ரத்தத்தில் அதிக அளவு கொழுப்புச் சத்து சேரும் நிலையில், அது ரத்தக் குழாய் பாதைகளை குறுகலாக்கி ("அதீரோஸ்குளோரோசிஸ்'), அடைப்பை ஏற்படுத்துகிறது.
*
இதனால் நெஞ்சு வலி, மாரடைப்பு போன்ற உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அறிகுறிகள் ஏற்படுகின்றன. எனவே ரத்தத்தில் கொழுப்புச் சத்து சேருவதற்கும் பாதிக்கப்படுபவரின் உணவு முறைக்கும் நேரடித் தொடர்பு உள்ளது.
*
எண்ணெய், நெய், டால்டா, தேங்காய் எண்ணெய், பன்றிக் கறி, மூளைக் கறி, நண்டு, ஈரல் முதலிய அசைவ உணவு வகைகள், ஊறுகாய், பாலாடை -பால் கட்டி-பால் கோவா, முந்திரி, தேங்காய், வேர்க்கடலை உள்ளிட்டவற்றில் கொழுப்புச் சத்து அதிகம்.
*
எனவே ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகம் உள்ள இதய நோயாளிகள், உணவு முறையை கீழ்க்கண்டவாறு மாற்றி அமைத்துக் கொள்வது அவசியம்.
***
எந்த எண்ணெய் நல்லது?
1. வறுத்தல், பொரித்தலுக்கு எண்ணெய் குறைவாகத் தேவைப்படும் "நான்-ஸ்டிக்' பானைப் பயன்படுத்துங்கள். உறையாத எண்ணெய் வகைகளான சூரிய காந்தி எண்ணெய், நல்லெண்ணெய், கடலைஎண்ணெய் போன்றவற்றில் ஏதாவது இரண்டு எண்ணெய்களைச் சேர்த்து அளவோடு சமையலுக்குப் பயன்படுத்துங்கள்.
*
2. கொலஸ்டிரால் என்பது வேறு; கொழுப்புச் சத்து என்பது வேறு. "கொலஸ்டிரால் இல்லாத எண்ணெய்' போன்ற விளம்பரங்களைப் பார்த்து மயங்கி, குறிப்பிட்ட எண்ணெய்யை வாங்கிப் பயன்படுத்தாதீர்கள்.
*
ஏனெனில் தாவர வகைகளிலிருந்து பெறப்படும் எந்த எண்ணெய்யிலும் கொலஸ்டிராலுக்கு இடமில்லை. பிராணிகளிடமிருந்து கிடைக்கும் பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களான வெண்ணெய், நெய் போன்றவற்றில் மட்டுமே கொலஸ்டிரால் உண்டு.
*
3. பழைய எண்ணெய்யை சூடுபடுத்தி மீண்டும் பூரி போன்றவை செய்ய பயன்படுத்தக் கூடாது. பழைய எண்ணெய்யை தாளிக்க பயன்படுத்தலாம்.
*
4. எருமைப் பாலில் கொழுப்பு அதிகம். பசும்பால் நல்லது. கொழுப்புச் சத்து குறைந்த ஸ்டாண்டர்ûஸடு பால் இதய நோயாளிகளுக்கு நல்லது. ரத்தத்தில் அதிக கொழுப்புச் சத்து உள்ள இதய நோயாளிகளுக்கென்றே, கொழுப்புச் சத்து அறவே நீக்கிய பாலும் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. அதை வாங்கிப் பயன்படுத்தலாம்.
*
5. அசைவ உணவு வகைகளில் ஆட்டுக்கறி, மாட்டுக் கறி, பன்றிக் கறி ஆகிய மூன்றிலும் கொலஸ்டிரால் உள்ளது. இதனால் இவற்றில் கொழுப்புச் சத்து அதிகம். முட்டையின் மஞ்சள் கருவிலும் கொலஸ்டிரால் அதிகம். இதய நோயாளிகள் கோழிக்கறி, மீன் சாப்பிடலாம்; ஆனால் அவற்றை பொரிக்கவோ அல்லது வறுக்கவோ கூடாது. குழம்பில் போட்ட மீன் அல்லது குழம்பில் போட்ட கோழிக்கறி சாப்பிடலாம். வாரத்துக்கு இரு முறை மட்டுமே இவற்றைச் சாப்பிடலாம்.
*
6. அசைவ உணவு சாப்பிடுவோர், ஆடு-கோழி போன்றவற்றின் ஈரல், சிறுநீரகம், மூளை போன்றவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஆடு-கோழி ஆகியவற்றின் உறுப்புகளில் கொழுப்புச் சத்து அதிகம்.
*
7. கொட்டை வகைகள்:
முந்திரிப் பருப்பு, வேர்க்கடலை, எள் போன்றவற்றில் கொழுப்புச் சத்து அதிகம்; இதனால் கலோரிச் சத்து அதிகம். எனவே இதய நோயாளிகள் இத்தகைய உணவைத் தவிர்க்க வேண்டும். பாதாம் பருப்பை இரண்டு அல்லது மூன்று என்ற எண்ணிக்கையில் மட்டுமே நாள் ஒன்றுக்குச் சாப்பிடலாம்.
*
8. நார்ச்சத்து காய்கறிகள்:
நார்ச்சத்து அதிகம் சாப்பிடுவதால், ரத்தத்தில் கொழுப்பு சேருவது தாமதப்படுத்துகிறது.
***
தேவை கலோரி மதிப்பீடு:
மேற்சொன்ன உணவு முறைகள், நோயாளிகளுக்கு பொதுவான உணவுத் திட்ட முறைகள். ஒவ்வொரு இதய நோயாளியின் உயரம், எடை, "பாடி மாஸ் இண்டக்ஸ்' (பி.எம்.ஐ. அட்டவணை), அன்றாட அவரது வேலை ஆகியவற்றைப் பொருத்து, ஒவ்வொருவருக்கும் நாள் ஒன்றுக்கு உணவு மூலம் எவ்வளவு கலோரிச் சத்து தேவைப்படும் என்பதை உணவு ஆலோசனை நிபுணர் மதிப்பிடுவார்.
*
இத்தகைய கலோரிச் சத்து மதிப்பிட்டைக் கொண்டு ஒவ்வொரு நோயாளிக்கும் குறிப்பிட்ட உணவு முறைத் திட்டம் பரிந்துரைக்கப்படுகிறது. எனவே பக்கத்து வீட்டு நோயாளி அல்லது நண்பராக இருக்கும் நோயாளியின் உணவு முறையைக் கேட்டு, உணவு நிபுணரின் ஆலோசனை கலக்காமல் உணவுத் திட்டத்தை மேற்கொள்வது தவறானது.
***
நன்றி தினமணி
***
***
0 comments:
கருத்துரையிடுக