...

"வாழ்க வளமுடன்"

20 ஜனவரி, 2011

ஒன்றரைச் சதவீதம் பால்? என்றால் என்ன?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
கொஞ்ச காலத்துக்கு முன்பு நாலரை சதவீதம் பால் என்று தொலைக் காட்சியில் விளம்பரம் அமளிப்பட்டது நினைவிருக்கலாம். நாலரையைப் போல ஒன்றரை சதவீதப் பால், 3 சதவீதப் பால் என்று பாலில் பல தினுசு உண்டு. இவையெல்லாம் என்ன?



இது குறித்து திண்டுக்கல் வக்கம்பட்டி கால்நடை மருத்துவ மையத் தலைவரும் ஓய்வு பெற்ற கால்நடை பராமரிப்பு உதவி இயக்குநருமான மருத்துவர் கே.கணேசன் கூறியதாவது:-


""பசுவின் மடியில் இருக்கும் வரை பால் தூய்மையானது. கறந்த பாலில் பல நுண்ணுயிர்கள் (பாக்டீரியாக்கள்) கலந்துவிடுகின்றன. பாலில் கலந்து வரும் லாக்டோபேசில்லை என்னும் நுண்ணுயிர்கள் பல்கிப் பெருகி பாலில் உள்ள சர்க்கரைப் பொருளாகிய லக்டோபேசில்லை லாக்டிக் அமிலமாக மாற்றுகிறது. பாலில் லாக்டிக் அமிலம் மிகும்போது பால் புளித்து திரிந்து விடும். இதையே பால் கெட்டுவிட்டது என்கிறோம். சில பால் ரகங்களைப் பார்ப்போம்.

**

குளிரூட்டப்பட்ட பால் (சில்லிங்):

பால் கெட்டுப் போகாமல் பாதுகாப்பதற்கு முதல்படி குளிரூட்டுதல். நுகர்வோரைச் சென்றடையும் பாலைப் பாதுகாப்பதற்குப் பாலில் உள்ள நுண்ணுயிர்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். பாலை வேகமாகக் குளிரச் செய்து 5 டிகிரி சென்டிகிரேட் அளவில் பாதுகாக்கப்படுகிறது. இந்தக் குளிர் நிலையில் நுண்ணுயிர்கள் இறந்து போகாமல் இருந்தாலும் செயலற்றதாகப் போய்விடும். இதனால் பால் 24 மணி நேரம் வரை கெட்டுப்போகாது.

**

கொழுப்பு நீக்கிய பால் (ஸ்கிம் மில்க்):

பாலில் உள்ள கொழுப்பு இயந்திரத்தின் மூலம் பிரித்தெடுக்கப்படுகிறது. இந்தக் கொழுப்பை பாலேடு (கிரீம்) என்கிறோம். இந்தப் பாலை கொழுப்பு இல்லாத பால் சாப்பிட விரும்புபவர்கள் பயன்படுத்துகின்றனர். ஆடை நீக்கிய பாலைக் காயவைத்து ஆறவைத்து உறை ஊற்றினால் தயிராகும். இது கொழுப்பற்ற தயிர்.

**

பால் பதப்படுத்துதல் (பாஸ்சுரைஸ்ட் பால்):

குளிரூட்டுதல் மூலம் முடக்கி வைத்து நுண்ணுயிர்களை முழுமையாக அழிக்கிறோம். அதே நேரத்தில் பாலில் உள்ள சத்துப் பொருட்கள்ó கெட்டுப் போகாமல் பாதுகாக்கப்படுகின்றன. பாலை 72 டிகிரி அளவுக்கு சூடேற்றி அதே சூட்டில் 15 நிமிடம் வைத்திருந்து, பின் வேகமாக 5 டிகிரி சென்டிகிரேட் குளிர் நிலைக்கு கொண்டு வரப்படும்.

**

பாலின் விலை:

பசும்பாலில் நாலரை சதவீதம் கொழுப்புச் சத்தும் எருமைப்பாலில் 7 சதவீதம் கொழுப்புச் சத்தும் உள்ளது. பாலில் உள்ள கொழுப்புச் சத்துக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. எருமைப் பாலில் கொழுப்புச் சத்து அதிகமாக இருப்பதால் அதற்கு விலை கூடுதலாகிறது. பாலில் புரதம், சர்க்கரை மற்றும் சாம்பல் ஆகியவற்றை கொழுப்பற்ற திடப் பொருட்கள் (SNF) என்கிறோம். பசும்பாலில் 8.5 சதவீதம் எஸ்.என்.எப்-ம், எருமைப்பாலில் 9.5 சதவீதம் எஸ்.என்.எப்-ம் உள்ளது. பசும்பாலில் 87.2 சதவீதம் தண்ணீரும், எருமைப் பாலில் 84.1 தண்ணீரும் உள்ளது.

**

தரப்படுத்தப்பட்ட பால் (ஸ்டாண்டர்டைஸ்ட் பால்):

நமது நாட்டு பால் கலப்பட தடுப்புச் சட்டத்தின்படி தரப்படுத்தப்பட்ட பாலில் 4.5 சதவீதத்திற்கு குறையாமல் கொழுப்பும், 8.5 சதவீதத்திற்கு குறையாமல் கொழுப்பற்ற திடப் பொருளும் இருக்க வேண்டும். நுகர்வோர் இந்தப் பாலுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியதாக இருக்கும். பால் பாக்கெட்டில் தரப்படுத்தப்பட்ட பால் என்று அச்சிடப்பட்டிருக்கும்.


**

ஒருநிலைப்படுத்தப்பட்ட பால் (ஹோமோஜனைஸ்ட் பால்) :

பாலில் உள்ள கொழுப்புச் சத்து கொழுப்புத் திவலைகளாகக் கலந்திருக்கின்றன. இதனால் பாலில் கெட்டித் தன்மை இருக்காது. பாலின் கெட்டித் தன்மையைக் கூட்டுவதற்கு இயந்திரத்தின் உதவியோடு பாலில் உள்ள கொழுப்புத் திவலைகள் உடைத்துச் சிறிய துணுக்குகளாக்கப்படுகின்றது. இப்பொழுது கொழுப்பும் பாலுடன் இரண்டறக் கலந்து விடுகிறது. பாலின் கெட்டித் தன்மையும் கூடுகிறது. அதோடு பாலின் தோற்றமும் மணமும் சுவையும் கூடும். பாலில் வெண்ணெய் மிதக்காது. தயிர் மென்மையாக இருக்கும். ஆனால் தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுக்க இயலாது.

**

கொழுப்பு குறைந்த பால் (டோன்ட் பால்):

இந்த டோன்ட் பாலில் 3 சதவீதம் கொழுப்பும், 8.5 சதவீதம் கொழுப்பற்ற திடப்பொருளும் இருக்கும். கொழுப்பு மட்டுமே குறைக்கப்படுகிறது. மற்ற சத்துக்கள் அப்படியே இருக்கும். பால் பற்றாக்குறை காலங்களில் எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் பால் டோன்ட் செய்யப்படுகிறது. பாலின் விலையைக் குறைக்கவும் டோன்ட் பால் தயாரிக்கப்படுகிறது. டோன்ட் பாலின் விலை குறைவு.


இரட்டைக் கொழுப்பு குறைப்பு (டபுள் டோன்ட் பால்) பாலும் நுகர்வோருக்கு குறைந்த விலையில் கிடைக்கிறது. இந்தப்பாலில் 1.5 சதவீதம் கொழுப்பும் 9 சதவீதம் கொழுப்பற்ற திடப்பொருளும் இருக்கிறது'' அருஞ்சுவையாக பாலைப் பற்றிச் சொல்லி முடித்தார்.



***
thanks தினமணி
***




"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "