (Betnovate) போன்ற கீரிம்கள் பல்வேறு வகையான சரும நோய்களுக்கான கலிம்பாக சருமநோய் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. இத்துடன் சருமம் சுருங்காமல், கருக்காமல் இருக்கச் செய்யும் ரசாயனப் பொருட்களும் கலந்துள்ளன. தேமல், முகப்பரு போன்ற சருமநோய்களுக்காப் பரிந்துரைக்கப்படும் இத்தகைய மருந்துகளையும் அழகு சாதனப்பொருளாகப் பயன்படுத்தி வருவதாக பெரும்பாலான மருத்துவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

ஹரியானா கிராம பள்ளியாசிரியை தேவிகுமார் பெட்னோவேட் கிரீமை கடந்த எட்டுவருடங்களாக உபயோகித்து வருவதாகச் சொல்கிறார். வலது தாடையில் கட்டியால் அவதிப்பட்ட பிறகே அதற்கான காரணத்தைக் கண்டுள்ளார். சருமத்தில் நெடுநாட்களாக இத்தகையக் கிரீம்களைப் பயன்படுத்தி வருவதால் தோல் கேன்சர் பாதிப்பு ஏற்படும் அபாயமிருப்பதாக சருமநோய் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

இந்திய மருத்துவக் கழகத்தின் கெளரவ பொதுச்செயலாளார் டாக்டர் ராஜிவ் சர்மா கூற்றுப்படி, "அதிகம் துர்ப்பிரயோகம் செய்யப்படும் மருந்தாக பெட்னோவேட் உள்ளது"என்கிறார். பாமர மக்களே இத்தகைய கிரீம்களை நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் விளம்பரப் படுத்துகிறார்கள் என்கிறார். கடந்த பதினைந்து வருடங்களாக பெட்னோவேட்டை அழகுசாதனக் கிரீமாகப் பயன்படுத்தி வந்த பெண்மணிக்கு முகத்தில் ரோமம் மற்றும் நிரந்தர தழும்பு ஏற்பட்டதோடு தோலின் மேற்பரப்பிலுள்ள மெல்லிய நரம்புகளும் பாதிக்கப்பட்டதாகச் சொல்கிறார்.

சருமப்பாதுகாப்பு மருந்துகளின் சந்தையில் ஏறத்தாழ 318 மில்லியன் டாலர் சந்தையை அழகு சாதன கிரீம்கள் பிடித்துள்ளன. பத்து இருபது ரூயாயில் உலகத்தரமுள்ள அழகுகிரீம் வாங்குமளவுக்கு அழகு சாதனங்கள் மக்களை ஆக்கிரமித்துள்ளது. அகம் அழகாக இருந்தால் புறமும் அழகாகும் என்ற நம்பிக்கை நம்முன்னோர்களிடம் இருந்தது. அதைத்தான் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்றார்கள்.ஆனால் நம் மக்களோ பிற்பாதியை மட்டும் பிடித்துக் கொண்டு அழகுசாதனக் கிரீம்களுக்கு அடிமையாகி விட்டார்கள்.



*

சாரதா முருகேஷ் -அருப்புக்கோட்டை


***
thanks inneram
***



"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "