...

"வாழ்க வளமுடன்"

11 மே, 2011

''ஏ.சி... கொஞ்சம் யோசி!'' ( ஏ.சி.யால் ஏற்படும் நன்மைகளே அதிகம் )

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


வெயில் பின்னி எடுக்கத் தொடங்கிவிட்டது. சாதாரண காலத்திலேயே ஷேர் மார்க்கெட் ஆர்வலர்களும் டிரேடர்களும் ஏ.சி. அறையிலேயே அடைந்து கிடப்பார்கள். வெயில் காலத்தில் அவர்கள் வெளியே வருவார்களா என்ன?!


இப்படி ஏ.சி. அறைக்குள்ளேயே அடைந்து கிடப்பது உடலுக்கு எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்? சென்னை அரசினர் பொது மருத்துவனையின் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி சிகிச்சைப் பிரிவின் (பொறுப்பு) டாக்டர் முத்து செல்லக்குமார் பேசுகிறார்.


''பொதுவாக ஏ.சி என்றாலே குளிர்ச்சியானது, சளி பிடித்துக் கொள்ளும், காய்ச்சல் வரும் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். உண்மையில் ஏ.சி-யைப் பயன்படுத்தும் விதமாக பயன்படுத்தினால் நன்மைகளே அதிகம்.


ஏ.சி. அறையின் ஈரப்பதத்தைக் குறைக்க உதவுவதோடு, அதை சமநிலையில் வைக்கிறது. வெளிக் காற்றில் இருந்து நுண் கிருமிகள் அறைக்குள் வரவிடாமல், பரவவிடாமல் ஏ.சி தடுக்கிறது.

மேலும், அது காற்றில் உள்ள தூசி துகள்களை வடிகட்டி அறைக்குள் அனுப்புகிறது!'' என்றவர் ஏ.சி-யைப் பயன்படுத்தும் விதம் குறித்து நமக்கு விளக்கினார்.


''ஏ.சி-யை சரியாகப் பயன்படுத்த, அதிலுள்ள ஃபில்டரை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும். அடிக்கடி என்பது அதில் எந்த அளவுக்கு தூசி, துகள்கள் படிகிறது என்பதை பொறுத்து இருக்கிறது.வாகனங்கள் அதிகமாகச் செல்லும் மெயின் ரோட்டில் வீடு இருந்தால் காற்றில் புழுதி, தூசிகள் அதிகம் இருக்கும். அப்போது ஃபில்டரில் தூசி அதிகம் சேரும். அதுபோன்ற இடங்களில் இருப்பவர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை ஃபில்டரை சுத்தப்படுத்துவது அவசியம்.ஓரளவுக்கு சுத்தமான காற்று வீசும் பகுதிகளில் வசிப்பவர்கள் சுமார் 20 நாள்களுக்கு ஒரு முறை ஃபில்ட்டர்களை சுத்தப்படுத்தினால் போதும்.காற்றில் கலந்திருக்கும் கிருமிகளை வீட்டிற்குள் வர விடாமல் ஏ.சி. தடுப்பதால் காச நோய் தடுக்கப்படுகிறது. காற்றில் கலந்திருக்கும் மகரந்த துகள்களை அறைக்குள் வரவிடாமலும் ஏ.சி. தடுத்துவிடுகிறது.இதனால், மனிதர்களுக்கு ஏற்படும் அலர்ஜி, தும்மல், நீர்க்கோவை போன்றவற்றை தொடர்ந்து ஏற்படும் சைனஸ் பாதிப்பு தடுக்கப்படுகிறது.

ஏ.சி. மூலமான அறையின் வெப்பநிலை 22 முதல் 25 சென்டி கிரேடுக்குள் இருப்பது நல்லது. அப்படி இருக்கும்பட்சத்தில் அலர்ஜி, ஆஸ்துமா பாதிப்பு தடுக்கப்படும்.

கடும் குளிர்காலத்தில் புற வெப்பநிலை மைனஸ் டிகிரிக்கு குறைவாக இருக்கும். அப்போது மூத்தக் குடிமக்கள் எல்லாம் ஆடிப் போவார்கள். அப்போது அவர்கள், மிதமான வெப்பநிலையில் ஏ.சி அறைக்குள் இருந்தால் பாதிப்பு இருக்காது.


மேலும், கோடையில் கடும் வெப்பத்தை வயதானவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. அப்போதும் மிதமான வெப்பநிலைக்கு கைகொடுப்பது ஏ.சி-தான். அதாவது, வயதானவர்களுக்கு உடல் வெப்பநிலையை சீராக வைத்துக்கொள்ள ஏ.சி. கை கொடுக்கிறது.


நம்மில் பெரும்பாலோர் ஃபில்டரை ஆண்டு கணக்காக சுத்தப்படுத்தாமல் வைத்திருக்கிறார்கள். இதனால், அறைக்குள் தேவையான அளவுக்கு குளிர்ச்சி இருக்காது. மேலும், நுண் கிருமிகள் ஃபில்ட்டருக்குள் குவிந்திருப்பதால் சுவாசக் கோளாறு மற்றும் நிமோனியா காய்ச்சல் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.

வெயிலில் சென்றுவிட்டு, சிலர் வீட்டுக்குள் வந்தவுடன் ஏ.சி. அறைக்குள் தஞ்சம் புகுவார்கள். இது உடலுக்கு நல்லது இல்லை. சற்று நேரம் சாதாரண வெப்பநிலையில், மின் விசிறி காற்றில் ஓய்வு எடுத்துவிட்டு அதன்பிறகு ஏ.சி. அறைக்குள் நுழைவதே சரியானது.

சிலர் ஏ.சி-யை மிகவும் கூட்டி மிகவும் குளிர்ச்சியாக வைத்திருப்பார்கள். இதனால், ஆஸ்துமா மற்றும் அலர்ஜி உருவாகவும், இந்தப் பாதிப்பு இருப்பவர்களுக்கு அதன் தீவிரம் அதிகரிக்கவும் கூடும். எனவே, ஏ.சி. அறை எப்போதும் மிதமான வெப்பநிலையில் இருப்பதுதான் மனிதர்களின் உடல் நலனுக்கு நல்லது.

சிலர் அலுவலகம், கார், வீடு என 24 மணி நேரமும் ஏ.சி-யிலேயே இருந்து பழகி இருப்பார்கள். அது போன்றவர்களுக்கு ஏ.சி. இல்லை என்றால் எதையோ இழந்ததுபோல் இருக்கும். இதைத் தவிர்க்க இடையிடையே ஏ.சி. இல்லாத இடத்திலும் இருக்க பழகிக் கொள்வது நல்லது.மற்றபடி ஏ.சி-யால் ஏற்படும் தீமைகளைவிட ஏ.சி.யால் ஏற்படும் நன்மைகளே அதிகம். எல்லாம் நாம் அதனை பயன்படுத்துவதில்தான் இருக்கிறது!'' -முத்தாய்ப்பாக முடிக்கிறார் டாக்டர் முத்து செல்லக்குமார்.


***
thanks நாணய விகடன்
01-மே -2011
thans டாக்டர்
***
"வாழ்க வளமுடன்"

இந்த நாள் இனிய நாளாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "