இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
அன்ன நடை... சின்ன இடை... என பெண்களின் ஆரம்பகால நடை அழகு எல்லாம் நடையைக் கட்டிவிட்டது. செருப்புக்கு கீழே ஸ்டூல் வைத்த மாதிரி ஹை ஹீல்ஸ் அணிந்துகொண்டு 'பூனை வாக்’ போவதுதான் இப்போதைய ஃபேஷன்!
''பூனை வாக் பார்ப்பதற்கு அழகாகத்தான் இருக்கும். ஆனால், ஹை ஹீல்ஸ் காலணிகளால் ஏற்படும் பாதிப்பு களையும் மனதில் கொள்ள வேண்டும்!'' என்கிறார் சென்னையைச் சேர்ந்த எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை மற்றும் பாத சிகிச்சை நிபுணரான டாக்டர் ராஜா!
'அழகு என்றால், கூடவே ஆபத்தும் இருக்கத்தானே செய்யும். அதை எல்லாம் நாங்க ஒரு கை பார்த்துடுவோம்ல' என்று இளமைத் துள்ளலில் இந்த எச்சரிக்கையை அலட்சிய மாகக் கடக்க வேண்டாம். டாக்டர் விரிவாகப் பேசுவதைக் கேட்டுவிட்டு, ஹை ஹீல்ஸுக்குள் காலைச் செருகுங்கள் பார்க்கலாம்!
''ஃபேஷன், பர்சனாலிட்டி வசதிக்காகத்தான் பெண்கள் ஹீல்ஸ் அணிகிறார்கள். ஆனால், அது அவர்களுக்கு வசதியாகவும், ஆபத்து இல்லாமலும் இருக்க வேண்டியது முக்கியம் அல்லவா! பொதுவாக, ஒன்றரை இன்ச் அளவுக்குக் கீழ் உள்ள ஹீல்ஸைப் பயன்படுத்தலாம். இதனால் பாதிப்புகள் இருக்காது. அதற்கு மேல் அணியும்போதுதான், உடல் அவதிகள் வரிசை கட்டும்.
ஹை ஹீல்ஸின் பாதிப்பு, நம் நடையின் இயல்பான சாயலையே மாற்றிவிடும். நார்மலாக பெண்களின் இடை, 'எஸ்' வடிவ வளைவுடன் இருக்கும். ஆனால், தொடர்ந்து ஹீல்ஸ் அணிபவர்களுக்கு அந்த வளைவின் அழகு மாறும். இடுப்புத் தசைகள் இறுகுவதுடன், கால் முட்டி முன்பக்கமாக வளைந்து காணப்படும்!'' என்று புறத்தோற்ற மாறுதல்களை விளக்கியவர், உள் பாதிப்புகளைத் தொடர்ந்தார்.
''நம் பாதம்... முன்பகுதியான 'ஃபோர் புட்’, நடுப்பகுதியான 'மிட் ஃபுட்’ மற்றும் பின் பகுதியான 'ஹைண்ட் ஃபுட்’ என மூன்று பகுதிகள் ஒருங்கிணைந்தது. காலணி அணியும்போது முன் பகுதி நன்றாக அசைக்கக்கூடிய வகையிலும், நடுப்பகுதி நல்ல சப்போர்ட்டுடனும், பின் பகுதி வசதியாகவும் காலணிக்குள் பொருந்த வேண்டும். முக்கியமாகப் பாதத்தின் ஆர்ச் பகுதியை நன்றாகப் பிடித்துக் கொள்ளும்படி இருக்க வேண்டும். அப்போதுதான் உடம்பின் எடையை பாதம் பேலன்ஸ்டாக தாங்க வசதியாக இருக்கும். ஆனால், ஹை ஹீல்ஸ் அணியும்போது மொத்த உடல் எடையில் 75 சதவிகிதம் முன் பாதத்தில் இறங்கிவிடும். அதனால் முன் பாதத்தில் ஆணிக்கால், காய்ப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். மேலும், குதிகால் பாதிப்புடன் ஆடுதசை பகுதியும் இறுக்கமாகலாம்.
தொடர்ந்து ஹை ஹீல்ஸ் பயன்படுத்தும்போது, முழங்கால் மூட்டின் உள் பகுதியான 'மீடியல் கம்பார்ட்மென்ட்’-ல் தேய்மானம் ஏற்படும். ஒரு கட்டத்தில், முழங்கால் மூட்டில் தேய்மானம் அதிகமாவதுடன், முதுகுப் பகுதியிலும் எலும்பு தேய வாய்ப்புகள் அதிகம். அதன் விளைவுகள்... உடல் இயக்கத்தையே சிரமப்படுத்தும்.
மொத்தத்தில் பார்ட்டி, ஃபங்ஷன் என்று ஓரிரு மணி நேரம் வரை ஹீல்ஸ் அணியலாம். தவறு இல்லை. டெய்லி யூஸ் என்றால், பத்து மில்லி மீட்டர் உயரம் கொண்ட ஃப்ளாட் செப்பல்களே பெஸ்ட்!'' - தீர்க்கமாகச் சொல்கிறார் டாக்டர் ராஜா.
'காலுக்குப் பத்தாத செருப்பை கழட்டி எறி!’
- பாட்டிகள் அடிக்கடி சொல்லும் இந்தப் பழமொழியுடன் முடிக்கலாம்தானே இந்தக் கட்டுரையை!
***
டாக்டர் ராஜா சொல்லும் டிப்ஸ்
காலணிகள் வாங்கும்போது, மாலை நேரத்தில் வாங்குவதுதான் நல்லது. இது என்ன புதுக்கதை என்கிறீர்களா? காரணம் இருக்கிறது. காலையில் இருந்து வேலை, விளையாட்டு என்று ஓடிக்கொண்டே இருக்கும் நமக்கு, மாலையில் பாதத்தின் சுற்றளவு ஒரு இன்ச் வரைகூட கூடியிருக்கும். எனவேதான் இந்தப் பரிந்துரை.
ஷூக்களை டிரயல் பார்க்கும்போது, அவற்றின் முன் பகுதியில் நம் கை கட்டைவிரல் அகலத்துக்கு இடைவெளி இருக்கிறதா... கால் விரல்களை நன்றாக அசைக்க முடிகிறதா... ஷூவின் பின்பக்கம் பாதத்தினை அழுத்தாமல், அதேசமயம் அணைத்தவாறு இருக்கிறதா என்றெல்லாம் சரிபார்க்க வேண்டும்.
சாக்ஸ் வாங்குவதிலும் கவனம் தேவை. நம் நாட்டின் வெப்பநிலைக்கு காட்டன் சாக்ஸ் அணிவதுதான் நல்லது. லெதர், ரப்பர், பிளாஸ்டிக் சாக்ஸ்களுக்கு வியர்வையை உறிஞ்சும் தன்மை இருக்காது. விளையாட்டு துறையில் இருப்பவர்கள் 'திக் சாக்ஸ்’ அணியலாம். சரியான உடல்வாகு உள்ளவர்கள் 'தின் சாக்ஸ்’ அணியலாம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு ஆடுசதை வரை அழுத்தும் 'சீம் சாக்ஸ்’ ரத்த ஓட்டத்தை பாதிக்கும் என்பதால், கணுக்காலுடன் முடியும் 'சீம்லெஸ் காட்டன் சாக்ஸ்’ தேர்ந்தெடுக்கலாம். ஸ்போர்ட்ஸ் நபர்கள் கட்டாயமாக 'சீம் சாக்ஸ்’ அணிய வேண்டும்.
***
இளம் கல்லுரி பெண்கள் அளிக்கும் டிப்ஸ்
தங்களின் ஹை ஹீல்ஸ் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள் இவர்கள்...
சிந்து (மாடல்) :
''ஒரு பார்ட்டிக்காக மூன்றரை இன்ச் பாயின்ட்டட் ஹீல்ஸ் போட்டுட்டுப் போனேன். காலையில இருந்து சாயங்காலம் வரை ஒருவித அசௌகரியத்தோடயே இருந்தேன். வீட்டுக்கு வந்தா, கால் வலி உயிர் போயிடுச்சு. வெதுவெதுப்பான நீர்ல ஒத்தடம் கொடுத்தாங்க அம்மா. மறுநாள் டாக்டர்கிட்ட போயும், ஒருவாரம் கழிச்சுதான்தான் சரியாச்சு வலியும் வீக்கமும். அன்னியோட ஹீல்ஸுக்கு சொல்லிட்டேன் பெரிய 'பை'!''
*
அருட்செல்வி
(தொகுப்பாளினி, மக்கள் தொலைக்காட்சி):
''நான் மீடியம் ஹைட் ஹீல்ஸ் போடுவேன். என் ஃப்ரெண்ட் ஒருத்தி ஹை ஹீல்ஸோட பஸ்ல ஏறி தடுக்கி விழுந்து அடி, அவமானப்பட்டதை பார்த்ததில் இருந்து ஹீல்ஸை சுத்தமா விட்டுட்டேன்.''
*
நிவேதா சீனிவாசன்
(மருத்துவக் கல்லூரி மாணவி, சென்னை):
''நான் ரெகுலராவே ஹீல்ஸ் யூஸ் பண்ணினேன். ஆரம்பத்துல ஒண்ணும் தெரியலை. போகப் போக கால் வலி, மூட்டு வலி, முதுகு வலி பிரச்னைகள் படுத்துச்சு. ஆனாலும், என்னால ஹீல்ஸ் க்ரஷ்-ஐ விட முடியலை. அவுட்டிங்-க்கு மட்டும் போடறது, ஃபங்ஷனுக்கு மட்டும் போடறதுனு இப்போ கொஞ்சம் கொஞ்சமா ஹீல்ஸ் பழக்கத்தை கஷ்டப்பட்டு குறைச்சுட்டு இருக்கேன்!''
***
thanks அவள் விகடன்
***
"வாழ்க வளமுடன்"
0 comments:
கருத்துரையிடுக