...

"வாழ்க வளமுடன்"

30 மே, 2011

பீர்பால் கதைகள் ! பாதுஷாக்களுக்கு என்றே வரும் சந்தேகம்..!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

டில்லிப் பாதுஷாக்கள் என்றாலே கொஞ்சம் கேணத்தனமான, விபரீதமான, வித்தியாசமான சந்தேகங்கள் தினசரி வருவதை வாடிக்கையாகக் கொண்டவர்கள் என்பதை இந்தப் பக்கங்களில் பீர்பால் கதைகளாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.


பாதுஷாக்களுக்கு சந்தேகம் வந்துவிட்டால் நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி என்று தண்டோரா எல்லாம் கிடையாது! அதற்குத் தான் முட்டாள் மந்திரி, பிரதானி, அப்புறம் கலைச் சேவை செய்கிறவர்கள், ஏதோ ஒரு காரணத்தை வைத்துப் பாராட்டு விழா ஏற்பாடு செய்கிறவர்கள் என்று ஒரு பெரிய துதி பாடிக் கும்பலே இருக்கிறதே! இப்படிக் கேணத்தனமான கூத்தை வேடிக்கை பார்க்க மற்ற எல்லாவற்றையும் மறந்து விட்டு வரத் தயாராக இருக்கிற மக்களுக்கு இலவசமாகக் கொஞ்சம் அனுமதி வழங்கி கலைச் சேவை "காட்டுகிற" தர்பாரும் உண்டு! இது போதாதா?


இப்படி அறிமுகத்துடன் இந்தப் பக்கங்களில் பீர்பால் கதைகளாக கொஞ்சம் பார்த்து வந்திருக்கிறோம்.நடுவில் கொஞ்சம் இடைவெளி விழுந்ததைச் சுட்டிக் காட்டி டில்லிப் பாதுஷாக்களின் பாதம் தாங்கி ஒருவர் மிகவும் வருத்தத்துடன் கேட்டார்.""ஏன் இப்போதெல்லாம் டில்லி பாதுஷா அக்பர் பீர்பால் கதைகள் வருவதே இல்லை? பாதுஷாவையும் பிரதமர் மாதிரி டம்மிப் பீஸ் பட்டியலில் சேர்த்து விட்டீர்களோ?"


அப்படியெல்லாம் ஒன்றுமில்லை! பீர்பாலையும், அக்பரையும் மறந்து விட்டால் டில்லி எப்படி நினைவுக்கு வரும்? நடுவில் வேறு கவனங்கள், வாசிப்பு என்று இருந்துவிட்டதால் மே மாதக் கடைசி வாரத்துக்குப் பிறகு பீர்பால் கதைகளைத் தொட நேரம் கிடைக்கவில்லை. அதற்குப் பரிகாரமாக, இந்த வாரம், ஒரே பதிவில் இரண்டு குட்டிக் கதைகள்! குட்டி என்றால் சின்னது என்று மட்டுமே அர்த்தம்!


குட்டி என்று சொன்னேன் அல்லவா! இதோ, பீர்பாலுடைய குட்டிப் பெண் அக்பரைத் திணற அடித்த கதை!


ஒரு தரம் பீர்பால், தன்னுடைய ஐந்து வயது மகளை அக்பருடைய தர்பாரைக் காட்டுவதற்காகத் தன்னுடன் அழைத்துச் சென்றார். டில்லிப் பாதுஷாக்களுடைய மண்டையில் எப்போதுமே விசித்திரமான சந்தேகங்கள் தான் இருக்கும் என்பதை ஏற்கெனெவே பார்த்திருக்கிறோம் அல்லவா! அக்பருக்கும் ஒரு சந்தேகம் வந்தது! பீர்பாலுடைய சிறுவயது மகள் பீர்பாலைப் போல அறிவுக்கூர்மை உள்ளவளா, அல்லது சாதாரண சிறுமியைப் போலத் தானா என்ற சந்தேகம் வந்தது.


"குட்டிப் பெண்ணே! உனக்குப் பாரசீக மொழி தெரியுமா?" என்று சிறுமியிடம் கேட்டார் அக்பர்.


சிறுமியிடமிருந்து தயங்காமல் வந்தது பதில், " ஒ! தெரியுமே! கொஞ்சம் கூட, கொஞ்சம் கம்மி!"


எப்போதும்போல பாதுஷாவுக்கு இதுவும் புரியவில்லை. பீர்பாலைப் பார்த்து அந்த சிறுமி என்ன சொல்கிறாள் என்று வினவினார்.


"ஹூசூர்! பாரசீக மொழி தெரியாதவர்களைக் காட்டிலும் கொஞ்சம் கூடுதலாகத் தெரியும்! பாரசீக மொழி தெரிந்தவர்களைக் காட்டிலும் கொஞ்சம் கம்மியாகத் தான் தெரியும் என்று தான் சொல்கிறாள்!" என்று பீர்பால் வியாக்கியானம் செய்தார்.


பாதுஷாவுக்குக் கொஞ்சம் சுயமாக யோசித்துத் தான் பார்ப்போமே என்று கொஞ்சம் சபலம் தட்டிற்று!
சுயமாகச் சிந்திப்பது பாதுஷாக்களின் கௌரவத்திற்கு இழுக்கு என்ற நினைப்பு வந்தவுடன் அதைக் கை விட்டு விட்டார்! பணம் போனால் வரிவிதித்து ஈடு செய்து கொள்ளலாம்! கௌரவம் குறைந்து போனால்....!


அப்புறம் என்ன, வழக்கம் போல பரிசு கொடுத்து கௌரவப் படுத்தி, பரிசு கொடுத்த தானும் பெரிய ஆள் தான் என்று காட்டிக் கொள்கிற கூத்தும் அரங்கேறியது.

***

எப்போதுமே தர்பாரிலேயே சந்தேகம் கேட்கிற சீனை நடத்தி நடத்தி அக்பருக்கே கொஞ்சம் அலுத்துப் போய் விட்டது!

அதனால் வித்தியாசமாக அரண்மனைத் தோட்டத்தில், பீர்பால், எப்போதும் முதுகு வளைந்து துதிபாடும் கவிஞர்கள், முக்கியமான கைத்தடிகளுடன் அக்பர் உலாத்திக் கொண்டிருந்தார். அங்கே ஏராளமான பூச்செடிகள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன. அந்தப் பூக்களைப் பார்த்ததும் துதிபாடிக் கவிஞர் ஒருவருக்கு ஆவேசம் வந்து விட்டது. துதிபாடிகளுக்கு ஆவேசம் வந்தால் அங்கே உளறலைத் தவிர வேறென்ன வரும்?

" ஒ!ஹூசூர்! உலகத்திலேயே இந்த அரண்மனைத் தோட்டத்தில் பூக்கிற மலர்கள் மாதிரி எங்கேயும் பார்க்க முடியாது! அக்பர் என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே மலர்கிற பூக்களை வேறெங்கு தான் பார்க்க முடியும்?"

அக்பருக்குப் பெருமை தாங்க முடியவில்லை! என்னதான் பொய் என்று தெரிந்தாலும், வலுக்கட்டாயமாகப் பாராட்டுவிழாக்களை ஏற்பாடு செய்யச் சொல்லிவிட்டு அங்கே காரியமாக வேண்டி வந்த துதிபாடிகள் நீதான் சூரியன்! நீதான் இந்த உலகத்துக்கே ஆதாரம்! உனக்கோ பல தாரம் அதனால் நீயுமொரு அவதாரம் என்று பாட்டுப் பாடச் சொல்லிக் கேட்பதில் ஒரு தனி சுகம் இருக்கத் தான் செய்கிறது அல்லவா!

பீர்பால் இந்தப் பாட்டை அங்கீகரிக்கிறாரா என்று தெரிந்து கொள்ளும் ஆசை வந்தது.நேரடியாக பீர்பாலை எப்படி இந்தத் துதிபாடியைப் போலவே சொறிந்து விடச் சொல்வது? பீர்பால் ஏதாவது இடக்கு மடக்காகச் சொல்லி விட்டால்...? அதனால் சுற்றி வளைத்துக் கேட்டார்.

"பீர்பால்! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? இந்தப் பூவை விட அழகானதொன்றும் இருக்க முடியுமா?"

"நாளை காலை, இந்தப் பூவை விட அழகானதாக ஒன்று இருக்க முடியுமா இல்லையா என்பதை நிரூபிக்கிறேன் ஹூசூர்!" என்று பணிவாகச் சொன்னார் பீர்பால்.

மறுநாள் தர்பாரில் பீர்பாலை, அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவலோடு அக்பர் எதிர் கொண்டார். ஆக்ராவில் இருந்து வந்த கைவினைக் கலைஞர் ஒருவரை பீர்பால் அக்பருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அந்தக் கலைஞர் அக்பருக்குப் பரிசாக பளிங்கில் செதுக்கிய மலர் ஒன்றைப் பரிசாக அளித்தார். உண்மையான பூவைப் போல, மிக நேர்த்தியாக, இயல்பான வண்ணங்களை எப்படித்தான் அதற்குள் கொடுத்தாரோ தெரியாது, அப்படி ஒரு அழகான படைப்பைப் பார்த்த அக்பர் மெய்மறந்துபோனார். ஆயிரம் தங்க முஹராக்களை அந்தக் கலைஞனுக்குப் பரிசாக அளித்தார்.

சிறிது நேரம் கழித்து வேறொருவர் அரண்மனைத் தோட்டத்தில் முந்தைய தினம் பார்த்த நிஜப் பூக்களைக் கொத்தாக அக்பருக்கு வணங்கி கையில் அளித்தார், எப்போதும் பார்க்கிற பூ தானே என்று அக்பர் இரண்டொரு வெள்ளி நாணயங்களை அவருக்கு அளிக்க உத்தரவிட்டார்.

"ஆக, செயற்கையாகச் செதுக்கிய பூ, இயற்கையான பூவை விட நிஜமாகவே அழகு அதிகம் தான் போலிருக்கிறது!" என்றார் பீர்பால்.

பாதுஷாவுக்கு அவர் முந்தைய தினம் கேட்ட கேள்விக்கு விடை கிடைத்து விட்டது!

புரிவதற்குத் தான் அதிக நேரமாயிற்று!***
bt- எஸ். கிருஷ்ணமூர்த்தி
thanks http://consenttobenothing.blogspot.com/
***"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "