இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
இனிய நிலா பாரதி... பெயருக்கு ஏற்ப இனிமையான குழந்தை. ஒன்றரை வயதான அந்தக் குட்டி செல்லம் அடம் பிடிக்காமல் சாப்பிடும்; சரியான நேரத்தில் தூங்கும். அவளைப் பார்க்கிற எல்லாரும், 'இந்த வயசுல எப்படி சமர்த்தா இருக்கா பாருங்க...' என்று ஆச்சர்யப்படுவார்கள். அவளின் மாமா மகன்... அருண்மொழிவர்மன், எல்.கே.ஜி. படிக்கும் அழகுப் பையன். ஆனால் எதற்கெடுத்தாலும் அழுது ஆர்ப்பாட்டம் செய்து, நினைத்ததைச் சாதிக்கும் முரட்டுக் குழந்தை. 'இதைச் செய்யாதே' என்றால், அதைத்தான் சிரத்தையாக செய்வான்.
'ஏன் இப்படி குழந்தைகள் முரண்படுகிறார்கள் குணத்திலும், பண்பிலும்?'
ஒரு குழந்தையின் பண்பும், ஒழுக்கமும் அதன் ஒரு வயதிலிருந்தே ஆரம்பிக்கிறது என்பது ஆச்சர்யம்தானே?! அந்த வயதிலேயே, 'எனக்கு சாக்லேட்தான் பிடிக்கும், பிஸ்கட் கொஞ்சம்கூட பிடிக்காது' என்பது போன்ற விருப்பங்களையும், விருப்ப மின்மைகளையும் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள். 18 மாதங்களான ஒரு குழந்தை... இடம், பொருள், ஏவல் பார்த்து தன் குணத்தையும் செய்கைகளையும் தீர்மானித்துக் கொள்கிறது என்கிற உண்மையைப் பெற்றோர்கள் உணர்ந்தால், ஒப்புக் கொண்டால்... குழந்தையின் பண்புகளை வார்த்தெடுக்க முடியும்!
ஒரு குழந்தையின் நடத்தை இரண்டு வகைப்படும். ஒன்று... வீட்டுக்குள் உருவாக்கப்படும் நடத்தை. மற்றொன்று... சமூகத்தால் உருவாக்கப்படும் நடத்தை. ஒரு குழந்தை மற்றவர்களுடன் எப்படிப் பழகுகிறது, பேசுகிறது, மற்றவர்களை எப்படி மதிக்கிறது போன்ற பல விஷயங்களை உள்ளடக்கியது... சமூக நடத்தை. முழுக்க முழுக்க அம்மா, அப்பா, உறவுகள் என அதன் சுற்றுப்புறத்தை சார்ந்தே அமைவது... வீட்டுக்குள்ளான நடத்தை. மரபணுக்களின் ஆதிக்கம்... குணம், நடத்தை போன்ற விஷயங்களில் அதீதமாக இருக்காது; சுற்றுப்புறம்தான் அதனை அதிகம் பாதிக்கிறது.
ஒரு குழந்தை.... சாப்பிடுதல், தூக்கம், இயற்கை கடன் கழித்தல், ஆடை உடுத்துதல் போன்ற அடிப்படை விஷயங்களில் ஒழுக்கமாகவும், நேர்த்தியாகவும் இருப்பதற்கான அடிப்படை... அதன் வீட்டில்தான் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும்; குழந்தையும் அங்குதான் கற்றுக்கொள்ளும்.
1 - 4 வயதில் குழந்தை வைத்திருக்கும் பெரும்பாலான அம்மாக்களின் புலம்பல்... 'எம்பொண்னு சாப்பிடவே மாட்டேன்றா' என்பதுதான். இதில் எத்தனை அம்மாக்கள், தாங்கள் குடும்பத்தோடு சாப்பிடும்போது, குழந்தைக்கும் ஒரு தட்டில் சாப்பாடு வைத்து, 'சாப்பிடும்மா...' என்று கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்?
மடியில் வைத்து ஊட்டிவிடுவதை பெரும் வேலையாகவே செய்துகொண்டு இருந்தால்... அக்குழந்தைக்கு சாப்பாட்டு விஷயத்தில் ஒழுங்குமுறை வராது. மாறாக, சாப்பாட்டின் மீது வெறுப்பு வரும்... சாப்பாட்டுத் தட்டையே தட்டிவிடவும் செய்யும். இதையெல்லாம், 'பேட்டல் ஓவர் பிளேட்' (ஙிணீttறீமீ ஷீஸ்மீக்ஷீ ஜீறீணீtமீ) என்கிறது மனவியல் மருத்துவம்.
அப்படியானால் இப்பிரச்னையை எப்படிக் கையாள்வது?
வெரி சிம்பிள்! நீங்கள் உட்கார்ந்து சாப்பிடும்போது அதற்கும் ஒரு தட்டில் சாப்பாட்டை வைத்துச் சாப்பிடப் பழக்குங்கள். 'அய்யோ... அவளா சாப்பிட்டா, எல்லாத்தையும் தரையில கொட்டி, எனக்கு வேலை வைப்பா... சாப்பாட்டை வேஸ்ட் பண்ணுவா' என்று காரணங்களை சொல்லும் அம்மாக்கள்... தன் குழந்தையின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறீர்கள் என்பதே உண்மை.
அதன் ஒழுக்கத்துக்கும் பண்புக்கும் நீங்களே முட்டுக்கட்டை போடுகிறீர்கள் என்று அர்த்தம். அதைச் செய்ய வேண்டுமா அம்மாக்களே..?
இதேபோல்தான், டாய்லெட் போகும் விஷயத்திலும். சில குழந்தைகளுக்கு இயற்கையான மலச்சிக்கல் இருக்கும். கொஞ்ச நாட்களில் அதுவாகவே சரியாகிவிடும். ஆனால், 'ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுக்கிறோம்' என்று அதற்கு இயற்கை உபாதை வருகிறதோ, இல்லையோ... 'மாலி பாப்பு, டாய்லெட் போடா செல்லம், போடா செல்லம்...' என்று தொடர்ந்து வற்புறுத்தினால், அது குழந்தையின் மனதுக்குள் ஒரு மன அழுத்தமாக அமர்ந்துகொண்டு, இயல்பான நடவடிக்கையைப் பாதிக்கும்.
எனவே, எந்தச் செயலிலும் இம்மாதிரியான வற்புறுத்தல்கள், பிரச்னையை அதிகப்படுத்தி, குழந்தையின் இயல்பான செயல்பாட்டினைக் குறைக்கும். குழந்தையின் செயல்பாட்டினை குறைப்பதும்... இயல்பாக இருக்க விடுவதும் உங்கள் கையில். உங்களின் இந்த அணுகுமுறையில் தான் குழந்தையின் ஒழுக்கமும் பண்பும் ஒளிந்திருக்கிறது!
*
குழந்தை மனநல மருத்துவர் ஜெயந்தினி
***
thanks டாக்டர்
***
"வாழ்க வளமுடன்"
0 comments:
கருத்துரையிடுக