...

"வாழ்க வளமுடன்"

27 ஏப்ரல், 2011

''சிரிங்க... சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க!''

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


பிரியா ஆனந்தின் ஃபிட்னெஸ் ரகசியம் ( புகைப் படத்துக்கும் இவருக்கும் சம்மந்தம் இல்லை )

*

'சீனியர் ஜூனியர் ஸ்டார்’ எனப் பட்டம் கொடுக் கலாம் டைட்டிலில். பால்யம் மாறாத சிரிப்பில் சிணுங்குகிறார் பிரியா ஆனந்த். 'புகைப்படம்’ படத்தில் மனசுக்குள் 'ஃப்ளாஷ்’ அடித்தவர், 'வாமனன்’ படத்தில் இன்னும் ஈர்த்தார். '180’ படத்தில் பிஸியோ பிஸியாக இருந்தவரைப் பிடித்தேன்...

''செம ஸ்மார்ட்டா இருக்கீங்களே... ஏகப்பட்ட பயிற்சிகள் பண்ணுவீங்களோ?'' என வியப்புக் காட்டினால், 'ஒன்றுமே இல்லை!’ என்பதுபோல் உதடு பிதுக்குகிறார்.

''சின்ன வயசுலயே யோகா கத்துக்கிட்டேன். வீட்ல ஹெல்த் சம்பந்தமான விஷயங்களில் ரொம்ப ஆர்வமா இருப்பாங்க. அதனால், சாப்பாடு தொடங்கி உடற்பயிற்சிகள் வரை உடல் மீதான அக்கறை அதிகம். ஆனால், இப்போ நான் உடலுக்காக எந்தப் பயிற்சிகளும் பண்றது கிடையாது. சமீப காலமா யோகாவையும் கைவிட்டுட்டேன். காரணம், இந்த சின்ன வயசுல உடம்பைப் பெரிசா வருத்தாமல் இருக்கிறதே, பெரிய பயிற்சிதான். ஷூட்டிங் நேரங்களில், காலையில் 4.30 மணிக்கு எழுந்தால்... இரவு தூங்க எப்படியும் 11 மணி ஆகிடும். ஏதோ மெஷின் மாதிரி உடம்பைப் போட்டு பிழிஞ்சு எடுக்கிறோம். கிடைக்கிற ஓய்வு நேரங்களிலும் வசனங்களைப் பேசிப் பார்க்கிறது, நடிப்புக்கு ஹோம் வொர்க் பண்றதுன்னு பிஸி. இத்தனைக்கு மத்தியில் ஜிம், யோகான்னு உடம்பைப் படுத் தினால், நிச்சயம் உடம்புக்கு எந்த நல்லதும் நடக்காது. அதனால், என் பயிற்சி முறைகளையே முழுக்க மாத்திட்டேன்.

ஃப்ரெண்ட்ஸோட வெளியே கிளம்பி, ஆட்டம் பாட்டம், அரட்டைன்னு பொழுதைக் கழிக்கிறது. பீச்சுல வியர்க்க விறுவிறுக்க விளையாடுறதுன்னு மனசை உற்சாகப்படுத்தும் விஷயங்களையே உடம்புக்குமான பயிற்சிகளாகவும் ஆக்கிக்கிட்டேன். எனக்கென்னவோ வாய்விட்டு சிரிச்சாலே மனசும் உடம்பும் பஞ்சுபோல ஆகிடும்.

யோகாவிலேயே சத்தம் போட்டுச் சிரிக்கிறது ஒரு பயிற்சி. ஒவ்வொரு முறையும் வாய்விட்டுச் சிரிக்கிறப்ப, அடி வயிறு தொடங்கி மூளை நரம்புகள் வரை பலம் பெறும்னு சொல்வாங்க. ஆனால், யார்கிட்டயும் பேசாம, சிரிக்காம, உடம்பை மெஷினா மாத்தி பயிற்சிகளை மட்டும் பண்றோம். பயிற்சிகளை முறையாப் பண்ணினப்பகூட எனக்கு இந்த அளவுக்கு உடலும் மனசும் லேசாகலை. ஆனால், இப்போ காத்துல மிதக்கிற மாதிரி மனசு முழுக்க சந்தோஷம், உடம்பு முழுக்க உற்சாகம்!'' சுலப வழி சொல்லி பிரமிக்கவைக்கிறார் பிரியா ஆனந்த்.

''பீச்சுக்குப் போறப்ப, அங்கே என்னென்ன விளையாட்டுகள் விளையாட முடியுமோ... எல்லாமே விளையாடுவேன். ராட்டினத்தில் சுற்றுவேன், குழந்தைகளைத் தூக்கிட்டு ஓடுவேன். அலையில் கரைக்கு வந்து விளையாடும் நண்டுகளை என்னிக்காவது நீங்க துரத்திப் பிடிச்சு இருக்கீங்களா? மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஓடினாலும் அதைப் பிடிக்க முடியாது. ரொம்ப ஜாலியா உடலின் அத்தனை பாகங்களுக்கும் வேலை வைக்கும் விளையாட்டு அது!'' குஷியாகச் சிரிக்கிறார் பிரியா.

''சாப்பாடு விஷயம் எப்படி?'' என்று கேட்டால், ''நான் பிரியாணி பிரியை. சென்னையில் இருந்தால், தலப்பாகட்டி... ஹைதராபாத்தில் இருந்தால், பாரடைஸ்னு... ரசிச்சு ருசிச்சு பிரியாணி சாப்பிடுவேன். மூணு வேளையும் பிரியாணி கிடைச்சால்கூட, எனக்கு ஓ.கேதான். இதுதானே நல்லா சாப்பிடுற வயசு. 40 வயசுல நாமே ஆசைப்பட்டாலும், விரும்பியதைச் சாப்பிட முடியுமா? பீச் சுண்டல் தொடங்கி சோளம் வரை எல்லாமே எனக்கு இஷ்டம்தான்.



இவ்வளவுக்குப் பிறகும், நான் இப்படி ஸ்லிம்மா இருக்கக் காரணம்... என் துறுதுறு கேரக்டர். என்னைக் கட்டிப்போட்டு வெச்சாலும், ஒரு இடத்தில் பத்து நிமிஷத்துக்கு மேல் இருக்க மாட்டேன். ஏதாச்சும் ஒரு வேலை செஞ்சுக்கிட்டே இருப்பேன். ஒரு மணி நேரம் உட்காரவெச்சிடுறாங்கன்னு நான் அதிகமா பியூட்டி பார்லருக்குப் போறதே இல்லை. ரொம்ப நேரம் நான் ஒரு இடத்துல உட்கார்ந்திருக்கேன்னா... அது நிச்சயம் தியேட்டராத்தான் இருக்கும்!''

''அழகுக்கு?''

''எப்போதாவது ஃபேஸியல். நிறையத் தண்ணி குடிப்பேன். ஜாலியா டான்ஸ் ஆடுவேன். நிம்மதியாத் தூங்குவேன். எப்பவுமே சிரிச்சுக்கிட்டே இருப்பேன். நீங்க திட்டுனாக்கூட சிரிப்பேன். அப்புறம் நீங்களும் சிரிச்சிடுவீங்க. அதனால, எல்லோருக்கும் நான் சிரிச்சுக்கிட்டே சொல்றது... சிரிங்க... சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க!''



***
நன்றி ஆனந்த விகடன்
***



"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "