இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
இந்தியா சென்று திரும்பி வருபவர்கள் யாராக இருந்தாலும் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் மீண்டும் இந்தியா செல்வது ஏறத்தாழ தடை செய்யப்பட்டுள்ளது. இலங்கையர் என்றில்லாது,ஒட்டுமொத்தமாக சகல வெளிநாட்டவர்களுக்கும் இவ்வாறான ஒரு தடையை இந்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.
இதனை அறியாது பிரயாணம் செய்பவர்கள் இந்திய விமான நிலையத்தை அடைந்தவுடன் புதிய விதி முறைகளுக்கு உட்பட்டு பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது என்று அண்மையில் அங்கு விஜயம் செய்து திரும்பிய ஒருவர் மேலும் கூறியதாவது:
அவசர காரியங்களுக்காக இந்தியா செல்லவேண்டுமாயின் அதற்கான காரணத்தை ஆதாரத்துடன் தெரிவித்து, கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகரிடமிருந்து அனுமதியைப் பெற்றுக் கொள்ளலாம். அதற்கான கட்டணம் உண்டு. அத்துடன் இந்தியா செல்வதற்கான விசா அனுமதி யும் இருத்தல் வேண்டும். ஓரிரு நாட்களில் இவ்விசேட அனுமதியையும் பெரும்பாலும் பெற்றுக் கொள்ளமுடியும்.
இவ்வாறு இரண்டு மாதங்களுக்கிடையில் செல்வோர் இந்திய விமான நிலையங்களைச் சென்றடைந்ததும் ஒரு விசேட பதிவுக்குள்ளாக வேண்டும். அப்பதிவை நமது பாஸ்போர்ட்டைப் பார்த்து, அதிகாரிகளே செய்து கொள்வர்.
இதுவரை எல்லாம் சரி; அதிக பிரச்சினை எதுவுமில்லை.
ஆனால் விசாவும் விசேட அனுமதியும் விமான நிலையப்பதிவும் மட்டும் போதாது. நாம் செல்லுகின்ற இடத்தில் உள்ள காவல் நிலையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற மற்றொரு நிபந்தனையும் உண்டு.
இந்த நிபந்தனையை கடவுச்சீட்டில் சீலடித்து விடுகின்றார்கள். இதுதான் மிகத்தொந்தரவான விடயம், அதனால் தான் அவசரமாகச் செல்வோருக்கு அவதானம் தேவை.
காவல் நிலையப் பதிவை இலகுவாக எடுத்துக்கொள்ள வேண்டாம். மாவட்ட காவல் துறை ஆணையாளர் அலுவலகத்தில் அது ஒரு நாள் வேலை, இரண்டு, மூன்று நாட்களுக்கும் இருக்கலாம். அங்கு வேலை நடந்தாலும் பயணி தங்கி உள்ள இடத்துக்கு அருகில் உள்ள காவல் நிலைய விசாரணைக்குச் செல்ல வேண்டும்.
அவர்கள் நாம் தங்கியுள்ள வீட்டில் வந்து, உறவினர், நண்பர்களை விசாரிக்கும் சந்தர்ப்பமும் உண்டு. இறுதியில் காவல்துறையிடமிருந்து ஒரு நற்சான்றிதழைப் பெறுமுன் போதும் போதும் என்றாகிவிடும்.
தெரியாத்தனமாக வந்து விட்ட உணர்வுதான் ஏற்படும். இந்த வேலைக்கென ஐந்து ஆறு நாட்களை ஒதுக்கிக் கொள்ள வேண்டும். செலவுக்கு இந்திய ரூபாய் ஆயிரத்தை மாற்றி வைத்துக் கொள்வது அவசியம் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இவ்வளவு சிரமங்கள் உள்ளதைத் தெரிந்து கொண்டு இவற்றுக்கெல்லாம் ஈடுகொடுக்கலாம் என்றால் இரண்டு மாத இடைவெளிக்குள் இந்தியா வரலாம். 1983 கலவரங்களின் பின்னர் ஏராளமான இலங்கை வாழ் தமிழர்கள் தமிழகத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர்.
உறவினர்கள் மட்டுமன்றி பல திருமண பந்தங்களும் இருப்பதால் அவசர காரியங்களுக்காக இந்தியா சென்று வரவேண்டிய நிலை உண்டு. இவை எல்லாவற்றையும் விட தமது பாதுகாப்பு தொடர்பான அதீத கவனம் காரணமாகக் கடுமையான குடிவரவு விதிகளை இந்திய அதிகாரிகள் ஏற்படுத்தியுள்ளனர்.
இவை பற்றி முறையிடுவதால் ஏதேனும் பயனுண்டு என்று சொல்ல முடியாது. இலங்கையில் வாழ்கின்ற சகல தமிழர்களும் மைய அரசின் ஐயப்பார்வைக்கு உட்பட்டிருப்பதை எந்தசக்தியும் மாற்ற முடியாது போலத் தோன்றுகின்றது. யார் மீதோ உள்ள ஐயத்தை அப்பாவிப் பயணிகள் மீது பிரயோகித்துப் பார்ப்பது ஒரு வகையான கூட்டுத் தண்டனை என்றே கூற வேண்டும்.
மொத்தத்தில் இரண்டு மாதங்களுக்கிடையிலான அவசரப் பயணங்களை தவிர்த்துக் கொண்டு அடிக்கடி இந்தப் பக்கம் வரப்பார்க்காதீர்கள் என்பது தான் அதிகாரத்தரப்பினரின் ஆலோசனை. இதில் மனிதாபிமான அம்சங்களுக்கு எதுவித இடமில்லை. இலங்கையில் வாழ்ந்து கொண்டு இந்தியர், இந்திய வம்சாவளித் தமிழர் என்று சொல்லிக் கொள்வதெல்லாம் அதிகாரத் தரப்பினருக்கு ஒரு பொருட்டாக இல்லை.
***
thanks நண்பன்
***
"வாழ்க வளமுடன்"
0 comments:
கருத்துரையிடுக