...

"வாழ்க வளமுடன்"

03 நவம்பர், 2010

வாழ்க்கையில் மேலே உயர பதற்றம் அவசியம், அது அளவுக்கு மிஞ்சினால்......

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
வாழ்க்கையில் கொஞ்சமாவது பதற்றம் இருந்தால்தான் சரியான வகையில் செயல்படுவோம். தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டுமே என்கிற கவலை இருந்தால்தான் மாணவன் நன்கு படிப்பான்.



அதே மாணவனுக்குப் பதற்றம் மிகவும் அதிகமாக இருந்தால், தேர்வுக் கூடத்தில் வினாத்தாளைக் கையில் வாங்கியவுடன் கைகள் நடுங்க நெஞ்சு படபடக்க படித்ததையெல்லாம் மறந்து விடுவான். அதுபோல வாழ்க்கையில் மேலே உயர பதற்றம் அவசியம். ஆனால் அது அளவுக்கு மிஞ்சினால் வளர்ச்சியைத் தடை செய்துவிடும்.

*

ஒரு சிலருக்குச் சிறு வயதிலிருந்தே பதற்றப்படும், கவலைப்படும் குணம் இருக்கும். வாழக்கையில் அடிபட்டு மனம் சோர்ந்து போகும்போது, இந்தப் பதற்றம் அதிகரிக்கும். தினசரி வாழக்கையில் ஒருவரைச் செயலிழக்கச் செய்யும் அளவுக்குப் பதற்றம் அதிகரித்தால் அதை Anxiety Disorder என்பார்கள்.

*

ஏதோ கெடுதல் நடந்துவிடும் என்று மனம் எப்போதும் தவிக்கும். வெளியே சென்ற உங்கள் குடும்பத்தினர் வீடு திரும்பக் கொஞ்சம் தாமதமானால் கூட ஏதோ கெடுதல் நடந்துவிட்டதோ? என்று உங்கள் மனம் பதைத்துப் போய், ஒரே அமர்க்களம் செய்ய வைத்துவிடுகிறது.

*

வெளியே சென்றவர்கள் திரும்பி வரத்தாமதமானால் கவலை வருவது இயற்கைதான். கெடுதலாக எதுவும் நடந்திருக்காது என்று உறுதியாகச் சொல்ல முடியாதுதான். ஆனால் விபத்து நடந்திருக்கலாம் என்பதை விட நடந்திருக்காது என்பதில்தான் சாத்தியக்கூறு அதிகம்.

*

ஏனெனில் சாலையில் செல்பவர்களில் பெரும்பலானோருக்கு விபத்து நடப்பதில்லை ஆனால் உங்கள் மனம் பதற்றப்படும் சுபாவத்தின் காரணமாக குறைவான சாத்தியக் கூறு உள்ள ஒரு விஷயத்தை நடந்து விட்டதாகவே நம்பி பதறுகிறது.

*

இதுதான் Anxiety Disorder. இந்தப் பதற்றம் உங்களைச் செயலிழக்கச் செய்வதோடல்லாமல், சுற்றி உள்ளவர்களையும் பதற்றமடையச் செய்யும். இந்த மாதிரி பிரச்சினை உள்ள ஒரு தாயின் மகள், தன் தாய் கவலைப்பட்டு அவஸ்தைப்படுவார் என்பதற்காக, தான் வெளிநாட்டுக்குப் படிக்கச் செல்வதையே நிறுத்திவிட்டாள்.

*

ஆண்மகன் ஒருவர் தொலைபேசி மூலம் இருமுறை கெட்ட செய்திகள் வந்ததால், தொலைபேசி ஒலிக்கவே கூடாது என்று எடுத்து வைத்துவிடுவார். இவர்கள் பிரச்சினைகளில் அமிழ்ந்து விட்டவர்கள்.

*

சிறு பொறியாக வரும் எதிர்மறை எண்ணங்களை ஊதி, ஊதிப் பெரிதாக்கி விடாமல் முளையிலேயே கிள்ள வேண்டும். ஏனெனில் எண்ணங்கள்தான் வார்த்தைகளாகி, செயலாகி, நடத்தையாக மாறுகின்றன. எண்ணங்கள் பாஸிட்டிவ்வாக மாறினால், செயல்கள் மாறி நடத்தையில் பதற்றம் குறையும்.


*

இதைச் செயல்படுத்த எப்போதும் நல்ல எண்ணங்களை மனதில் விதையுங்கள். அவை முளைக்கும்போது புதிதாகப் பிறக்கும் எதிர்மறை எண்ணங்கள் ஓடிவிடும். நல்ல கருத்துக்களைப் படிப்பது, கேட்பது நல்ல விஷயங்களைச் செய்பவர்களோடு இருப்பது இவை மனத்தை நல்வழிப்படுத்தும்.

*

எப்போதும் நிகழ்காலத்தில் மனம் இருக்க வேண்டும். கடந்த காலம் முடிந்துவிட்டது. அதை மாற்ற முடியாது. அதையே அசை போட்டால் வருத்தங்கள்தான் மிஞ்சும். எதிர் காலத்தில் என்ன நடக்கும் என்பது யாருக்கு தெரியாது. அது ஒரு கேள்விக்குறி.

*

அதை நினைத்துக் கவலைப்படுவது நமது நிம்மதியை குலைக்கும், நிகழ்காலம் கடவுள் கொடுத்த பரிசு என்று எண்ணி, அதைச் சரியாகக் கழியுங்கள். உங்களுக்குப் பிடித்த விஷயங்களையும் செய்யுங்கள்.

*

யோகாசனம், பிராணாயாமம், தியானம், சங்கீதம் போன்றவை மனத்தைச் சமநிலைப்படுத்தும் வலிமை கொண்டவை. உணர்வுகளின் எழுச்சியைக் குறைப்பவை. நம் நிம்மதிக்காக ஒரு நாளில் 30 நிமிடங்கள் செலவிட முடியாதா? செய்தால் பலன் நமது, பயம் நமது இல்லை.

*

சுய பச்சாதாபம், கோபம், வெறுப்பு, பொறாமை, பயம் போன்ற உணர்வுகளால் நன்மை எதுமில்லை, மாறாக, மனத்தைத் தேங்கிய குட்டையாக அவை மாற்றிவிடும். மனம் தெளிந்த நீரோடை போல கசடைக் கீழே தங்கவிட்டு, முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும்.


***

by- பிருந்தா ஜெயராமன்
மனநல ஆலோசகர், சென்னை

***
thanks மனநல ஆலோசகர்
***



"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "