...

"வாழ்க வளமுடன்"

05 ஜூலை, 2011

நாம் அறிந்ததும் அறியாததும் :)

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


எரிமலைத் தீவுகள்

எரிமலை வெடிப்புகளால் இயற்கையில் பல அழிவுகள் ஏற்படுவது போல், புதிய நிலப்பரப்புகளும் தோன்றுகின்றன. அப்படி பசிபிக் பெருங்கடலின் வடபுறத்தில் தோன்றிய மூன்று தீவுகள், எரிமலைத் தீவுகள் என்றே அழைக்கப்படுகின்றன.


ஜப்பான் நாட்டுக்குச் சொந்தமான இத்தீவுகள் ஜப்பானுக்கும் - சீனாவிற்கும் இடையே அமைந்துள்ளன. இம்மூன்று தீவுகளுள் ஒன்றில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். மற்றவை இரண்டும் மக்கள் வசிக்க ஏற்றவையாக இல்லை. இத்தீவுகளுக்கு மகலன் தீவுக் கூட்டம் என்ற பெயரும் உண்டு.


*


எஸ்பிராந்தோ


எஸ்பிராந்தோ (Esperanto) என்பது உலக அளவில் இரண்டாவது மொழியாக பயன்படுத்துமாறு போலந்து நாட்டைச் சேர்ந்த கண் மருத்துவரான லுட்விக் சமனாஃப் (Ludwing zamenhof) என்பவரால் கி.பி. 1887 - ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட செயற்கை மொழி ஆகும்.

இம்மொழியிலுள்ள பெரும்பாலான சொற்கள் லத்தீனிலிருந்து தோன்றிய ஐரோப்பிய மொழிகளிலிருந்து எடுக்கப்பட்டவை. இதன் இலக்கணம் மிக எளிதாகவும், ஒழுங்காகவும் அமைக்கப்பட்டுள்ளது.


சொற்கள் எப்படி உச்சரிக்கப்படுகிறதோ அப்படியே எழுத்துக்கூட்டி எழுதப்படுகிறது. இம்மொழிக்கு 28 எழுத்துக்கள் உள்ளன. அவை லத்தின் எழுத்துக்களைப் போல் ஒரு உச்சரிப்பு கொண்டும், ஆங்கில எழுத்துகளின் வரிவடிவத்தையும் கொண்டு விளங்குகிறது.


நூற்றுக்கும் மேற்பட்ட இதழ்கள் இம்மொழியில் வெளிவருகின்றன. 50,000 க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

1980 - இல் உலகளாவிய எஸ்பிராந்தோ கழகம் (Universal Esperanto Association - UEA) என்ற அமைப்பு நிறுவப்பட்டது.


*


உறுமி



உறுமி என்பது இடைப்பகுதி சுருங்கிய இருபக்கங்களை உடைய இசை தோற்கருவி ஆகும். இதன் இரு முனைகளும் அகன்றிருக்கும். பம்பை என்னும் கருவியைவிட சிறிது நீளமானது.

இக்கருவியின் பக்கங்களில் அடித்து ஒலியை உண்டாக்குவது கிடையாது. மாறாக, ஒன்றரை அடி நீளமுள்ள வளைந்த குச்சியை இடது கையில் பிடித்து கருவியின் இடது பக்க தோலில் மேலும், கீழும் தேய்த்து ஒலியை ஏற்படுத்துகின்றனர்.


இது விலங்கு உறுமுவதைப் போன்ற ஒலியை உண்டாக்குகிறது. உறுமியுடன் நாதஸ்வரமும், சிறுபம்பையும் சேர்த்து வாசிக்கப்படும் பொழுது உறுமி மேளம் என்னும் பெயர் பெறுகிறது.

உறுமி மேளம் சவ ஊர்வலத்தில் பெரும்பாலும் பயன்படுத்தப் படுகிறது. மங்கள சடங்குகளில் இது இடம்பெறுவது இல்லை. சில சமயங்களில் இக்கருவியை வாசித்துக் கொண்டே கால்களில் சலங்கை கட்டிக்கொண்டு ஆடுகின்றனர். ஆட்டங்காட்டப் பழக்கிய பெருமாள் மாட்டுடன் செல்லும் பிச்சைக்காரர்களும் இக்கருவியை இசைப்பர்.



*


ருக்மினிதேவி அருண்டேல்



தலைசிறந்த பரதநாட்டிய கலையரசியான ருக்மினிதேவி (Rukmini Devi) கி.பி. 1904 - ஆம் ஆண்டு பிப்ரவரி 29 - ஆம் நாள் பிறந்தார். இவரது பெற்றோர் நீலகண்ட சாஸ்திரி, சேசம்மாள் ஆவர். இவர் தம் 16 - ஆம் வயதில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டாக்டர். அருண்டேல் (Dr. G. S. Aruntale) என்பவரை திருமணம் செய்துகொண்டார். ருக்மினிதேவியும், அருண்டேலும் ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் செய்தபோது ரஷ்ய பெண்மணியான அன்னா பாவ்லோவா என்ற அம்மையாருடன் தொடர்பு ஏற்பட்டது.

பாவ்லோவா மேனாட்டு நடனமேதை, அவர் ருக்மினி தேவியை நடனம் கற்றுக் கொள்ளத் தூண்டினார். அதன்படி முதலில் பாவ்லோவாவின் பாலே நடனக் குழுவில் சேர்ந்து பாலே நடனத்தைக் கற்றார். பின்னர், பரதநாட்டியத்தைக் கற்றார். உயர்ஜாதி பெண்கள் நாட்டிய கலையில் நாட்டம் கொள்ளாத அக்காலத்தில் ருக்மினி தேவி அக்கலையைப் பயின்று புரட்சி செய்தார்.

பின்னாளில் இவர் நாட்டியப் பள்ளியைத் துவக்கியபோது இவரது மருமகளான இராதா பர்னியர் தான் முதல் மாணவி. ஏறத்தாள 20 நாட்டிய நாடகங்களைத் தமிழ், தெலுங்கு, வடமொழி, வங்காளி ஆகிய மொழிகளில் இயற்றி அரங்கேற்றியுள்ளார்.

1936 - ஆம் ஆண்டு சென்னை அடையாறிலிருந்த பிரம்மஞான சங்க நிலையத்தில் சென்னை கலாஷேத்திரம் என்னும் நுண்கலை அமைப்பினை உருவாக்கினார். பின்னாளில் பெரும் புகழ்பெற்ற நாடகக் கலைஞர்கள் பலரை இந்த அமைப்பு உருவாக்கியது. பரதநாட்டிய கலையில் ருக்மினிதேவி பல ஆய்வுகளைச் செய்து அக்கலைக்கு ஆக்கமும், ஊக்கமும் தந்தார்.

1952 - ஆம் ஆண்டு நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக நேரு இவரை நியமித்தார். இவரது பதவிக் காலத்தில் விலங்குகள் வதை செய்யப்படுவதைத் தடுக்கும் சட்ட முன்வரைவு ஒன்றினை மேலவையில் கொண்டுவர வழி செய்தார். இவருடைய தொண்டுகளைப் பாராட்டும் விதமாக இந்திய அரசு பத்ம பூஷன் விருதினை வழங்கியது. மத்திய பிரதேச அரசு காளிதாசர் சன்மானம் என்னும் விருதினையும், ஆசிய சங்கம் இரவீந்திரநாத தாகூர் நூற்றாண்டு விழாப் பட்டயத்தையும், வழங்கின.


அமெரிக்காவிலுள்ள வெயின் பல்கலைக்கழகமும், காசி இந்துப் பல்கலைக்கழகத்தின் மகிளா மகாவித்தியாலயம் என்னும் கல்லூரியும் முனைவர் பட்டமும், மேற்கு வங்காள விஸ்வபாரதி பல்கலைக்கழகம் தேசிகோத்தம் என்னும் விருதினையும், பிரிட்டானியா கழகம் விக்டோரியா அரசியார் வெள்ளிப் பதக்கத்தையும் அளித்து இவரை பெருமைப்படுத்தின.

ருக்மினிதேவி அருண்டேல் 1986 - ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 - ஆம் நாள் தம் 82 - ஆம் வயதில் காலமானார்.




*



ஆஸ்கார் விருது

ஆஸ்கார் (Oscar) எனப் பரவலாக அறியப்படும் அகடமி விருதுகள் அமெரிக்காவில் திரைத்துறைக்கு வழங்கப்படும் மிக முக்கிய விருதாகும். இவ்விருதுகள் கி.பி. 1929 - ஆம் ஆண்டு மே 16 - ஆம் நாள் முதல் வழங்கப்பட்டு வருகின்றன.

இதை அமெரிக்காவின் அகடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட் & சயின்ஸ் என்ற நிறுவனம் வழங்குகிறது. சிறந்த திரைப்படம் எனத் தொடங்கி, சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பம், இசை, ஒளிப்பதிவு மற்றும் சிறந்த பிறமொழி திரைப்படம், சிறந்த குறும்படம் என பலப் பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.


மேலும், உலகிலேயே அதிக அளவில் தொலைக்காட்சி மூலம் பார்வையிடப்படும் விருது வழங்கும் விழா இதுவாகும். இதன் அதிகாரப்பூர்வத் தளம் www.oscars.org ஆகும்.



***
நன்றி அமுதம்
***





"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "