...

"வாழ்க வளமுடன்"

01 பிப்ரவரி, 2011

முதுமையில் ஒரு முக்கிய பிரச்னை “பறங்கிக்காய்’

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


தலையில் நரையும், தோலில் சுருக்கமும், பார்க்கும் பார்வையில் முதிர்ச்சியும் முதுமையின் அறிகுறிகளாக எண்ணிவிட வேண்டாம். அவை அனுபவத்தின் அடையாளங்கள். பார்வை குறைந்தவர்களுக்கு கண்களாகவும், காது கேட்கும் திறன் குறைந்தவர்களுக்கு காதுகளாகவும், நடக்க இயலாதவர்களுக்கு ஊன்றுகோலாகவும் சொந்தங்களும், பந்தங்களும் இருக்க வேண்டும் என்பதற்காகவே கூட்டு குடும்பம் நடைமுறை இருந்து வந்தது.


ஆனால் முதுமையில் தோன்றும் பல உடல் உபாதைகள் பிறர் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாறுதல்களே முதியவர்கள் தனித்து விடப்பட்டமைக்கு முதன்மையான காரணங்களாம். “அறுநீர்’ என்று தினமும் ஆறு முறை சிறுநீர் கழித்தலின் அவசியத்தை சித்த மருத்துவம் வலியுறுத்துகிறது. ஆனால், உடல் உபாதையால் முதுமையின் காரணமாக தினமும் 60 முறை சிறுநீர் கழித்து அவதிப்படும் முதியவர்கள் இன்றும் நம்மிடையே தடுமாற்றத்துடன் நடைபோடுகின்றனர்.



சிறுநீர் பையின் அடிப்பாகத்தில் வெளிப்புறமாக சிறுநீர் பாதையை சூழ்ந்து காணப்படும் பரஸ்தகோளம் என்னும் புராஸ்டேட் கோளத்தின் வீக்கமே முதுமையில் தோன்றும் சிறுநீர் பிரச்னைக்கு காரணமாக அமைகிறது. புராஸ்டேட் திரவத்தை தாங்கி, விந்து திரவத்துடன் இணைந்து, உறவின் போது சீராக வெளிப்படுவதற்கு உதவியாக இருக்கும் இந்த கோளங்கள் முதுமையின் காரணமாக சற்று பெருக்கின்றன. அத்துடன் இதன் சுருங்கி விரியும் தன்மை குறைந்து, கல் போல இறுகி, ஆண்களின் சிறுநீர் வெளியேறும் பாதையை இறுக்கி பிடிக்கின்றன.



இதனால், சிறுநீர் பையில் நிறையும் சிறுநீரானது வெளியேற இயலாமல் சிறுநீர் பையின் உள்ளேயும், சிறுநீர் பாதையை நோக்கியும் ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்துவதால் முதியவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற எண்ணம் உண்டாகிறது. ஆனால், புராஸ்டேட் வீக்கத்தினால் சிறுநீர் பாதை சுருங்கி சிறுநீர் பையில் முழு சிறுநீரும் வெளியேறாமல் தங்கிவிடுவதால், சில மணி நேரங்களில் பல முறை எழுகின்றனர். இதனால், அவர்கள் தூக்கம் கெடுவதுடன் சுற்றியுள்ளவர்களும் எரிச்சலடையும் சூழ்நிலை ஏற்படுகிறது.



முதுமையில் தோன்றும் இதுபோன்ற உபாதைகளை நீக்கி, புராஸ்டேட் வீக்கத்தை கட்டுப்படுத்தும் எளிய, வீட்டு மருந்து தான் “பறங்கிக்காய்!’ “குக்கூர்பிட்டோ மேக்சிமா’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட “குக்கூர்பிட்டேசியே’ குடும்பத்தைச் சார்ந்த பறங்கி விதையிலுள்ள துத்தநாகம் புரஸ்டேட் வளர்ச்சிக்கு காரணமான மைட்டாசிஸ் செல் வளர்ச்சியை கட்டுப்படுத்தி, புரஸ்டேட் வீக்கத்தை குறைக்கின்றன.



மேலும் இவற்றிலுள்ள ஏ, பி வைட்டமின்கள், லினோலிக் அமிலம், ஸ்டீரால் கிளைக்கோசைடுகள், ஸ்டீரால் கொழுப்பு அமில எஸ்டர்கள், டிரைடெர்பினாய்டுகள் கட்டிகளையும், வீக்கத்தையும் கரைத்து, சிறுநீர் பாதை அழுத்தத்தை நீக்கி, சிறுநீர் கழித்தலை சுலபமாக்குகின்றன. பறங்கி விதை, வெள்ளரி விதை, நெருஞ்சில் முள், வில்வ வேர்ப்பட்டை ஆகியவற்றை சம அளவு எடுத்து, இளவறுப்பாக வறுத்து, ஒன்றிரண்டாக இடித்து வைத்து கொள்ள வேண்டும்.



20 கிராம் பொடியை 500 மி.லி., நீரில் போட்டு கொதிக்க வைத்து, 125 மி.லி.,யாக சுண்டிய பின்பு வடிகட்டி, காலை மற்றும் மாலை உணவுக்கு முன்பு குடித்து வர சதையடைப்பு, சிறுநீர் எரிச்சல் மற்றும் வலி நீங்கும். பறங்கி விதைகளை இளவறுப்பாக வறுத்து பொடித்து வைத்து கொண்டு ஒன்று முதல் இரண்டு தேக்கரண்டி அளவு சூடான நீரில் போட்ட 30 நிமிடம் ஊற வைத்து இரண்டு அல்லது மூன்று மாதங்கள் தினமும் குடித்துவர புராஸ்டேட் வீக்கம் குறையும்.

***

இளவரசி, திருநெல்வேலி:

எனக்கு வயிற்றில் பூச்சி அதிகமுள்ளதால் பாகற்காயை அடிக்கடி உட்கொள்வேன். இந்த காயை தொடர்ந்து சாப்பிடலாமா? பாகற்காய் மருத்துவ குணங்கள் நிறைந்த உணவுப்பொருள். சர்க்கரை நோய், தோல் நோய், வயிற்றுப்புழுக்கள் ஆகியவற்றிற்கு அருமையான மருந்து. ஆனால், வாதம் என்னும் வாயுவைப் பெருக்குவதால் உடல் வலியுடையவர்கள், செரிமான கோளாறு உடையவர்கள் அடிக்கடி பாகற்காய் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.



அளவுக்கு அதிகமான கசப்பு சுவையை தொடர்ந்து உட்கொள்வதால் இனப்பெருக்க அணுக்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. ஆகவே உணவாக உட்கொள்ளும் பொழுது வாரம் ஒருமுறை எடுத்து கொள்வது நல்லது. அதிலும் பிஞ்சு பாகல் அனைத்து விதத்திலும் உடலுக்கு ஏற்றதாகும்.


- டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ், மதுரை.


***
thanks டாக்டர்
***


"வாழ்க வளமுடன்"


இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "