இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
2009ல் சென்னை - வடபழனியிலுள்ள விஜயா மருத்துவமனையில் 'இதய ஆரோக்கியம்' குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. அதில், இதய நோய்கள் பற்றிய அடிப்படைத் தகவல்களையும், நமது வாழ்க்கை முறையினால் இதய பாதிப்பில் சிக்காமல் இருப்பதற்கான சாத்தியங்கள் குறித்தும் பிரபல மருத்துவர்கள் விரிவாகவே விளக்கமளித்தனர்.
அதன் முக்கிய அம்சங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு...
நம் இதயத்தை பற்றி முதலில் ஒன்றை மட்டும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இதயத்தின் பாதிப்புகளில் இருந்து சமாளிக்கத்தான் மருந்துகள் இந்த உலகில் உள்ளதே தவிர, அதை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது என்பது தான் முதல் உண்மை. என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா? ஆம்... ஒவ்வொரு மருந்தும் நமக்கு உதவிகள்தான் செய்கிறதே தவிர, போரிட்டு அந்த நோயை வெள்ள முடியாது!
பைபாஸ் சர்ஜரி, ஏன்ஜியோ பிலாஸ்ட் ஆகிய சிகிச்சைகள் நமது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சீர்படுத்துவதற்கு உதவி செய்கிறது. இதயத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலை தட்டிவிட்டோ அல்லது அந்த பாகத்துக்கு பதில் வேறு குழாயை வைப்பது என அனைத்தும் நம் இதயத்தின் ரத்த ஓட்டத்துக்கு மருத்துவர்களால் செய்யப்படும் ஒரு சிறு உதவிகள் மட்டும் தான். இதில் பேஸ்மேக்கரும் விதிவிலக்கல்ல.
ஆண்டுதோறும் ஹார்ட் அட்டாக்கில் மரணம் அடையும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. ஆசியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு ஒரு கோடி பேருக்கு மேல் மாரடைப்பால் பாதிக்கப்படுகின்றனர். ஒரு வயது முதல் 26 வயதுக்குள் இருப்பவர்களும் இந்தப் பட்டியலில் புதிதாக இணைந்திருக்கிறார்கள் என்பது வேதனையான ஒன்று. ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைக்கு இதயக் கோளாறா என்று நீங்கள் ஆச்சரியபடுவது புரிகிறது. ஆயினும், இது நமது சமூகத்தில் புதிதல்ல என்கின்றனர், மருத்துவர்கள். ஆண்டுதோறும் பல்லாயிரம் குழந்தைகள் இதய நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்பது அண்மைப் புள்ளிவிவரம்.
'30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்குத் தான் மாரடைப்பு வரும்' என்று இன்றும் பல பேர் நம்புகிறார்கள். அது முற்றிலும் தவறு. தற்பொழுது சராசரி 26 வயதுக்குள் இருப்பவர்களும் வந்துவிடுகிறார்களாம். இந்த வயது எண்ணிக்கை மேலும் குறையலாம் என்பது வருத்தத்துக்குரிய மருத்துவர்களின் புதிய கணிப்பு.
நமது ரத்தக் குழாயில் எல்.டி.டி(Low Density Lipo) தான் நமக்கு இதய நோய் தொடர்பான குறைகளை எல்லாம் அழைத்துவரும் நண்பராக இருக்கிறது. இதைக் குறைக்கத்தான் முடியுமே தவிர, முழுவதுமாக கட்டுப்படுத்த முடியாது.
இதய நோய் பிரச்னையில் மிகவும் பரிதாப நிலை கொண்டவர்கள் யார் என்றால், சர்க்கரை நோய் உள்ளவர்கள்தான். இவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தால் கூட இவர்களுக்கு தெரிவதில்லை என்பது தான் உண்மை. காரணம்..? சர்க்கரை நோய் தாக்கியவர்களுக்கு நரம்புகள் பலகீனமடைவதால், அவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும்பொழுது வலி அதிக அளவில் இருக்காது. எதேச்சையாக பலவீனம், தலைசுற்று என்று பக்கத்தில் இருக்கும் மருத்துவர்களிடம் செல்லும் பொழுது மருத்துவருக்கு சந்தேகம் வந்து, இ.சி.ஜி. எடுத்துப் பார்க்கும்பொழுதுதான் அவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டுள்ளது என அறிய முடிகிறது என்பது வேதனையான உண்மை. ஆகையால், சர்க்கரை நோய் உள்ளவர்கள் சற்றுக் களைப்படைந்தாலும் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
சாதாரண மனிதர்கள் 6 மாதம் முதல் 1 வருடம் வரை ஒரு முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதுவே சர்க்கரை நோய் தாக்கியவர்களாக இருப்பின், கண்டிப்பாக 2 அல்லது 3 மாததுக்கு ஒரு முறை கட்டாயம் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
ஒவ்வொரு மனிதனும் தன் குடும்பத்துக்கான ஒரே மருத்துவரை தேர்ந்தெடுத்து, அவரிடமே சிகிச்சை செய்து கொள்வது மிக மிக அவசியம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
எளிமையான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால்... நமது உடலில் கெட்ட ரத்தம் (Bad Blood), நல்ல ரத்தம் (Good Blood) என இரண்டு வகையாக ரத்தத்தை மருத்துவ நிபுணர்கள் பிரித்துக் கூறுகிறார்கள். உதாரணமாக, நமது கையின் மேல் இருக்கும் கருப்பான நரம்புகள் அனைத்தும் கெட்ட ரத்தத்தைதான் கொண்டு செல்கின்றது. இதை நீங்கள் தொட்டுப் பார்த்தால், உங்களால் ஒன்றுமே அரிய முடியாது. இந்தக் கெட்ட ரத்தம் முழுக்க முழுக்க குறைந்த அழுத்தம் (Low Pressure) வகையை சேர்ந்ததால் தான் உங்களால் இதன் தன்மையை உணர முடியா நிலை ஏற்படுகிறது.
நல்ல ரத்தம் எங்கேதான் ஓடுகிறது என கேட்கிறீர்களா? நம் உடலில் எல்லா பாகங்களிலும் இந்த இரண்டு வகை ரத்தங்கள் சென்று வந்து தான் கொண்டிருக்கிறது. நம் கை உள்ளங்கை கீழே இருக்கும் நரம்பின் இடையில் ரத்த ஓட்டத்தை தொட்டுப் பார்த்தால் இதன் துடிப்பை நீங்கள் நன்றாக உணரலாம். இதற்கு காரணம் இந்த ரத்த நரம்புகள் உயர் அழுத்தத்தை (High Pressure) சேர்ந்ததுதான். உங்கள் காய்ச்சலுக்கு டாக்டர்கள் உங்கள் கையைப் பிடித்து பல்ஸ் பார்ப்பதை அறிந்திருப்பீர்கள். அவர் உங்கள் கையைப் பிடித்துக் கொண்டு மற்றொரு கையில் இருக்கும் வாட்சைப் பார்ப்பார். இத்தனை வினாடிக்கு இத்தனை துடிப்புகள் என கணக்கு வைத்து உங்களின் உடலில் இருக்கும் எதிர்ப்புச் சக்தி எவ்வளவு என்பது முதற் கொண்டு நன்கு அறிந்து, அதற்கு தகுந்த மருந்துகளை கொடுப்பதும் இந்த நல்ல ரத்தம் ஓட்டத்தை வைத்துதான்.
ஒரு மனிதனுக்கு சராசரி உயர் ரத்த அழுத்தம் 120/80 இருக்க வேண்டும். வயதுக்கேற்ற வகையில் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், 40 வயதிலும் இதே அளவு இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இந்த வயத்துக்குப் பிறகு ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.
நீங்கள் நடக்கும்பொழுது அதிகமாக மூச்சு வாங்கினாலோ அல்லது உங்கள் கண்கள் தலையை சுற்றுவது போன்று ஒரு உணர்வு ஏற்பட்டாலோ நீங்கள் உங்கள் உடலை முழுவதுமாக பரிசோதனை செய்து கொள்வது மிக மிக அவசியம். (நடந்து கொண்டிருக்கும் போதே திடீர் இதய பாதிப்பால் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கீழே விழுந்து ஏற்படும் மரணம் இப்போது அதிகரித்துக் கொண்டிருப்பதைக் கவனத்தில் கொள்க.)
இயன்றை வரையில் நெய் வகை இனிப்புகளை சுவைப்பதைத் தவிருங்கள். ஐ.டி. முதலிய துறைகளைச் சேர்ந்தவர்கள் நொறுக்குத் தீனியாக இனிப்பை மிகுதியாக சாப்பிடுவதால், எல்.சி.டி. கொழுப்பு அதிகரித்து, வயது வித்தியாசமினிறி இதயம் பலகீனமாக்கும் மாரடைப்பு ஏற்பட காரணமாகிறது.
"நானெல்லாம் காலையில் எழுந்ததும் வாக்கிங் பொயிடுவேன். அப்பறம் தான் உடற்பயிற்சி," என்று அதிகாரமாக சொல்பவராக நீங்கள் இருந்தால்.... அது நோ யூஸ்! காலையில் எழுந்ததும் சிறிது வார்ம் அப் செய்ய வேண்டும். முதலில் தலையில் ஆரம்பித்து, அடுத்து தோள்கள், முக்கியமாக இடுப்பை முன்பும் பின்புமாக நன்றாக வளைத்து, இறுதியாக நமது பாதங்களுக்கு சிறு பயிற்சி கொடுத்த பிறகுதான் ஜாகிங் அல்லது வாக்கிங் செய்யவேண்டும். இப்படி செய்தால்தான் நீங்கள் நினைத்த மாதிரி உடலை கட்டுக்கோப்பாக வைக்கவும் முடியும். இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.
அதிகாலையில் எழுந்ததும் சுடச்சுட பால் ஆடையுடன் பாலோ அல்லது டி, காபி குடிக்கும் நபராக இருந்தால், தயவு செய்து அதை மறந்துவிடுங்கள். எருமைப் பாலை விட பசும்பால் குடிக்கலாம் அல்லது புரதச்சத்து குறைந்த பாலை தேர்ந்தெடுத்துப் பருகலாம். எதை குடித்தாலும் பாலாடையை எடுத்துவிட்டு, சற்று தண்ணீர் நிலையில் இருக்கும் பாலை குடிப்பதுதான் நல்லது. இதில் 18 வயது வரை இருப்பவர்கள் மட்டும் விதிவிலக்கு அளிக்கலாம்.
பைபாஸ் சர்ஜரி செய்து கொண்டவர்கள் உட்கார்ந்த நிலையில் சில பயிற்சிகளை செய்யலாம். 3 மாதம் பிறகுதான் மற்ற பயிற்சிகளை செய்ய வேண்டும். உடலை வளைப்பது, குனிவது போன்ற பயிற்சிகளை உங்கள் மருத்துவர் ஆலோசனைப்படிதான் நடந்து கொள்ள வேண்டும்.
ஹார்ட் சர்ஜரி செய்து கொண்டவருக்கு சலிப்பிடித்து இருமல் ஏற்பட்டால், இதயத்தில் சிறு கணம் கொண்ட தலையனையை இதமாக அனைத்துக் கொண்டுதான் இரும வேண்டும். அதேநேரத்தில், அதிகப்படியாக 1 கிலோ அல்லது 1 லிட்டர் கணத்தைத்தான் தூக்க வேண்டும். கண்டிப்பாக பயணம் மேற்கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இவை அனைத்தும் சர்ஜரி முடிந்து, 3 மாதங்களுக்கு மட்டும்தான். 6 மாதம் வரை சரியாக கடைபிடித்துவிட்டால் உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட்!
அசைவ பிரியர்களுக்கு மீன் மட்டும் தான் இதயத்துக்கு பலம் கூட்டும் சக்தியாக இருக்கிறது. அதற்காக, எண்ணெய்யில் பொறித்த மீன்களை அள்ளி சாப்பிடுவதும் தவறு. குழம்பு மீன்களை பிளேட் பிளேட்டாக உள்ளே தள்ளுவதும் தப்பு. வாரம் இரண்டு முறை ஒரு மனிதன் 100 கிராம் அளவில் தான் மீன் உண்ண வேண்டும்.
வீட்டில் ஒரே எண்ணெய்யை சமைப்பதும் முற்றிலும் தவறு என்று கூறும் மருத்துவர்கள் நல்லெண்ணை, கடலெண்ணை, மற்றும் தேங்கா எண்ணையை சரி அளவில்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். எண்ணையை பாட்டிலுடன் சாய்த்து உபயோகப்படுத்துவதற்கு பதில் டீஸ்பூன்களில் தேவைக்கு ஏற்ப பயன்படுத்துவதே சிறந்தது.
கொள்ளூ ரசம் மற்றும் அன்னாச்சிபழம் நம் இதயத்துக்கு உற்ற நண்பர்கள். இவற்றை வாரம் 2 தடவை சுழற்சி முறையில் சாப்பிடுவது மிகவும் நல்லது. அதே போல் வெந்தயம், ஆரேஞ்சு பழங்கள் மற்றும் எலுமிச்சை பழங்களும் எடுத்துக் கொள்ளலாம்.
"ஹலோ சார் நான் இதை எல்லாம் கரெக்டா செய்கிறேன், இதனுடன் டிரெட்மில்லில் தினமும் ஒரு மணி நேரத்தில் 10 கிலோமீட்டர் சூப்பரா வேர்க்க வேர்க்க ஓட்டம் எடுப்பேன்," என்று மார்தட்டி சொல்கிறீர்களா?
சோ சாரி சார்... ஒரு மணி நேரத்துக்கு 6.5 கிலோமீட்டர் தான் உங்கள் நடை பயணம் இருக்க வேண்டும். அதுவும் நீங்கள் 35 வயதுக்குள் இருந்தால் தான் வெயிட்களை தூக்கி பழகலாம். 35 கடந்தவர்கள் வெறும் நடைபயிற்சி மற்றும் ஓட்டத்துடன் நிறுத்திக் கொள்வது நல்லது.
அதிகபடியான மகிழ்ச்சி மற்றும் துக்கங்களில் நம்மை நாமே ஆழ்த்திக் கொள்வது மிக மிக தவறு. எப்போதும் சாதாரண மனநிலையிலேயே இருக்க வேண்டும். எதிலும் 'டேக் இட் ஈஸி' பாலிஸிதான் பெஸ்ட்!
"ஹய்யோ எனக்கு பைபாஸ் சர்ஜரியா?!" என்று எல்லோரையும் திகிலில் ஆழ்த்தாதீர்கள். தற்பொழுது பச்சிளம் குழந்தைக்குக் கூட இதை சர்வசாதாரணமாக நடைபெற்று வெற்றி வாகை சூடிய மருத்துவர்கள் முக்கிய நகரங்களில் இருக்கிறார்கள்.
35 வயதுக்குள் இருக்கும் ஒருவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டால், அவரது தொடையோ அல்லது கால் முட்டியின் கீழோ இருக்கும் நரம்புகள் எடுத்து இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை சரி செய்திருப்பார்கள். அதனால் காலின் முட்டி முதல் உள்ளங்கால் வரை கட்டுகள் போட்டிருப்பார்கள். அதை அலட்சியமாக விட்டு விடுவதும் நல்லது அல்ல. 3 முதல் 6 மாதம் வரை காலுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும்.
நம் முன்னோர்கள் சரியான நடைபயிற்சி, துணி துவைப்பது, வீட்டை மொழுகுவது, மாவாட்டுவது, நேரம் தவறாமல் உண்டது, அந்த உணவுகளை சரியாக மென்று உண்பது ஆகியவற்றால் தான் திடமாக இருந்தார்கள். அதனால், எந்த பிரச்னையை அவர்களால் எளிதில் சமாளிக்க முடிந்தது. அது மனப்பிரச்னையாக இருந்தாலும் சரி, சங்கடத்தை கொண்டதாக இருந்தாலும் சரி அவர்களை அதிகமாக பாதித்தது இல்லை.
ஆனால் இன்றோ... இதை நாம் எதை முழுமையாக செய்கிறோம்? அதிவேக உலகமாகிவிட்டது. எதிலும் வேகம், அவசரம். நில்லுங்கள் சற்று சிந்தியுங்கள்.
கண்டிப்பாக குடி மற்றும் புகைப் பிடிக்கும் பழக்கத்தை முதலில் முழுவதுமாக கைவிட வேண்டும். இது அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு மட்டுமல்ல; அனைவருக்கும் பொருந்தும். இவ்விரண்டும் தான் இதய பாதிப்புக்கு முக்கியக் காரணிகளில் முன்னிலை வகிப்பவை.
அதேபோல், மூன்று விஷயத்தை தவிர்த்துவிடுவது இதய ஆரோக்கியத்துக்கு நல்லது. அவை... கறி (Meat), ஹர்ரி Hurry & ஸ்கேரி (Scary).
***
thanks வை.பாலாஜி
***
"வாழ்க வளமுடன்"
0 comments:
கருத்துரையிடுக