...

"வாழ்க வளமுடன்"

13 செப்டம்பர், 2015

30 வகை அடுப்பில்லாத சமையல்..!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

''வேக வைத்தல், வறுத்தல், பொரித்தல் போன்ற சமையல் முறைகளுக்கு உட்படுத்தப்படும்போது... சமையலில் உபயோகிக்கப்படும் பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றில் உள்ள சத்துக்களில் பெரும்பாலானவை அழிந்துவிடுகின்றன'' என்று உணவியலாளர்கள் நெடுங்காலமாக எச்சரிக்கை மணி ஒலித்து வருகிறார்கள்.

அதேசமயம், ''சமைக்காமலே சாப்பிடுவது என்பதெல்லாம் சரிப்பட்டு வருமா?'' என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. இந்தக் கேள்விக்கு ''சரிப்பட்டு வரும்'' என்று பதில் அளிக்கும் சமையல் கலை நிபுணர் , அடுப்பை பற்ற வைக்காமலே செய்யக்கூடிய 30 வகை உணவுகளுக்கான ரெசிபிகளை இங்கே வழங்குகிறார்.

''இந்த உணவுகளை அடிக்கடி செய்து கொடுத்தால்... உங்கள் குடும்பத்தினர் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்'' என்று அக்கறையுடன் கூறுகிறார்...


வேர்க்கடலை - பேபிகார்ன் புரட்டல்

தேவையானவை:

பேபிகார்ன் - அரை கப் (பொடியாக நறுக்கவும்), பச்சை வேர்க்கடலை - கால் கப், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, தனியா - ஒரு டீஸ்பூன், பூண்டு - 3 பல் உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

காய்ந்த மிளகாய், பூண்டு, தனியா மூன்றையும் நீர் சேர்க்காமல் அரைக்கவும். வேர்க்கடலையை நீரில் ஊற வைத்து, தோல் உரித்து, நறுக்கிய பேபிகார்ன், உப்பு, சீரகத்தூள் ஆகியவற்றுடன் சேர்த்துக் கலக்கவும். அரைத்து வைத்த பொடியை மேலே தூவி, சாப்பிடக் கொடுக்கவும்.

திடீர் பஞ்சாமிர்தம்

தேவையானவை:

வாழைப்பழம் - ஒன்று (வட்டமாக நறுக்கவும்), பேரீச்சம்பழம் - 10 (கொட்டை நீக்கவும்), நறுக்கிய ஆப்பிள் - கால் கப், கமலா ஆரஞ்சு சுளை - 4 (தோல், கொட்டை நீக்கவும்), மாதுளை முத்துகள் - சிறிதளவு, டயமண்ட் கற்கண்டு - 2 டேபிள்ஸ்பூன், நாட்டுச்சர்க்கரை - கால் கப், தேன் - சிறிய பாட்டில் ஒன்று.

செய்முறை:

அனைத்து பழங்களையும் பெரிய பேஸினில் போட்டுக் கலக்கி, கற்கண்டு, நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கிளறி, தேவையான அளவு தேன் ஊற்றிப் பிசைந்து சாப்பிடக் கொடுக்கவும்.

மசாலா மோர்

தேவையானவை:

கெட்டித் தயிர் - ஒரு கப், மிகப் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவையான அளவு, தண்ணீர் - 5 கப், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - சிறிதளவு.

செய்முறை:

கெட்டித் தயிரை நன்றாகக் கடைந்து உப்பு, தண்ணீர் சேர்த்து மோராக்கவும். இதில் பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்க்கவும். சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி மூன்றையும் மிக்ஸியில் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து, மோரில் சேர்த்து நன்றாக ஆற்றி வைக்கவும்.

நெல்லிக்காய் அரிஷ்டம்

தேவையானவை:

நெல்லிக்காய் - அரை கிலோ, பனைவெல்லம் - அரை கிலோ, மண்பானை - ஒன்று (சுத்தமானது).

செய்முறை:

பனைவெல்லத்தைப் பொடி செய்யவும். ஈரம் இல்லாத மண்பானையில் ஒரு கை வெல்லம், ஒரு கை நெல்லிக்காய் என மாற்றி மாற்றிப் போட்டு, கடைசியாக மேல் பூச்சாக வெல்லம் போட்டு, சுத்தமான வெள்ளைத் துணியால் பானையை மூடி, வெயில் படாத இடத்தில் வைக்க வேண்டும். 40-45 நாட்களுக்குப் பிறகு துணியில் கொட்டி நெல்லிக்காயின் கொட்டைகளை நீக்கி உபயோகப்படுத்தலாம். கண்ணாடி பாட்டில் அல்லது காற்றுப்புகாத டப்பாவில் வைத்து தினமும் சாப்பிடலாம்.


வாழைத்தண்டு சாறு

தேவையானவை:

சிறிய வாழைத்தண்டு - ஒன்று, பூண்டு - 2 பல், ஓமவல்லி இலை, வெற்றிலை - தலா ஒன்று, துளசி - சிறிதளவு, மிளகு - 3.

செய்முறை:

வாழைத்தண்டை பட்டை, நார் நீக்கி, வட்ட வட்டமாக நறுக்கி... பூண்டு, ஓமவல்லி இலை, வெற்றிலை, துளசி, மிளகு சேர்த்து, நீர் விட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்து வடிகட்டவும்.

வாரம் ஒரு முறை இந்த சாற்றை அரை டம்ளர் அளவு பருகினால்... சளி, இருமல் தொந்தரவில் இருந்து பாதுகாக்கும்.


பருப்பு - காய்கறி கோசுமல்லி

தேவையானவை:

பாசிப்பருப்பு - ஒரு கப், வெள்ளரி துருவல், கேரட் துருவல், தேங்காய் துருவல், கோஸ் துருவல், பீட்ரூட் துருவல் - தலா கால் கப், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித் தழை - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவிடவும். பிறகு, நீரை வடித்து பாசிப்பருப்புடன் அனைத்துத் துருவல்களையும் சேர்த்து... உப்பு, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்துக் கிளறி, எலுமிச்சைச் சாறு சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.


பிஸ்கட் பேடா

தேவையானவை:

மேரி பிஸ்கட் - 6, ரஸ்க் - 2, பால் பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன், தேன் - தேவையான அளவு, பனங்கற்கண்டு (பொடித்தது) - ஒரு டீஸ்பூன், செர்ரி பழம் - சிறிதளவு.

செய்முறை:

மேரி பிஸ்கட்டையும், ரஸ்க்கையும் உடைத்து, மிக்ஸியில் சேர்த்து மாவாக அரைக்கவும். இதனுடன் பால் பவுடர், பனங்கற்கண்டு சேர்த்து தேன் விட்டு பிசைந்து உருண்டையாக பிடித்து, தட்டையாக்கினால்... பிஸ்கட் பேடா தயார். நறுக்கிய செர்ரி பழத்தை, இதன் மேல் வைத்து அலங்கரிக்கவும்.


அன்னாசி அச்சு இனிப்பு

தேவையானவை:

அன்னாசிபழச் சாறு - 50 மில்லி, பால் பவுடர் - 5 டேபிள்ஸ்பூன், பைனாப்பிள் ஆயில் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - கால் டீஸ்பூன், ஐசிங் சுகர் - 4 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

பால் பவுடர், ஐசிங் சுகரை சலித்துக் கொண்டு... அவற்றுடன் பைனாப்பிள் ஆயில், அன்னாசி பழச்சாறு சேர்த்துப் பிசைந்து வைக்கவும். சாக்லேட் அச்சு அல்லது பிஸ்கட் கட்டர் உதவியுடன் விருப்பமான வடிவம் கொடுத்து, ஃப்ரிட்ஜில் முக்கால் மணி நேரம் வைத்து எடுத்தால்... அசத்தலான சுவையில் அன்னாசி அச்சு இனிப்பு ரெடி.


தேங்காய் - மாங்காய் - சோள சுண்டல்

தேவையானவை:

முற்றிய தேங்காய் - முக்கால் மூடி, அதிக புளிப்பிலாத மாங்காய் (சிறியது) - ஒன்று, அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் - முக்கால் கப், வெள்ளை மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் - ஒரு சிட்டிகை, நறுக்கிய வெள்ளரிக்காய் - கால் கப், எலுமிச்சை பழம் - அரை மூடி, நறுக்கிய வெங்காயம் - சிறிதளவு, உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:

தேங்காய், வெள்ளரி, மாங்காய் மூன்றையும் சிறுசிறு சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும். இவற்றுடன் அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் சேர்த்துக் கலந்து... உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், தனியாத்தூள் சேர்த்துக் கிளறவும். கடைசியாக, எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். மேலே பொடியாக நறுக்கிய வெங்காயம் தூவவும்.

மாலை நேர டிபனுக்கு சரியான சாய்ஸ் இந்த சுண்டல்.


இனிப்பு அவல் பொங்கல்

தேவையானவை:

தட்டை அவல் - ஒரு கப், தேங்காய் துருவல் - அரை கப், நாட்டுச்சர்க்கரை அல்லது வெல்லத் துருவல் - கால் கப், பொடியாக நறுக்கிய பேரீச்சை - கால் கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, காய்ந்த திராட்சை - 10, செர்ரி பழம் - 5 (ஒவ்வொன்றையும் 4 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்).

செய்முறை:

அவலை தண்ணீரில் நன்றாக அலசி எடுத்து, நீர் தெளித்து 5 - 10 நிமிடம் ஊற வைக்கவும். இதனுடன் தேங்காய் துருவல், நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லத் துருவல், பொடியாக நறுக்கிய பேரீச்சை, செர்ரி பழம், காய்ந்த திராட்சை சேர்த்து... பிறகு ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கினால், இனிப்பு அவல் பொங்கல் ரெடி.

இது ரத்த சோகையில் இருந்து நிவாரணம் அளிக்கும். குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் எளிதில் ஜீரணமாகும். காலை, இரவு நேர டிபனாக சாப்பிடலாம்.


மஞ்சள்பூசணி - தேங்காய்ப் பால் பாயசம்

தேவையானவை:

துருவிய மஞ்சள்பூசணி - அரை கப், தேங்காய்ப் பால் - ஒரு கப், பச்சைக் கற்பூரம் - மிளகளவு, ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், துருவிய வெல்லம் - 2 டேபிள்ஸ்பூன், பால் பவுடர் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

தேங்காய்ப் பாலில், பால் பவுடர் சேர்த்துக் கலக்கி, துருவிய மஞ்சள்பூசணி சேர்க்கவும். பிறகு, ஏலக்காய்த்தூள் தூவி, பொடித்த பச்சைக் கற்பூரம், துருவிய வெல்லம் சேர்த்துக் கலக்கவும். விருப்பப்பட்டால், பொடியாக நறுக்கிய முந்திரியைத் தூவலாம்.



பொட்டுக்கடலை மாவு உருண்டை

தேவையானவை:

பொட்டுக் கடலை மாவு - ஒரு கப், ஏலக் காய்த்தூள் - ஒரு சிட்டிகை, பனங் கற்கண்டு - கால் கப், முந்திரி துருவல் - 2 டேபிள்ஸ்பூன், தேங் காய்ப் பால் - தேவையான அளவு.

செய்முறை:

பொட்டுக்கடலை மாவுடன் ஏலக்காய்த்தூள், பனங் கற்கண்டு, முந்திரி துருவல் சேர்த்து... தேங்காய்ப் பால் விட்டுப் பிசைந்து, உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

இந்த மாவு உருண்டை, குழந்தை களின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் கொண்டது.


பழம் - பனீர் யோகர்ட்

தேவையானவை:

தோல் சீவி நறுக்கிய அன்னாசிப்பழம் - 3 டேபிள்ஸ்பூன், கொழுப்பு நீக்கப்பட்ட தயிர் (ஸ்கிம்ட் யோகர்ட் - ரெடிமேடாக சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும்) - ஒரு கப், துருவிய பனீர் - சிறிதளவு, மாதுளை முத்துகள் - 3 டேபிள்ஸ்பூன், அன்னாசி எசன்ஸ் - ஒரு துளி.

செய்முறை:

நறுக்கிய அன்னாசிப்பழம், மாதுளை முத்துகளை தயிருடன் சேர்த்து, பனீர் துருவல் போட்டுக் கலக்கவும். ஒரு துளி அன்னாசி எசன்ஸை கடைசியாகச் சேர்க்கவும்.



கொத்தமல்லி - புதினா மசாலா பொரி

தேவையானவை:

பொரி - ஒரு கப், நறுக்கிய கொத்தமல்லி - அரை கப், நறுக்கிய புதினா - கால் கப், கறிவேப்பிலை - சிறிதளவு (நறுக்கவும்), பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), சிறிய சதுரமாக நறுக்கிய மாங்காய் - 2 டேபிள்ஸ்பூன், சாட் மசாலாத்தூள்- ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு சிட்டிகை, எலுமிச்சை பழம் - அரை மூடி, உப்பு - சிறிதளவு.

செய்முறை:

நறுக்கிய புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலையைபொரியில் சேர்த்து, நறுக்கிய வெங்காயம், மாங்காய் சேர்த்து... உப்பு, சாட் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் தூவிக் கிளறவும். கடைசியாக, எலுமிச்சைச் சாறு கலந்து பரிமாறவும்.

விருப்பப்பட்டால்... ஓமப்பொடி (கார வகை), தட்டை, பொரித்த கார்ன் ஃப்ளேக்ஸை ரெடிமேடாக வாங்கி கலந்தும் சாப்பிடத் தரலாம்.


முளைகட்டிய பயறு சாலட்

தேவையானவை:

முளைகட்டிய பச்சைப் பயறு, முளைகட்டிய கறுப்பு கொண்டைக்கடலை, முளைகட்டிய காராமணி (சேர்த்து) - ஒரு கப், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), மிளகாய்த்தூள் - ஒரு சிட்டிகை, இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், எலுமிச்சை பழம் - அரை மூடி, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

முளைகட்டிய பயறு வகைகளுடன்... உப்பு, மிளகாய்த்தூள், நறுக்கிய வெங்காயம், இஞ்சித் துருவல், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து வைத்தால்... சத்தான சாலட் தயார்.


சுக்கு பானகம்

தேவையானவை:

வெல்லத் துருவல் - 2 டேபிள் ஸ்பூன், தண்ணீர் - ஒரு கப், ஜாதிக்காய் பொடி, ஏலக்காய்ப் பொடி, சுக்குப் பொடி - தலா ஒரு சிட்டிகை, பச்சைக் கற் பூரம் - கடுகளவு.

செய்முறை:

வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடி கட்டவும். கொடுக்கப்பட்டுள்ள பொடி வகைகளை வெல்லக் கரைசலில் சேர்த்து, பொடித்த பச்சைக் கற்பூரத்தை போட்டு, நன்கு ஆற்றி பருகவும்.

சுவையான, மணமான, இந்த பானகம் உடனடி எனர்ஜி தரும்.


பழப் பச்சடி

தேவையானவை:

ஆப்பிள் - பாதி, துருவிய தேங்காய் - ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன், வாழைப்பழம் - ஒன்று, கெட்டித் தயிர் - ஒரு கப், உலர்திராட்சை - ஒரு டீஸ்பூன், பாதாம் - முந்திரி துருவல் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய செர்ரி பழம் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய பேரீச்சை - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

ஆப்பிளை தோல் சீவி துருவிக் கொள்ளவும். வாழைப் பழத்தை வட்டமாக நறுக்கவும். கடைந்த கெட்டித் தயிரில் சர்க்கரை சேர்த்து, கொடுக்கப்பட்டுள்ள மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த் துக் கலக்கினால்... மிகச் சுவையான பழப் பச்சடி ரெடி.

சர்க்கரைக்குப் பதில் துருவிய வெல்லம் சேர்த்தும் செய்யலாம்



தினை உருண்டை

தேவையானவை:

தினை மாவு - ஒரு கப், வெல்லத் துருவல் - கால் கப், காய்ந்த திராட்சை, பாதாம் துருவல் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், தேன் - தேவையான அளவு.

செய்முறை:

தினை மாவுடன் வெல்லம், திராட்சை, பாதாம், தேங்காய் அனைத்தையும் சேர்த்துக் கலந்து, தேன் ஊற்றிப் பிசையவும். மாவை சிலிண்டர் வடிவில் சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

நார்ச்சத்து மிகுந்த உணவு இது.


காய்கறி பர்கர்

தேவையானவை:

பர்கர் பன் - 2 (பேக்கரியில் கேட்டு வாங்கிக் கொள்ள வும்), குடமிளகாய், தக்காளி - தலா ஒன்று, பெரிய வெங்காயம் - 2, கறுப்பு, வெள்ளை எள் (சேர்த்து) - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி - இஞ்சி - பச்சை மிளகாய் - உப்பு சேர்த்து அரைத்த சட்னி - ஒரு டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

பன்னை இரண்டாக நறுக்கவும். ஒருபுறம் வெண்ணெய், மறுபுறம் அரை டேபிள்ஸ்பூன் கொத்த மல்லி சட்னி தடவவும் (உட்புறத்தில்). அதன் நடுவே பொடியாக நறுக்கிய குடமிளகாய், பெரிய வெங்காயம், தக்காளி ஆகியவற்றை 2 டேபிள்ஸ்பூன் எடுத்து வைக்கவும். பன்னை மூடவும். அதன் மேல் சிறிது வெண்ணெய் தடவி, கறுப்பு, வெள்ளை எள் தூவி பரிமாறவும். மற்றொரு பன்னையும் இதேபோல் செய்யவும்.



உலர்பழம் - கோதுமை ரொட்டி அடுக்கு

தேவையானவை:

கோதுமை பிரெட் - 3 ஸ்லைஸ், மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம் - தேவையான அளவு, நறுக்கிய செர்ரி பழம், காய்ந்த திராட்சை, பதப்படுத்திய அத்திப்பழம் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - தலா ஒரு டீஸ்பூன், உடைத்த பாதாம், பிஸ்தா, முந்திரிப் பருப்பு, அக்ரூட் (சேர்த்து) - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

ஒரு பிரெட் ஸ்லை ஸில்... செர்ரி, அத்திபழம், காய்ந்த திராட்சையை வைக்கவும். மற்றொரு ஸ்லைஸில் உடைத்த பாதாம், பிஸ்தா, அக்ரூட், முந்திரிப் பருப்பு ஆகியவற்றை வைக்கவும். மற்றொரு ஸ்லைஸில் மிக்ஸ்டு புரூட் ஜாம் தடவவும். 3 ஸ்லைஸ்களையும் ஒன்றன்கீழ் ஒன் றாக அடுக்கி, நடுவே வெட்டி பரிமாறவும்.


பப்பாளிப்பழக் கூழ்

தேவையானவை:

பப்பாளிப்பழம் - ஒன்று (நன்றாக பழுத்தது), மாதுளை முத்துகள் - கால் கப், உலர் திராட்சை - 50 கிராம், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை:

பப்பாளிப்பழத்தை தோல் சீவி நறுக்கி, மிக்ஸியில் அரைக்கவும். இந்தக் கூழில் மாதுளை முத்துகள், காய்ந்த திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும்.

சத்தான இந்தக் கூழ், மலச்சிக்கலை குணப்படுத்தும்.



ஊட்டச்சத்து பழ பானம்

தேவையானவை:

தர்பூசணி - அரை பழம், புதினா - சிறிதளவு, டைமண்ட் கற்கண்டு - ஒரு டீஸ்பூன், நெல்லிக்காய் துருவல் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

தோல் சீவி நறுக்கிய தர்பூசணியுடன் சிறிதளவு புதினா இலை, கற்கண்டு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதனுடன் நெல்லிக்காய் துருவல் கலந்து பருகவும்.

வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த பானம், ரத்த விருத்திக்கு நல்லது.


சிவப்பு அவல் - காய்கறி பிரியாணி

தேவையானவை:

சிவப்பு அவல் - ஒரு கப், முள்ளங்கி துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், முட்டைகோஸ் துருவல், கேரட் துருவல் - தலா கால் கப், தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்), நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், ஃப்ரெஷ் பச்சைப் பட்டாணி - கால் கப், மிளகு - சீரகப் பொடி - ஒரு டீஸ்பூன், தேங்காய்ப் பால் - தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

தேங்காய்ப் பாலில் சிவப்பு அவலை 10 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு, காய்கறிகளை சேர்த்து... உப்பு, மிளகு - சீரகப் பொடி சேர்த்துக் கிளறி பரிமாறவும்.


கோதுமைப் பால்

தேவையானவை:

முழு கோதுமை - 100 கிராம், தேங்காய் - அரை மூடி, அச்சு வெல்லம் - 2.

செய்முறை:

முதல்நாள் இரவே கோதுமையை ஊற வைத்துவிட வேண்டும். அடுத்த நாள் இதை மிக்ஸியில் அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும். தேங் காயை துருவி மிக்ஸியில் அடித்து தேங்காய்ப் பால் எடுத் துக் கொள்ளவும். இரண்டு பாலையும் வடிகட்டி, ஒன்றாக கலந்து கொள்ளவும். அச்சு வெல்லத்தை பொடித்து நீர் விட்டு வடிகட்டி, அதை பாலுடன் சேர்த்து நன்கு ஆற்றி அருந்தவும்.


ஓட்ஸ் அவியல்

தேவையானவை:

ஓட்ஸ் - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், முந்திரி - 6 பச்சை திராட்சை - 15, மாதுளை முத்துகள் - கால் கப், தயிர் - ஒரு கப், மிகவும் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

ஓட்ஸை மிக்ஸியில் ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும். இதை பாதி தயிரில் 15 நிமிடம் ஊற வைக்கவும். பச்சை மிளகாய், தேங்காய் துருவல், முந்திரியுடன் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். இதை ஊற வைத்த ஓட்ஸில் சேர்த்து, மீதி தயிரையும் சேர்த்துக் கலந்து வைக்கவும். நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லியை அதனுடன் சேர்க்கவும். கடைசியாக, பச்சை திராட்சை, மாதுளை முத்துகள் சேர்த்து, கிண்ணத்தில் போட்டு ஸ்பூன் போட்டு, சாப்பிடக் கொடுக்கவும்



கலர்ஃபுல் அவல் உப்புமா

தேவையானவை:

அவல் - ஒன்றரை கப், கேரட் துருவல், பொடி யாக நறுக்கிய தக்காளி, நறுக்கிய கொத்தமல்லி, தேங்காய் துருவல் - தலா அரை கப், வெள்ளை மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று (மிகவும் பொடியாக நறுக்கவும்), பனீர் துருவல் - கால் கப், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

அவலை நீரில் 10 நிமிடம் ஊற வைத்து எடுத்து, மூன்று பாகமாக பிரித்துக் கொள்ளவும். கேரட் துருவல், பொடியாக நறுக்கிய தக்காளியை ஒன்று சேர்த்து, இதை ஒரு பாகம் அவலுடன் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் மிளகுத்தூள், சிறிதளவு உப்பு சேர்க்கவும்.

தேங்காய் துருவல், பனீர் துருவல், உப்பு, வெள்ளை மிளகுத்தூளை ஒன்றாக சேர்த்து, இதனை இரண்டா வது பாக அவலில் கலக்கவும். மூன்றா வது பாக அவலில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி உப்பு, நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்துக் கிளறவும்.

விருப்பமான சுவையுள்ள அவலை தனித்தனியாக சாப்பிடலாம். அல்லது, கப் அல்லது பவுலில் கீழே கொத்த மல்லி அவல், அடுத்து தேங்காய் - பனீர் அவல், அதன்மேல் கேரட், தக்காளி அவலை வைத்து அழுத்தி... கீழே கவிழ்த்தால், கலர்ஃபுல் அவல் உப்புமா ரெடி.


சௌசௌ தயிர் பச்சடி

தேவையானவை:

தோல் சீவி துருவிய சௌசௌ - 2 டேபிள்ஸ்பூன், துருவிய வெள்ளரி - 2 டேபிள்ஸ்பூன், வெங்காயம் - ஒன்று (நீளமாக நறுக்கவும்), கொத்தமல்லித் தழை - சிறிதளவு, கெட்டித் தயிர் - ஒரு கப், முந்திரிப் பருப்பு - 4 (நீரில் 15 நிமிடம் ஊற வைக்கவும்), தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

முந்திரி, தேங்காய் துருவலை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கெட்டித் தயிரை கடைந்து, அரைத்த விழுதைச் சேர்க்கவும். சௌசௌ, வெள்ளரி, வெங்காயத்தைப் பிழிந்து இதனுடன் சேர்த்து, உப்புப் போட்டு கலக்கவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையை மேலே தூவி பரிமாறவும்.


காய்கறி ஊறுகாய்

தேவையானவை:

மாங்காய், கேரட்- தலா ஒன்று, சின்ன வெங்காயம் - 8 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எலுமிச்சை பழம் - அரை மூடி, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

மாங்காய், கேரட்டை சிறிய சதுரங்களாக நறுக்கவும். இவற்றுடன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து, வெங்காயத்தையும் சேர்க்கவும். மேலே எலுமிச்சை பழத்தை பிழிந்து கலக்கவும்.

இந்த ஊறுகாயை சப்பாத்தி, தயிர் சாதத்துக்கு சைட் டிஷ்ஷாக பயன்படுத்தலாம்.



பழ லஸ்ஸி

தேவையானவை:

தயிர் - ஒரு கப், சர்க்கரை - 2 டீஸ்பூன், நன்றாகப் பழுத்த கொய்யாப்பழம் - ஒன்று (சீஸனுக்கு தகுந்த பழங் களைப் பயன்படுத்தலாம்), கறுப்பு திராட்சை - 10.

செய்முறை:

கெட்டித் தயி ருடன் சிறிதளவு தண்ணீர், சர்க்கரை சேர்த்து, நறுக்கிய கொய்யாவை சேர்த்து மிக்ஸி யில் அடிக்கவும். இதில், விதை நீக்கிய கறுப்பு திராட் சையை இரண்டாக நறுக்கிப் போட்டு பருகவும்.



பச்சை வேர்க்கடலை துவையல்

தேவையானவை:

பச்சை வேர்க்கடலை - அரை கப், பொட்டுக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டு - 2 பல், பச்சை மிளகாய் - ஒன்று, முந்திரிப் பருப்பு - 4 (நீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும்), உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து அரைக்கவும்.

எல்லா வகை டிபனுக்கும் சிறந்த சைட் டிஷ் இது.


***
a vikatan
***



"வாழ்க வளமுடன்"
      

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "