...

"வாழ்க வளமுடன்"

24 ஏப்ரல், 2011

உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1 :)

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


உங்கள் வீட்டு செல்லக் குட்டி, சர்க்கரைக் கட்டியின் அழகுப் பேச்சு, அந்தப் பேச்சைக் கற்றுக்கொள்ள அதற்கு உதவும் மொழியறிவு... இவை இரண்டும் குழந்தையின் வளர்ச்சிக்கு மிக முக்கியம் என்பதை ஒரு பொறுப்பான பெற்றோராக பல தருணங்களில் உணர்ந்திருப்பீர்கள்.




உண்மைதான்... அந்தப் பேச்சும், மொழியறிவும்தான் உங்கள் குழந்தையின் படிப்பையும் வாழ்வியல் பண்பையும் செழுமைப்படுத்தும் உரம்! அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பேச்சையும், மொழியறிவையும் எப்படி வளர்ப்பது என்ற அவசியக் கேள்வி, உங்களுக்கு எழுகிறதுதானே?!



உங்கள் குழந்தை இந்த அழகு பூமியில் கால் பதித்த பிறகுதான் மொழியைக் கற்றுக் கொள்கிறது என்று நினைத்து இதுவரை நீங்கள் செயல்பட்டு இருந்தீர்கள் என்றால், அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். குட்டிப் பாப்பா உங்கள் கருப்பையில் உருவான 28-ம் வாரத்திலேயே நீங்கள் பேசும் மொழியை, வார்த்தைகளை, அந்த ஒலிகளை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்துவிடும்; ஆச்சர்யம்தானே இது?!


என்னிடம் வந்த ஓர் அம்மா, ''என் கைக்குழந்தை, நான் ராகவேந்திரர் சுலோகம் சொல்லும்போது உன்னிப்பாகவும் குஷியாகவும் கவனிக்கிறான். வேறு ஏதாவது சுலோகம் சொல்லும்போதோ, பாட்டுப்பாடும் போதோ அந்த அளவுக்கு உற்சாகம் இல்லை. இது ஏன் டாக்டர்?'' என்று கேட்டார்.


''ராகவேந்திரர் சுலோகத்தை எப்போது இருந்து சொல்கிறீர்கள்?'' என்றேன்.

''அவன் வயிற்றில் இருந்தபோதிலிருந்து வாய்விட்டு சொல்லிக் கொண்டிருப்பேன்'' என்றார்.

இதுதான் காரணம்! அந்த மந்திரம்... குழந்தையின் மூளையில் இருக்கும் 'வெர்னிக்கஸ்’ (Wernicke's) பகுதியில் ஏற்கெனவே பதிவாகி இருப்பதால்தான், அதன் ஒலியும், வார்த்தைகளும் அதற்கு பரிச்சயமானதாக இருப்பதால்தான் அதை மீண்டும் கேட்கும்போது குழந்தை ரொம்ப சந்தோஷமாகிறது. நம் முன்னோர்கள், 'பெண்கள் கர்ப்பக் காலத்தில் சந்தோஷமாக இருக்க வேண்டும், நல்லவற்றையே பேச வேண்டும், சிந்திக்க வேண்டும், இனிய இசையைக் கேட்க வேண்டும்' என்று சொல்லி வைத்திருப்பது அதனால்தான். அறிவியலும் இதையே ஆமோதிக்கிறது!


கருவிலிருக்கும் குழந்தையின் மொழி வளர்ச்சியை இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள். அடுத்து, பிறந்த குழந்தைக்கு எப்படி அறிமுகப்படுத்துவது மொழியை..? குழந்தையுடன் பேசிக்கொண்டே இருப்பதுதான் அதன் மொழி வளர்ச்சிக்கான இரண்டாவது வழி.



குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டும்போதிலிருந்தே நீங்கள் அதை ஆரம்பித்துவிடலாம். 'குழந்தை அது பாட்டுக்கு பால் குடிக்குது... நாம பாட்டுக்கு டி.வி. சீரியலைப் பாக்கலாம்’ என்று கடமைக்காக பால் புகட்டாமல், அதன் முகம் பார்த்து ஏதாவது பேசலாம், கொஞ்சலாம், கற்பிக்கலாம். அதுதான் குழந்தையை அழகாகவும், அன்பாகவும், உண்மையான வளர்ச்சியோடும் வளர்க்கும் விதம்.



இரண்டு வயது வரையிலான குழந்தைகளின் கூட்டத்தை உற்றுப் பாருங்கள். அவர்களில் நன்றாகப் பேசும் குழந்தைகள் என்று சிலரைப் பொறுக்கி எடுத்து கவனித்துப் பாருங்கள்... அந்தக் குழந்தையிடம் வீட்டில் இருப்பவர்கள் சாப்பாடு ஊட்டும்போது, குளிக்க வைக்கும்போது, தூங்க வைக்கும்போது என எல்லா சந்தர்ப்பங்களிலும் பேசிக்கொண்டே இருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும். அப்படி நீங்கள் செய்கிறீர்களா என்பதை ஒருமுறை சுயபரிசோதனை செய்து பாருங்கள்.


இன்னொரு முக்கிய விஷயம்... 'குழந்தையின் பேச்சுத் திறனை வளர்க்கிறேன்’ என காசைக் கொட்டி கடைகளில் பாட்டு குறுந்தகடு (சி.டி)., அனிமேஷன் கதை சொல்லும் குறுந்தகடு என வாங்கிக் குவிப்பதாலோ, அல்லது தொலைக்காட்சியைப் பார்க்க வைப்பதாலோ குழந்தையின் மொழியறிவு எந்த விதத்திலும் வளராது.



மாறாக, குழந்தையின் மொழியறிவு தடைபடும் என்பதுதான் நிஜம். காரணம், குழந்தை, தொலைக்காட்சியைப் பார்க்கும்போது, அதில் வரும் வித்தியாசமான கலர்ஸ், இங்கும் அங்கும் நகரும் உருவங்கள், நகரும்போது வரும் மாற்றங்கள், பின்னணி இசை என இவற்றைத்தான் அது கவனிக்கும்.



ஆனால்... அம்மாவோ, அப்பாவோ, வீட்டில் இருக்கும் தாத்தா, பாட்டியோ குழந்தையிடம் பேசும்போது அது 'இருவழி’ பேச்சாக இருக்கும். இதில்தான் குழந்தையின் கண் பார்த்து, முகம் பார்த்து, அதன் உடல் மொழி பார்த்து அதற்கு ஏற்றவாறு பேச முடியும். 'என் பொம்முக்குட்டி, எங்க வீட்டு ராஜாத்தி’ என்று நீங்கள் கொஞ்சும் போது... பொக்கை வாய் திறந்து குழந்தை சிரிக்கும்;




எச்சில் ஒழுக 'ங்கா.. ங்கா’ என்று தன் மழலை மொழியில் உங்கள் கொஞ்சலை ஆமோதிக்கும். அதேபோல் நீங்கள் அதன் முகத்துக்கு நேராக பேசும்போது, உங்களின் உதட்டசவை, வார்த்தை பிரயோகங்களை, கவலை, சந்தோஷம் என்ற உணர்வுகளைக் குழந்தை புரிந்து கொள்ளும்.



பொறுப்பான பெற்றோர்களே... இரண்டரை வயது குழந்தைகளுக்கெல்லாம் குறுந்தகடும், தொலைக்காட்சியும் அந்நியம். உங்கள் அன்பும், அக்கறையும், பொறுப்பும் கலந்த வார்த்தைகள்தான் குழந்தையை அறிவாளியாக, பண்பாளனாக மாற்றும் மந்திரக்கோல்.



ஸோ... கீப் ஸ்பீக்கிங்!

*

by- குழந்தை மனநல மருத்துவர் ஜெயந்தினி




***
thanks அவள் விகடன்
***





"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "