இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
கிறிஸ்மஸ் என்றாலே முதலில் கண்ணுக்கு தெரிவது ‘சாண்டா’ என்னும் கிறிஸ்மஸ் தாத்தாதான். யார் இந்த கிறிஸ்மஸ் தாத்தா?
கிறிஸ்மஸ் தாத்தா இன்றைய கொண்டாட்ட விழாக்களில் ஒரு கோமாளியாகவோ, குழந்தைகளுக்குச் சிரிப்பூட்டும் ஒரு நபராகவோ, சாக்லேட் வழங்குபவராகவோ தான் இருக்கிறார். அவருடைய வாழ்வு அப்படிப்பட்டதல்ல, வாழ்வின் வெற்றிடங்களை மனிதநேயம் கொண்டு நிரப்புவதே அவருடைய பணியாக இருந்திருக்கிறது.
துருக்கி நாட்டின் மிரா நகரில் நான்காம் நூற்றாண்டில் கிறிஸ்தவ ஆயராக (பிஷப்) வாழ்ந்தவர் தான் புனித நிக்கோலஸ். மனித நேயத்தின் சின்னமாக விளங்கிய நிக்கோலஸ் தேவையானவர்களுக்கு உதவுவதையே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டிருந்தார். சிறுவயதில் வறுமையில் வாடிய நிக்கோலஸ் புதன் கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் உணவு உண்டு மற்ற நாட்களில் பட்டினியில் உழன்றிருக்கிறார்.
வறுமையின் வீரியத்தையும், ஏழைகளின் துயரையும் நேரடியாகச் சந்தித்த அனுபவம் அவரை மனித நேயவாதியாக மாற்றியது. அவருடைய வாழ்க்கையில் குழந்தைகளை அவர் அபரிமிதமாக நேசித்தார். குழந்தைகள் இருக்கும் வீடுகளில் யாருக்கும் தெரியாமல் பரிசுகளை வைப்பதை மிகவும் ஆனந்தத்துடன் செய்து வந்தார்.
அவர் ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்ட விதமே சுவாரஸ்யமானது. துருக்கியின் மிரா நகரில் ஆயராக இருந்தவர் இறந்து போக மற்ற ஆயர்கள் எல்லாம் ஒன்று கூடி புதிதாக யாரை அந்தப் பகுதியின் ஆயராக நியமிப்பது என்று ஆலோசிக்கக் கூடினார்கள். அப்போது அங்குள்ள ஆயர்களில் ஞானம் நிறைதவராக காணப்பட்ட ஒருவர், தான் இரவில் காட்சி ஒன்றைக் கண்டதாகவும் அதன்படி ஆலயத்தில் முதலில் நுழையும் நிக்கோலஸ் என்னும் பெயருடைய நபரே அடுத்த ஆயராகத் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்று அந்த காட்சியில் தெரிந்ததாகவும் சொன்னார்.
ஆயர்கள் அவருடைய வேண்டுதலை ஏற்றுக் கொண்டு செபித்தினர். மறுநாள் காலையில் முதன் முதலாக ஆலயத்தில் நுழையும் நிக்கோலஸ் என்னும் நபருக்காக அனைத்து ஆயர்களும் காத்திருந்தார்கள். நிமிடங்கள் கரைந்தன, மணிகள் கடந்தன , ஒரு இளைஞன் ஆலயத்தில் நுழைந்தான். காத்திருந்த ஆயர்கள் அவனுடைய பெயரைக் கேட்க, நிக்கோலஸ் என்றான் அவன். ஆயர்கள் ஆனந்தித்தனர் அந்த இளைஞனையே கடவுள் சுட்டிக்காட்டிய புதிய ஆயரென ஏற்றுக் கொண்டனர்.
குருவிக்குக் கூடு கட்டிக் கொடுக்க வேண்டுமென்றால் கூட தோப்புக்கே தோரணம் கட்டி அறிவிக்கும் இன்றைய சூழலிலிருந்து முற்றிலும் விலகி பணி செய்தார் நிக்கோலஸ். அவர் ஏழைகளுக்கும் வறியவர்களுக்கும் அவர்களையும் அறியாமலேயே உதவிகள் செய்வதையே வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்.
உதவி செய்வது கடவுளைத் தவிர யாருக்கும் தெரியக் கூடாது. ஏன் வலது கை தரும் தானம் இடது கைக்குக் கூடத் தெரியக் கூடாது என்பது தான் விவிலியம் தரும் போதனை. அந்த போதனையின் படி வாழ்ந்த புனித நிக்கோலஸ், ஏழைகளின் வீடுகளுக்குச் சென்று இரவு நேரத்தில் அவர்களுக்கே தெரியாமல் அவர்களுக்குத் தேவையானதை வைத்து விட்டு வந்துவிடுவார்.
அழுகையின் போர்வை போர்த்தித் தூங்கும் அந்த ஏழைகள் குதூகலப் பகலைச் சந்திக்க அந்த மனிதநேய மனிதர் செய்த செயலின் தொடர்ச்சி தான் இன்று கிறிஸ்மஸ் தாத்தாவாக வளர்ந்து நிற்கிறது.
கிறிஸ்து பிறப்பு விழா இன்று ஒரு வர்த்தகப் பெருவிழாவாக உருமாறி இருக்கும் சூழலிலும், பரிசுகள் வழங்குவதையும், வாழ்த்துக்கள் வழங்குவதையும் தன்னகத்தே கொண்டிருப்பதால் அதன் அர்த்தம் நீர்த்துப் போகாமல் இருக்கிறது. இயேசு பிறந்தபோது மூன்று ஞானிகள் அவரைத் தேடி வந்து பரிசுகள் வழங்கியதையே இந்த பரிசு வழங்குதலின் மையமாகப் பார்க்கிறது கிறிஸ்தவம்.
மேலை நாடுகளில் கிறிஸ்மஸ் மரத்தைச் சுற்றியும், கிறிஸ்மஸ் காலுறைகளுக்கு உள்ளேயும் பரிசுகளை மறைத்து வைத்து விடியற்காலையில் குழந்தைகளிடம் கிறிஸ்மஸ் தாத்தா இரவில் வந்து வைத்துவிட்டுப் போனதாகச் சொல்லி குதூகலிக்கும் குழந்தைகளின் மகிழ்ச்சியின் ஒளியில் கிறிஸ்மஸ் கொண்டாடுகின்றனர்.
புனித நிக்கோலஸைப் பற்றி பல வியப்பூட்டும் கதைகள் உலவுகின்றன. கி.பி 311 ல் மிரா நகரம் வறுமையில் தவித்தது. அப்போது அலெக்சாந்திரியாவிற்குச் சென்று கொண்டிருந்த உணவுக் கப்பல்கள் அங்குள்ள துறைமுகத்தை வந்தடைந்தன. புனித நிக்கோலஸ் சரக்கு கப்பல் பணியாளர்களிடம் சென்று மக்களுக்காக உணவு கேட்டார். அவர்களோ சரியாக எடையிடப்பட்ட உணவுகள் மட்டுமே கைவசம் உள்ளன, இதிலிருந்து ஏதேனும் எடுத்தால் அலெக்சாந்திரியா மன்னனின் கோபத்துக்கு தாங்கள் ஆளாக நேரிடும் என பயந்தனர்.
நிக்கோலஸ் அவர்களிடம், ‘கடவுளின் பெயரால் சொல்கிறேன் யாருக்கும் எதுவும் குறைவு படாது’ என்று சொல்லி தானிய மூட்டைகளை எல்லாம் இறக்கி நகரில் வினியோகித்தார். சரக்கு கப்பல் பயணிகள் மிகுந்த அச்சத்துடன் அலெக்சாந்திரியா பயணமானார்கள். அங்கு சென்று தானியக் கிடங்கைப் பார்த்தவர்கள் அதிர்ந்தார்கள். காலியாக்கப்பட்ட தானியக் கிடங்கு நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.
புனித நிக்கோலஸ் பற்றிய செய்திகள் சுமார் பதினொன்றாம் நூற்றாண்டில் தான் ரஷ்ய நாட்டில் நுழைந்தது. அவரை மக்கள் உதவியாளன் என்றே அன்புடன் அழைத்தனர்.
1087ல் புனித நிக்கோலஸின் நினைவுச் சின்னங்கள் எல்லாம் துருக்கியிலிருந்து அகற்றப்பட்டது. அவை இத்தாலியிலுள்ள பேரி நகருக்குக் கொண்டு செல்லப்பட்டன. ஐரோப்பாவில் புனித நிக்கோலஸ் பெயர் நுழைவதற்கு அது காரணமாயிற்று. துருக்கியிலிருந்து அழிந்து போகாமல் காப்பாற்றப்பட்ட அவருடைய பொருட்களைப் பாதுகாக்கும் விதமாய் பேரி நகரில் ஒரு ஆலயம் கட்டப்பட்டது. குழந்தைகள், கடலில் பயணம் செய்வோர், மீனவர் போன்றோரின் பாதுகாவலராக இவர் கத்தோலிக்கத் திருச்சபையினரால் புகழப்படுகிறார்.
மார்டின் லூத்தர் கிங் கிறிஸ்தவ மதத்திற்கு எதிராக பதினாறாம் நூற்றாண்டில் கிளர்ச்சி ஏற்படுத்தி புராட்டஸ்டண்ட் மதத்தை நிறுவியபின் புனிதர்களின் பெயர்களும், அவர்களுடைய புகழும் பெருமையும் பெருமளவுக்கு குறைந்து போயின. புனிதர்களின் சிலைகள் நொறுக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் களேபரமாய்க் கிடந்த அந்த அலையிலும் பெயர் இழக்காமல் கம்பீரமாய் நின்று நிக்கோலஸ் வெல்வதற்கு அவருடைய மனித நேயப் பணிகளே காரணம்.
டிசம்பர் ஆறாம் தியதி தான் புனித நிக்கோலஸ் தினமாகக் கொண்டாடப் பட்டு வந்தது. அன்றைய தினம் வீடுகளின் புகை போக்கி வழியாக கிறிஸ்மஸ் தாத்தா வந்து பரிசுகளைத் தந்து செல்லும் தினத்தைக் கொண்டாடுவது பதினான்காம் நூற்றாண்டுகளில் இருந்த வழக்கம். இன்றும் ஐரோப்பாவின் பல இடங்களில் புனித நிக்கோலஸ் நினைவு விழா டிசம்பர் ஐந்தாம் தியதி இரவு தான் நடக்கிறது. பரிசுகள் வழங்கும் தினமாக அந்த நாளை அவர்கள் கொண்டாடுகிறார்கள்.
ஸிண்டர் கிளாஸ் என்னும் டச் வார்த்தையின் அமெரிக்க வடிவமே சேண்டா கிளாஸ். அமெரிக்காவிற்கு வந்து குடியேறிய மக்களிடமிருந்து இந்த கிறிஸ்மஸ் தாத்தா வழக்கம் அமெரிக்காவிற்குள் குடியேறியிருக்க வேண்டும்.
பதினெட்டாம் நூற்றாண்டுவரை நினைவுகளின் இடுக்குகளிலிருந்து நிகழ்வுகளுக்கு வருடம் தோறும் வந்து கொண்டிருந்த இந்த நினைவு விழா அதன் பின் வியாபார வட்டாரத்துக்குள் விழுந்தபின் தான் பிரபலமடைந்தது. பரிசுகள் வழங்குவதும், வாழ்த்து அட்டைகள் பரிமாறுவதும், பொம்மைகள் தயாரிப்பதும் என கிறிஸ்மஸ் தாத்தாவும் பிரபலமடையத் துவங்கினார்.
1822ல் வெளியான ‘ எ விசிட் ஃப்ரம் செயிண்ட் நிக்கோலஸ்’ என்ற பாடல் ( எ நைட் பிஃபோர் கிறிஸ்மஸ் ) கிறிஸ்மஸ் தாத்தாவைப் பற்றி விளக்குகிறது. அவர் பைப் புகைத்தபடி வருவார், ஒரு பெரிய பையில் குழந்தைகளுக்காக பொம்மைகள் சுமந்து வருவார், மூக்கு செர்ரி பழம் போலவும், கன்னங்கள் ரோஜா பூ போலவும் ஜொலிக்கும், வெண்தாடி மிருதுவான பனியைப் போல அலையும் என்றெல்லாம் விவரிக்கும் இந்த பாடல் உலகப் புகழ் பெற்றதாகி விட்டது. இந்தப் பாடலே கிறிஸ்மஸ் தாத்தாவின் உருவத்தை ஒரு பொதுவான சித்தரிப்புக்கு இட்டுச் சென்றது.
கிறிஸ்மஸ் தாத்தாவுக்கு குதிரை பூட்டிய விசேஷ வண்டி ஒன்று உண்டு. நெதர்லாது, பெல்ஜியம், ஜெர்மனி மற்றும் போலந்து ஆகிய நாடுகளில் கிறிஸ்மஸ் தாத்தா வெள்ளைக் குதிரையில் வருகிறார். பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளில் கழுதை மேல் அமர்ந்து வருகிறார். நவீன யுகத்தில் சமீபத்தில் ஹெலிகாப்டரில் தாத்தா வந்திறங்கியது புதுமைச் செய்தி.
இத்தாலியில் பிஃபானா என்னும் கிறிஸ்மஸ் பாட்டி இருந்திருக்கிறார். இப்போதைய கிறிஸ்மஸ் தாத்தாவைப் போலவே குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கி மகிழ்ந்திருக்கிறார்.
நமக்குத் தெரிந்தவர்களுக்கோ, நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ பரிசுகள் வழங்குவது விழாவையோ, புனித நிக்கோலஸின் நினைவையோ அர்த்தப்படுத்தாது. யாரும் நினைக்காத ஏழைகளையும், நிராகரிக்கப்பட்டவர்களையும் பரிசு கொடுத்து அரவணைப்பதே விழாவை அர்த்தப்படுத்தும்.
விழா நாயகன் இயேசுவே சொல்கிறார் ‘உங்களை அன்பு செய்பவர்களையே நீங்களும் அன்பு செய்தால் அதனால் எந்த பயனும் இல்லை’ என்று.
***
நன்றி:சேவியர்
***
0 comments:
கருத்துரையிடுக