...

"வாழ்க வளமுடன்"

11 மே, 2011

நுகர்வதும், பகிர்வதும்......- வெ. இறையன்பு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

வாழ்க்கை மிகவும் எளிமையானது. மிக இயல்பாக உதிர்ந்து விழும் மலரின் மௌனத்தில் வாழ்வைப் பற்றிப் புரிந்துகொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். நம் முன்னோர்கள் வாழ்வு அப்படித்தான் இயல்பாக இருந்தது. மூன்று வயதைத் தாண்டியவர்கள் எண்பது ஆண்டுகள் வாழ முடிந்தது. இறந்து போனவரின் இல்லத்துக்குச் சென்றால், அவர்கள் வாழ்வில் நடந்த சம்பவங்களைச் சிறுகதையைப் போல நினைவுபடுத்திப் பார்க்க முடிகிறது. ஒரு சின்ன கவிதையைப்போல முடிந்துவிடுவதுதான் நம் வாழ்வு. பிரபல பஞ்சாப் எழுத்தாளர் அம்ரிதா ப்ரீதம், 'என் வாழ்க்கையை ஒரு ரெவின்யூ ஸ்டாம்ப்பின் பின்புறத்தில் எழுதிவிடலாம்' என்றார். பிறகு, தன் சுயசரிதத்திற்கு அந்தப் பெயரையே சூட்டினார்.


மரணத்துக்குப் பிறகு என்ன என்று ஆராய்ச்சி செய்கிற நாம், பிறப்புக்கு முன் என்ன என்று யோசிப்பதில்லை. மிகச் சிறிய ஓடையைப் போன்ற நம் வாழ்வை நாமே சிக்கலாக்கிக் கொள்வதில் நமக்கு சந்தோஷம். எந்த நிகழ்விலுமே மகிழ்ச்சியடையாத பலரை நாம் சந்திக்கலாம். திருமணத்தில் மகிழ்ச்சி இல்லை என்று விவாகரத்து செய்து கொள்வார்கள்; பிறகு, அப்போதும் மகிழ்ச்சியடைய மாட்டார்கள். ஏனெனில், உடையணிவதற்கு முன் உள்ளாடையாக, உள்ள ஆடையாக வருத்தத்தை அணிந்து கொள்பவர்கள் அவர்கள்.


வாழ்க்கையை யாரும் அறுதியிட்டு விளக்க முடியாது. சோம்பேறிகள் அதை 'வியர்வையின் துயரம்' என்பர்; சுறுசுறுப்பானவர்கள் அதைப் 'பன்னீரின் தூவல்' என்பர். அவரவர் அனுபவங்களே, அவர்களின் அகராதியாய் அறியப்படும்.


எல்லாம் இருந்தும் ஏன் நம்மிடம் ஒரு வெறுமை இருக்கிறது? காரணமேயில்லாமல் தினமும் எழுந்திருக்கும்போது பயமும், மாலையில் படுக்கைக்குப் போகும்போது சோர்வும் ஏன் நம்மை ஆக்கிரமித்துக் கொள்கிறது? நம் சிரிப்புகளில் போலித்தனமும், நம் உறவுகளில் சுயநலமும் ஏன் தொற்றிக் கொண்டது? நாம் கூடுகின்ற எல்லா நிகழ்வுகளுமே ஏன் சடங்குகளாகவே மாறிவிட்டன? நாம் ஏன் நம் வீடுகளிலேயே அந்நியர்கள் ஆகிவிட்டோம்? எதையும் யாரிடமும் பகிர முடியாத நெருக்கடியின் இறுக்கத்தில் ஏன் நாம் சிக்கிக் கொண்டோம்? சின்ன வயதில் நாம் குதூகலித்துத் திரிந்த மாதிரி நம் குழந்தைகள் ஏன் மகிழ்ச்சியாக இல்லை? நம் பண்டிகைகளில் பகட்டு இருக்குமளவுக்கு ஏன் பகிர்தல் இல்லை? நம் இரவுகளின் இருட்டு ஏன் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது? நம் மனத்தின் அடித்தளத்தில் இருக்கும் இந்தக் கேள்விகளுக்கு விடை காண முடியாமல், பலர் மனநல மருத்துவர்களிடம் செல்கிறார்கள். போகத் துணிச்சல் இல்லாதவர்கள் தொல்பொருள் போன்று தோற்றமளிக்கிறார்கள்.


நாளைக்கென எந்த உத்தரவாதமும் இல்லாமல் வாழ்கின்ற பழங்குடி மக்களின் இருப்பிடங்களில் நான் தங்க நேர்ந்ததுண்டு. அவர்கள் மகிழ்ச்சியோடு இருப்பதைப் பார்த்தேன். இன்னும் ஆறு மாதங்களில் தங்கள் ஊரையே காலி செய்துவிடுவார்கள் என்பது தெரிந்தும், நர்மதைக் கரையோர மக்களிடம் நம்பிக்கை சுடர்விடுவதைக் கண்டேன்.


இத்தனை வசதிகள் இருந்தும், நமக்குக் கடிதம் எழுத முடிவதில்லை. நாம் இருக்கும் ஊரில் இருப்பவர்களையே ஏதேனும் காரியமின்றிச் சந்திக்க முடிவதில்லை. நாள் முடியும்போது, பெரிதாக ஏதும் சாதிக்காமலேயே பரபரப்புடன் இருந்த மாதிரி மனம் படபடக்கிறது.


நிறைய குழந்தைகளுக்கு உடலில் ஊளைச் சதை. முப்பது வயதிலேயே ரத்த அழுத்தம். சில படிகள் ஏறினாலே மூச்சு வாங்கும் அவலம். நமக்கு நிகழும் இவற்றை நாம் நமக்குள் பரிசோதித்துப் பார்க்க வேண்டியவர்களாக இருக்கிறோம்!


இன்று பக்கத்து வீட்டுக்குக்கூட நாம் சகஜமாகப் போக முடியுமா? தொலை பேசியில் தெரிவித்துவிட்டுச் சென்றால் மட்டுமே அனுமதி. இல்லாவிட்டால், விரோதிகளைப் போன்ற நிலை.


நான் சின்ன வயதில் பார்த்திருக்கிறேன். எங்கள் வீடு சேலம் நகரில் இருந்ததால், பக்கத்துக் கிராமங்களிலிருந்து வருகிற வர்களுக்கு அதுவே வேடந்தாங்கல். எப்போதும் இரண்டு பேர் வந்தாலும் சாப்பிடுகிற அளவுக்கு எங்கள் பாட்டி கூடுதலாகவே சமைத்திருப்பார். விருந் தினர் தங்குவதற்கென்றே தனிப் பகுதி உண்டு. இன்று எங்கள் வீட்டில் அது சாத்தியமாகவில்லை. ஏனெனில், சமைப் பதே இரண்டு பேருக்காக மட்டுமே!


அந்த நாளில், விருந்தினர்கள் தங்கள் அனுபவங்களைப் பற்றிப் பேசும் போது, நாங்கள் சுற்றி அமர்ந்துகொண்டு கேட்போம். அவர்கள் வரவால் நாங்கள் மகிழ்வோம். அவர்கள் ஊருக்குத் திரும்பும்போது வருந்துவோம். என் பாட்டிக்கு, யார் வந்தாலும் விதவிதமாக சமைப்பதில் அப்படியரு மகிழ்ச்சி! அப்படிப்பட்டவற்றை இன்று நினைத்துப் பார்க்கவே ஆச்சரியமாக இருக்கிறது. இன்று வாகனங்களும், வாங்கும் திறனும் அதிகரித்துவிட்ட சூழலில், தேவையில்லாமல், சிபாரிசு இல்லாமல் வருபவர்கள் குறைவு கிராமங்களில் கொண்டாடப்படும் பொங்கல் திருவிழாக்களில் கூட பெரும் ஈடுபாட்டைக் காண முடிவதில்லை.


நாங்கள் குடியிருந்த சுப்ரமணிய நகர் சந்நிதித் தெரு, 30 ஆண்டுகளுக்கு முன்பு எப்போதும் விழாக் கோலத்துடன் இருக்கும். வீட்டுக்கு வீடு போட்டி போட்டு மார்கழி மாதத்தில் கோலம் போடுவார்கள். கோயில் உபன்யாசங்களை ஒன்றாகக் கூடிக் கேட்டு மகிழ் வோம். இப்போது வருகிற நியூஸ் ரீலை அவ்வப் போது பள்ளிக் கூடத்தில் மாலை வேளைகளில் போடுவார்கள்; அதைப் பார்க்கவே கூட்டம் கூடும். மாலை நேரங்களில், மைதானங்கள் எல்லாம் விளையாட்டுக் கூடங்களாக மாறும்.


அண்மைக் காலங்களில் அங்கு செல்லும்போது பார்க்கிறேன்... வீதியே வெறிச்சோடியிருக்கிறது. முதியோர்கள் மட்டுமே எஞ்சியிருக்கிற வீதிகளில் தீபாவளியும், பொங்கலும், விநாயகர் சதுர்த்தியும் பெரிதாகச் சிலாகிக்கப்படுவதில்லை. பல வீடுகள் கைமாறி விட்டன. பழைய விசாலமான வீடுகளில் நெருக்கமான அடுக்ககங்கள். கலகலப்பில்லாத அமைதியில், அங்கு காலம் தன்னையே தரையில் அழுத்தித் தேய்த்துச் செல்கிறது.


எனக்கு ஒரு சின்ன சம்பவம் நினைவுக்கு வருகிறது.

எனக்குத் தெரிந்த ஒருவர் எந்த மகிழ்ச்சியான நிகழ்விலும் அசைந்து கொடுக்கமாட்டார். விருதுக்கு மேல் விருது கிடைத்தாலும், அவர் யாருக்கும் விருந்தளித்ததில்லை; அவர் கொண்டாடியதும் இல்லை. 'மாநில விருதோ, தேசிய விருதோ கிடைத்தால் மட்டுமே கொண்டாடு வேன்' எனப் பிடிவாதமாக இருந்த அவருக்கு மாநில விருது கிடைத்தது; ஆனால், அவரால் அதைக் கொண் டாட முடியவில்லை. காரணம், அவர் அப்போது உயிருடன் இல்லை.


சின்னச் சின்ன நிகழ்வுகளை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதே மகிழ்ச்சியை அதிகரிக்கும். அதற்காக ஐந்து நட்சத்திர விடுதிகளில் விழா எடுக்கவேண்டுமென்ற கட்டாயம் இல்லை. வழியோர தேநீர்க் கடையில் அமர்ந்து அன்பாக ஒவ்வொரு துளியையும் சுவைத்துப் பருகுவது கூடக் கொண்டாட்டமே. பகிர்ந்துகொள்ள முடியாத எந்த மகிழ்ச்சியும் சோகத்துக்கே சமமானது.


மால்கம் க்ளேட்பெல் குறிப்பிட்டிருக்கும் சுவையானதொரு நிகழ்ச்சி...

வுல்ஃப் என்கிற மருத்துவர், பென்சில் வேனியாவில் மருத்துவமனை நடத்தி வந்தார். இதயம் பாதிக்கப்பட்ட நோயாளிகள், எல்லா ஊர்களிலிருந்தும் மருத்துவத்திற்காக அவரிடம் வந்துகொண்டிருந்தனர். ஆனால், அருகில் இருந்த ரொஸெடோ என்கிற ஊரிலிருந்து மட்டும் யாரும் வரவில்லை. அவருக்கு அது ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால், அமெரிக்காவில் 1950-களில் மாரடைப்பு என்பது மிகவும் பரவலான உடல்நலக் கோளாறாக இருந்தது.


அவர் அது குறித்து ஆய்வு செய்தார். ஆய்வு முடிவுகள் வியப்பைத் தருவதாக இருந்தன. ரொஸெடோவில் 55 வயதுக்குக் குறைவான யாரும் மாரடைப்பால் இறக்கவும் இல்லை; இதய நோயால் பாதிக்கப்படவும் இல்லை. 55 வயதுக்குக் குறைவான வர்களிலும் சொற்ப நபர்களுக்கே இதயத்தில் சிறு சிறு கோளாறுகள் இருந்தன.


அவர்களிடம் தற்கொலையோ, மதுப் பழக்கமோ, போதை மருந்துகளோ புழக்கத்தில் இல்லை. அங்கு குற்றங்களும் மிக மிகக் குறைவாகவே இருந்தன. வயோதிகத்தால் மரணம் அடைபவர்கள் மட்டுமே இருந்தனர்.


இந்த ஊரின் பூர்வீகம் பற்றி டாக்டர் வுல்ஃப் ஆராய்ந்தார். 1882-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், இத்தாலியில் உள்ள ரொஸெடோ ஊரைச் சேர்ந்த 11 பேரும், ஒரு சிறுவனும் நியூயார்க்கிற்குக் கடல்வழி மார்க்கமாகப் பயணம் செய்தனர். அவர்கள் பென்சில்வேனியாவில் தங்கி, விவசாயம் பார்க்கத் தொடங்கினர். கொஞ்சம் கொஞ்சமாக இத்தாலியிலிருந்து இன்னும் பலர் வந்து, பென்சில்வேனியாவில் தங்கி, அந்த இடத்துக்கும் ரொஸெடோ என்றே பெயரிட்டனர்.


அங்கு காலப்போக்கில் நகர்ப்புறத் தன்மைகள், பள்ளிகள், சர்ச் போன்ற அமைப்புகள் உருவாகத் தொடங்கின.

அவர்களின் உணவைப் பற்றி வுல்ஃப் ஆராய்ந்தபோது, அவர்கள் அதிகமாகக் கொழுப்பு சாப்பிடுபவர்களாகவும், உடற்பயிற்சி செய்யாதவர்களாகவும், தொப்பையும் தொந்தியுமாக இருந்தது கண்டு அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. பிறகு, எப்படி அவர்களின் உடல் ஆரோக்கியமாக இருந்தது?


காரணம், அவர்கள் எப்போதுமே மகிழ்ச்சி யாக இருந்தனர். யார் வீட்டுக்கு வேண்டுமானால் மற்றவர்கள் செல்லலாம். தங்கள் வீட்டில் உணவு சமைக்காதபோது, பக்கத்து வீட்டில் சென்று சாப்பிடலாம். மூன்று தலைமுறைகள் ஒரே கூரையின் கீழ் வாழ்ந்தன. வெற்றிகரமாக வாழ்பவர்கள், மற்றவர்களுக்கு ஒத்தாசை புரிபவர்களாக இருந்தனர். அவர்கள் சமூக அமைப்பைப் பாதுகாப்பானதாக மாற்றியிருந் தனர். தங்கள் உலகத்தைத் தாங்களாகவே சிருஷ்டித்து இருந்தனர். அவர்கள் ஓய்வு நேரத்தில் ஒன்றாக அமர்ந்து மனம்விட்டுப் பேசுவதையும், ஒருவரை ஒருவர் வெளிப்படையாகக் கேலி செய்து சிரிப்பதையும் பார்க்க முடிந்தது.


இயல்பான வாழ்வு, அவர்களின் இதயத்தையும், உடலையும் சீராக வைத்திருந்தது. நூறு ஆண்டுகளுக்கு முன் நமது கிராமங்களும் இப்படித் தானே இருந்தன! அன்று, மருத்துவ வசதிகள் இன்மையால், தொற்றுநோய் கள் மட்டுமே பரவின; மற்றபடி, உடல்நலக் குறைபாடுகள் அதிகம் இல்லை.


மனிதனின் மகிழ்ச்சி, பகிர்வதில் உள்ளது. எந்தவிதமான நிபந்தனையும் இல்லாமல் எல்லோரிடமும் அன்புடனும், பரிவுடனும், பண்புடனும் பரிமாறிக்கொள்ளும் சிநேகமே மகிழ்ச்சிக்கான வித்து. மகிழ்ச்சியின்றி எந்த உயரத்திற்குச் சென்றாலும், அதனால் பயன் இல்லை.


மகிழ்ச்சியே கோயில்; மகிழ்ச்சியே தெய்வம்; மகிழ்ச்சியே வழிபாடு; மகிழ்ச்சியே சுகம்!


***
நன்றி இறையன்பு
படித்ததில் பிடித்தது
***



"வாழ்க வளமுடன்"

4 comments:

kowsy சொன்னது…

நீங்கள் சொன்னதுபோல் கருத்திடுபவர் முதலில் நானாகத்தான் இருக்கின்றேன். அற்புதமான கட்டுரை. மனிதனை நாள்முழுவதும் சிந்திக்கத் தூண்டும் வகையில் அமைந்திருக்கின்றது. தொடருங்கள்
http://kowsy2010.blogspot.com

kowsy சொன்னது…

இவருடைய வீடியோ கேட்டிருக்கின்றேன். சிறந்த ஒரு சிந்தனையாளர், பேச்சாளர். இந்தப் பதிவை எடுத்துத் தந்தமைக்கு நன்றி

prabhadamu சொன்னது…

///// சந்திரகௌரி கூறியது...
நீங்கள் சொன்னதுபோல் கருத்திடுபவர் முதலில் நானாகத்தான் இருக்கின்றேன். அற்புதமான கட்டுரை. மனிதனை நாள்முழுவதும் சிந்திக்கத் தூண்டும் வகையில் அமைந்திருக்கின்றது. தொடருங்கள்
http://kowsy2010.blogspot.com
/////





உங்கள் போன்னா நேரத்தை ஆழ்கடலுக்கு சொலவிட்டதுக்கு மிக்க நன்றி :)

prabhadamu சொன்னது…

////சந்திரகௌரி கூறியது...
இவருடைய வீடியோ கேட்டிருக்கின்றேன். சிறந்த ஒரு சிந்தனையாளர், பேச்சாளர். இந்தப் பதிவை எடுத்துத் தந்தமைக்கு நன்றி
////


thanks :)

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "